Wednesday, February 06, 2008

மெய்ப்பொருள் விளக்கம்



நான்இருக் கின்றேன்என் றிருப்பில் போய்ச்சேர
நானே என்றறியும் இருப்பு

இருப்பி லிருந்தே வந்தே நான்என்றும்
இருக்கிறேன் இருப்பிற் குள்

வெட்டவெளியாய்த் தான் தன்னை அறியாதிருக்கும் இருப்பு
நான் என்ற தன்முனைப்பு தோன்ற
இருக்கிறேன் என்று தான் தன்னை அறிந்துணர்ந்து
அத்தன்னுணர்வால்
நானே என்ற மெய்ப்பொருள் விளக்கம் பெற்று
தன்னிருப்பில்
தானே தானாக அறிந்திருக்கிறது.

இருப்பு - மெய்
நான் - (மெய்யில் தோன்றும்) பொருள்
இருக்கிறேன் - விளக்கம் (தன்முனைப்பாம் நான் தன்னுணர்வு பெற்றுத் தன் பொருள் விளங்கியிருக்கிறது)
நானே - மெய்ப்பொருள் விளக்கம் (இருப்பு தன்னில் தோன்றும் பொருளாம் நான் என்ற தன்முனைப்பை, இருக்கிறேன் என்ற தன்னுணர்வால் விளங்கப் பெற்றுத் தன்னிருப்பைத் தான் அறிந்து, தானே தானாக இருக்கும் விளக்கம்)

இருப்பு - மெய் - சத்து
நான் - பொருள் - சித்து
இருக்கிறேன் - விளக்கம் - ஆனந்தம்
நானே - மெய்ப்பொருள் விளக்கம் - சச்சிதானந்தம்

இருப்பெனும் மெய்யே சத்தாகிய அருட்தந்தை
நான் எனும் பொருளே சித்தாகிய அருட்தாய்
இருக்கிறேன் எனும் விளக்கமே ஆனந்தமாகிய அருட்குரு
நானே எனும் மெய்ப்பொருள் விளக்கமே சச்சிதானந்தமாகிய திரித்துவ ஒருமை

இருப்பாம் சத்தே மெய்யாம் உடம்பு (சிவம்)
நான் எனும் சித்தே பொருளாம் உயிர் (சக்தி)
(சக்தியின்றி சிவம் சவமே)
இருக்கிறேன் என்ற ஆனந்த விளக்கமே உயிர்மெய் ஒருமை (சிவசக்தி ஐக்யம்-சத்குரு)
நானே எனும் சச்சிதானந்த மெய்ப்பொருள் விளக்கமே உயிர்மெய் ஒருமையின் பூரண வெளிப்பாடு. நானே எனும் அப்பேருணர்வே எல்லாம் ஓருயிர், எல்லாம் ஓர்மெய் என்ற பூரண விளக்கம் பெற்று உயிர் காக்க மெய் பேணும் ஆன்ம நேய ஒருமை
"எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்"

ஒருபொருளா யுந்தான் இலாத இருப்பில்
அரும்பொருளாய் இருக்கிறேன் நான்

ஒருபொருளா யுந்தனை அறியா இருப்புந்தனைப்
பெரும்பொருளாய் அறிவழி நான்

தனையறியா இருப்புந்தான் தனையறிந்து நானேயெனத்
தனையுணர இருக்கின்றேன் நான்

சத்தானபே ரிருப்பில் சித்தாய்த் தோன்றியுஞ்
சத்தாகவே களித்துளேன் நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவிக்கும் குருமெய்யே நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவித்தே இருக்கின்றேன் நான்

பொருளற்ற பேரிருப்பில் அரும்பொருளாய்த் தோன்றியே
அருளுற்று இருக்கின்றேன் நான்

இருள்மயமாம் பேரிருப்பின் கருப்பையில் தோன்றியே
அருளொளியாய் இருக்கின்றேன் நான்

இருப்புக்கு அதன்
இருப்பை அறிவுறுத்தும்
"நான்"

இருப்பின் அறியாமையை
"இருக்கிறேன்" என்ற தன்னையறியும் அறிவாய்
இரசவாதம் செய்யும் "நான்"

இருப்புக்கு சுரணையேற்றி
"இருக்கிறேன்" என அது தன்னை அறிவிக்க
உதவும் "நான்"

இருப்பெனும் தந்தை
இருக்கிறேன் எனும் மகவாய்த் தன்னைத் தான் ஈன்றெடுக்க
உதவும் தாய் "நான்"

ஏதுமறியாது சும்மா இருந்த இருப்பை
"இருக்கிறேன்" என்று தன்னை அறியச் செய்யும்
"நான்"

இருப்பின் உறக்கம் கலைய
"இருக்கிறேன்" என்று ஓலமிடும்
"நான்"

இருப்பு மூடனை
"இருக்கிறேன்" என்று தன்னைத் தான் உணரச் செய்யும்
குரு "நான்"

இருப்பு நிர்க்குணப் பிரம்மம்
நான் சகுணப் பிரம்மம்
இருக்கிறேன் நிர்க்குண-சகுணப் பிரம்ம ஐக்யம்

இருப்பு ஆழ்ந்த உறக்கம்
நான் கனவின் சலனம்
இருக்கிறேன் பூரண விழிப்பு

இருப்பு சிவம்
நான் சக்தி
இருக்கிறேன் சிவசக்தி ஐக்ய கணபதி

இருப்பு சவத்தை
"இருக்கிறேன்" என்று உயிர்த்தெழுப்பிய
வள்ளலார் "நான்"

இருப்பு சித்தார்த்த மனிதனை
"இருக்கிறேன்" என்ற புத்த தேவனாக்கிய
போதி மரம் "நான்"

இருப்பெனும் பாலைவனத்தை
"இருக்கிறேன்" என்ற சோலைவனமாக்கிய
வீரிய விதை "நான்"

இருப்பெனும் நள்ளிரவில்
"இருக்கிறேன்" என்று ஊளையிடும்
நாய் "நான்"

இருப்புக் குழியுள்
"இருக்கிறேன்" தவமியற்றி
யுகயுகமாய் "நான்"

இருப்பு மறதிக்கு
"இருக்கிறேன்" என்ற ஞாபகமூட்டும்
"நான்"

இருப்பெனும் அருங்கேணியுள்
"இருக்கிறேன்" ஜீவனுள்ள
தண்ணீராய் "நான்"

இருப்பெனும் அறியாமையுள் ஆழப் புதைந்தும்
"இருக்கிறேன்" என்ற அறிவின் சிகரத்தில்
வாழும் "நான்"

இருப்பெனும் சிப்பியுள்
"இருக்கிறேன்" என்ற முத்தை உருவாக்கும்
தூசு "நான்"

இருப்புக் கருப்பில்
"இருக்கிறேன்" என்று வெள்ளையாய் விரியும்
புள்ளி "நான்"

இருப்பெனும் குளத்தின் அமைதியை
"இருக்கிறேன்" என்ற சலனமாய்க் கலைக்க விழும்
சிறு கல் "நான்"

இருப்பெனும் சுருண்டுக்கிடந்த பாம்பை
"இருக்கிறேன்" என்று படமெடுத்தாட வைக்கும்
பாம்பாட்டி "நான்"

இருப்பெனும் சத்தியத்தை
"இருக்கிறேன்" என்று ஆனந்ததில் திளைக்க வைக்கும்
சித்து "நான்"

1 comment:

Anonymous said...

I bow my head to this writer. This message explanation, l understood who is i am. I got many experience about divinity but true self meaning today only came to know. Thank you so much.