Saturday, February 02, 2008

சுய தரிசனம்

தானேயென நின்ற வெட்டவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பொன்னொளி கண்டு
தானும் நானும் இரண்டற ஒன்ற
நானேயென இருக்கிறேன் நான்தான்

வெளியுள் வெளியாய் இருந்த நானே
வெளியுள் ஒளியாய் விளங்கும் நானவ்
வொளியால் வெளியை அறிந்த ஞானத்
தெளிவால் இருக்கிறேன் களித்து

வெளியுள் இருந்தும் வெளியை மறந்தாய்
வெளியுள் ஒளியாய் வெளியை அறிந்தாய்
வெளியுள் ஒளியாய் ஒளிரத் தேர்ந்தாய்
வெளியுள் வெளியாய்க் கரைந்து தீர்ந்தாய்

சுயதரிசன விளக்கம்

Quote:
Originally Posted by ஆதவா
சரியா போச்சுங்க.... நான் நான் நான்னு சொல்லியே குழப்புறீங்க.... ஒண்ணும் புரியலை... கொஞ்சம் புரியர மாறி எழுதுங்களேன்....


ஆதவரே!

நீவிர் உதிப்பதற்கு முன் வெறும் இருப்பாய் வெட்டவெளியாய் சூன்யமாய் தன்னை அறியாது இருளில் இருந்ததுவே "தான்" என்பது.

நீவிர் "நான்" எனும் தன்முனைப்பாய்த் தன்னுணர்வாய், "தான்" என்ற மெய்யிருப்பின் மெய்யுணர்வாய்த் "தான்" என்ற மெய்யிருப்பில் உதித்தீர்.

பின் "இருக்கிறேன்" என்று உம் உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து பேரொளியாய்த் "தான்" என்ற அவ்வெளியெங்கும் பரவினீர்.

உம் பேரொளி பரவியதும் "தான்" என்ற பேரிருப்பு தன்னிருப்பின் விளக்கம் பெற்று "நானே" என்று தன்னில் தான் விளங்கி இருக்கிறது.

எனவே ஆதவரே! உம் இயற்பெயரே முதற்பெயரே "நான்". முழு முதல் பொருளான "தான்" தன்னை "நானே" என விளங்கியிருக்க, ஆதவராம் நீரே உதவியதால், உம் முழுமுதற் பெயரே "நானே".

ஆக ஆதவரே! உம் முழுப் பெயர் நானே. நான். ஆதவா
நானே உமது தந்தை. நான் உமது தாய்.
ஆதவா அவர் தம் ஞானக் கொழுந்து.
இதுவே அனைவரது உண்மை. கடவுளது இயற்கையுண்மை.

ஆதவரே! குழப்பம் நீங்கிப் புரிக!
நான் நான் நான்னு சொல்லி இருள் வெளியெங்கும் நல்லொளி பரப்பும் உம் கதிர்களை நன்றே அறிக!

நல்லொளி பரப்பும் இத்தவத்தை நீர் சலிவின்றி ஒழிவின்றிப் புரிவதாலேயே உம்மை ஆ தவரே! என்று யாவரும் போற்றுவர்.

ஆதவா! உம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்கி நிற்கும்
நானே. நான். நாகரா.(ந.நாகராஜன்)

No comments: