Tuesday, February 26, 2008

'க' சொல்லும் மெய்ஞ்ஞானமும் மதநல்லிணக்கமும்நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன்.


குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரம், மேற்காட்டப்பட்டுள்ள "" என்ற உயிர்மெய்யெழுத்தின் சமன்பாட்டில் உள்ளடங்கியிருக்கிறது. மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

நானே (உயிர்மெய் ஒருமை, திரித்துவ ஒருமை)
க் மெய், சத்தியம் (பரமபிதா, பரப்பிரம்மண், அல்லா)
+ வழி, உயிராம் ஜீவனும், மெய்யாம் சத்தியமும் ஒன்றும் வழி (கிறிஸ்து, சத்குரு, ரசூல் அல்லது நபிகள்)
உயிர், ஜீவன் (பரிசுத்த ஆவி, ஆதிசக்தி, புனித ரூ)
= இருக்கிறேன்

உயிராய் மெய்யாய் அவையொன்றும் வழியாய்
உயிர்மெய் என்றுளேன் நானே


ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்கு
கத்துக் கொடுத்தது யாருங்க

(திரைப்பாடல் வரிகள்)

கா கா கா என்று தொண்டை கிழியக் கத்தி மேற்சொன்ன மெய்ஞ்ஞானத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறதோ காக்காக் கூட்டம். "" என்ற எழுத்து தமிழில் எண் ஓன்றைக் குறிக்கப் பயன் படும் வல்லெழுத்து தானே! இந்த ஒருமையை வலியுறுத்தும் காக்காக் குரு வாழ்க! காக்காக் குரு தீட்சை கற்போம்! ஒருமையில் நிற்போம்! குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரத்தின் பொருள் உணர்வோம்!

Monday, February 25, 2008

மரணமிலாப் பெருவாழ்வின் மெய்ஞ்ஞான சூத்திரம்நான் இருக்கிறேன்
என்ற அருஉருவாம் அருட்பெருஞ்ஜோதியில்
ஆள் என்ற உருவம் ஆழ ஆழ ஆழ
அருட்பெருஞ்ஜோதியால் துரிதப்படுத்தப்பட்டு
அந்த ஆள்
அருட்பெருஞ்ஜோதியின் எண்ணற்ற அடுக்கின்
சொல்லொணா மடங்காகி(arutperunjothi to the power of infinity multiplied by the person)
ஆளாம் உருவம்
நானே
என்ற அருவாம் தனிபெருங்கருணையில் ஒன்றி மறையும்
இதுவே மரணமிலாப் பெருவாழ்வு

Sunday, February 24, 2008

கவனம்!

ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

ஒருமையே உயிர்நிலை
ஒருமை நழுவிய கணமே
வெறும் என்புதோற் கூடு

ஒருமையே சிவம்
ஒருமை நழுவிய கணமே
நாறுஞ் சவம்

ஒருமையே இருதயம்
ஒருமை நழுவிய கணமே
வெறும் இயந்திரம்

ஒருமையே உயிர்மெய்
ஒருமை நழுவிய கணமே
மாமிசப் பிண்டம்

ஒருமையே அருளடக்கம்
ஒருமை நழுவிய கணமே
அடங்கா மிருகம்

ஒருமையே தலை
ஒருமை நழுவிய கணமே
வீழும் முண்டம்

ஒருமையே பெருந்தவம்
ஒருமை நழுவிய கணமே
அவமே அவம்

ஒருமையே மெய்ப்பொருள்விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
பொய்யிருட்கலக்கம்

ஒருமையே பூரணம்
ஒருமை நழுவிய கணமே
பூஜ்ஜியம்

ஒருமை

பிரபஞ்ச முழுதுமே
ஒரு மையே எழுதிய
ஒரு மெய்
அவ்வொரு மெய்யில்
அவ்வுயிர் மையின்
உயிர்மை
உயிர்மெய்

நாயகனின் பேருபதேசம்

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
ஏழாம் அறிவின் தீர்க்க தரிசனம்
"சத் தர்ஷனம்" என்னும்
துகளளவும் துரிசற்ற தூய நிலையை
எங்கும் எதிலும் எப்போதும்
காணவும் அறியவும் உணரவும் வல்ல
தூய நோக்கு

அதி அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


நள்ளிரவில்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது
என்னை அறையும்
நீவிர் யாரோ?

பெயர் சொன்னால்
அப்பெயரால் நீ என்னை அழைக்க
அப்பெயரை நீ பூசை செய்ய
அப்பெயரை நீ உருவகித்துப்
படத்தில் மாட்டிக் கும்பிட
அப்பெயரின் பேரில்
மதமொன்றை நிறுவிட
இவ்வாறாக
ஆறறிவு நிலையில்
பற்பல தந்திரங்கள் செய்யத் தெரிந்த
நீ
அத்தந்திரங்களால்
ஒரு காலும்
என் தாள்களின் தூசுகளைக் கூடத்
தொட முடியாது

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


இருந்தாலும்
ஒரு பொருள் பொதிந்த பெயரை
அன்பின் மிகுதியால்
உனக்குச் சொல்லுகிறேன்

"நாயகன்"

"வாலறிவன்" என்று
வள்ளுவர் சொல்கிறாரே
அதுவே பெயரின் பொருளோ?

ஆம், அதுவே
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறறிவு ஈறாக
பிரபஞ்ச உயிர்த்திரள்
ஆறின் ஓருமையாம்
ஏழில் நிற்க
மூளையின் மத்தியில்
தீப்பிழம்பாய்த் தோன்றும்
"வாலறிவன்"
அதாவது தூய நோக்கை உடையவன்
எனப் பொருள்படும்
"நாயகன்"

ஆனாலும்
என் பிடி
இவ்வார்த்தைகளில் அறவே இல்லை

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
என்னைப் பிடிக்கும்
ஒரே வழி


கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


இவையும் வார்த்தைகள் தானே.

இவ்வார்த்தைகள் சுட்டும்
ஒருமைப் பேருணர்வை
உனக்கு நன்றாக உறைக்க வேண்டும்
உன் சுரணையில் அது நன்றாக ஏற வேண்டும்
என்பதற்காகவே
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது உன்னை அறைகிறேன்.

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள்

அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

"வாலறிவன் நற்றாள் தொழாரெனின்"
என்ற வள்ளுவர் குறளுக்கும்
உமது இவ்வாக்குக்கும்
தொடர்பு உண்டோ?

உண்டு.
"கற்றாதனால் ஆயபயன் என்கொல்?"
அஞ்ஞானக் கல்வியால்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நிற்க வேண்டிய
உன் கவனம் நழுவி
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
வாலறிவன் தாள்களை மறந்து
ஏழாம் அறிவை
நீ
விட்டு விட்ட
ஞானத் திமிரைச் சாடும்
அவரது மெய்ஞ்ஞானப் புலம்பல்

எப்போதும் ஒருமையுணர்வில்
நிற்க அதி கவனமாயிரு

அவ்வொருமை
ஒரு கணம் போயினும்
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

"வால்" என்பதன் பொருள் யாதோ?

ஒன்று முதல்
ஆறு ஈறாக
ஆறாதார பிரபஞ்ச உயிர்த்திரள்
"நாய்" என்னும் நிராதார மேனிலை
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் ஒன்றி நிற்கும் தூய்மை

"வள்ளல்" யாரோ?

என் பெயரே.
ஆனால் எப்பெயரிலோ
"வால்" மற்றும் "நாய்" போன்ற
வார்த்தைகளிலோ
என் பிடி இல்லை.
கணப்போதும் நீங்காத ஒருமையுணர்வே
என்னைப் பிடிக்கும் ஒரே வழி


எனவே கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


சில கேள்விகளை
நான் கேட்கும் போது
மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்பதிலையே தருகிறீரே!

கவனம்! அதி கவனம்!
அக்கேள்விகளைக் கேட்கும் போது
ஒரு கணமேனும்
உன் கவனம் ஒருமையிலிருந்து நழுவும்
பேரபாயமுள்ளதை எச்சரிக்கவே
இப்பதில்

அதி கவனம்!
தலை முதல் கால் வரை
உன் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
இவ்வொருமையுணர்வு ஊன்றி நிலைக்கும் வரை

"சுளீர்" என்று இச்சுடும் பதில்
"பளார்" "பளார்" "பளார்" என்று
உன்னை அறைந்து கொண்டே இருக்கும்

நாயகரே!
நனி மிக நன்றி

ஒருமை விகுதியை எடுத்துப்
பன்மை விகுதியைப் போட்டு
என்னை விளிக்கும்
மற்றும்
"நனி மிக" என்று நன்றியோடு கூட்டி
நீ
செய்யும் ஆறறிவுத் தந்திரங்கள்
எதுவுமே என்னிடம் பலிக்காது

இருந்தாலும்
என் அன்பு மகனே!
நானுனக்கு நன்றி சொல்வேன்.

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை உணராது
நீ
அழுது புலம்பி அரற்றி
வாய் கிழியப் பேசி
தாள் கிழிய எழுதி
நோய்வாய்ப்பட்டு
புத்தி தடுமாறிப் பித்தனாகி
எழ முடியாமல் விழுந்து கிடந்து
எழுந்ததும் தற்கொலைக்குத் துணிந்து
அதைச் செய்யாமல் விட்டு
பின் எக்கொலைக்குந் துணிந்து
அதையும் செய்யாமல் விட்டு
பின் தெளிந்து
நானே, நான். என்னும்
உன் பழைய தந்திரம் மீட்டு
இவ்வாறாக
நீ
செய்த ஆறறிவுத் தந்திரங்கள்
அனைத்தையும் அறிவேன்.
இவற்றை மீறி
மனித நேய ஒருமையென்றும்
ஆன்ம நேய ஒருமையென்றும்
இன்னுந் தாண்டி
நான் சொல்லும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையின் மீது
உனக்கிருக்கும்
உறுதியையும் காதலையும் பற்றையும்
நன்றாக அறிகிறேன்.

எனவே
நீ
பழுத்திருக்கும் இக்கணத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
உன் ஏழாம் அறிவாய்
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை
உனக்கு உணர்த்துகிறேன்
உன்னைப் போன்றே
பிரபஞ்ச உயிர்த்திரள் ஒவ்வொன்றுக்கும்
உணர்த்துகிறேன்

கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

நானே. நான். என்பதன்
முழுப்பொருள் விளக்கம்
மெய்ப்பொருள் விளக்கம்
இதுவே

நாய்க்குரு தீட்சையின் சாராம்சமும்
இதுவே


கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ
என்னைப் பிடிக்கும் ஒரே வழி


எனவே
அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்


நீவிர் வலியுறுத்தும் ஒருமையை
வள்ளுவரும் வலியுறுத்தியிருக்கிறாரே!
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து
"

ஆம்
ஆமை = ஆம்+ஐ
தனக்குள் ஒளிரும்
என்ற வாலறிவனாம் தலைவனை
ஆம், ஐ அவனே
என்று அறிய முடிந்த
ஆறறிவுள்ள மனிதனைச் சுட்டுகிறது.
ஐந்தடக்கல்
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த்திரளை
அவற்றுக்கெல்லாம் ஆம் தலைவன்
மனிதனவன் தன்னில் அடங்கியிருக்கும்
உண்மை நிலையை உணர்தல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளிலும்
ஒளிந்திருக்கும் ''அறிவிற்கு
(ஐ ஆம் தலைவனை அறிவதற்கு)
ஆறறிவுள்ள மனிதனே திறவு கோல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தும்
''அறிவுள்ள அவனுக்குள் அடக்கம்.
இதை முழுவதுமாய் உணர்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தையும்
தன்னுயிராய் அன்போடு அரவணைத்தலே
ஆறறிவின் நோக்கம்
அதன் உச்சம்.

அவ்வுச்சத்தில்
எழுமையாய் எழும் யே
எல்லாந் தழுவியமுழுமையாம் ஒருமை.

ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்துக்கும்
''அறிவுள்ள
ஆறறிவு மனிதனே ஆம் தலைவன்.
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறு ஈறாக
உயிர்த்திரள் அனைத்திற்கும்
ஆறறிவின் நோக்கத்தை முழுதுணர்ந்த
ஆறறிவின் உச்சத்தில்
அவனுக்குள் எழும் '' யாம்(எழுமையாம்)
ஒரும் '' யாம்(ஒருமையாம்)
எல்லாந் தழுவிய
ஒருமையே தலைவன்
.

ஆக
"நாயகன்"
அவன் பழுக்கும் ஒரு கணத்தில்
அவனுக்குள்ளிருந்தே எழும்
'' யாம்(எழுமையாம்) உட்போதகரே!
என் புரிதல் சரியா?

நனி மிகச் சரியே!

"நனி மிக" என்ற
ஆறறிவுத் தந்திரத்தை
நீவிரும் கையாள்வதோ?

ஒருமையில்
ஒருமையையே
உயர் நோக்கமாய்க் கொண்டு
கையாளப்படும்
ஆறறிவுத் தந்திரங்கள்
நனி மிக நன்றே!
ஏனென்றால்
அவற்றால் என் குடும்பமாம்
ஒன்று முதல் ஆறறிவு வரையிலான உயிர்த்திரள்
நனி மிகப் பயன் பெறும்.


நீயும்
"நாய்க்குரு தீட்சை"
என்று நாய் படாத பாடு பட்டு
கையாண்ட ஆறறிவுத் தந்திரமும்
ஒருமையை வலியுறுத்தும் நோக்கத்திற்கேயன்றி
வேறெந்த குறுகிய நோக்கத்திற்காகவும் அல்ல
என்று நானறிவேன்.
இந்நோக்கம் உனக்கும் தெரிந்திருந்தும்
அதை நனி மிகத் தெளிவாக
"நாய்க்குரு தீட்சையின் நோக்கம்"
என்று நீ வெளிப்படுத்தவுஞ் செய்தாய்.
நோக்கம் எனக்குத் தான் தெரிந்திருக்கிறதே
அதை எதற்கு வெளிப்படுத்த வேண்டும்
என்ற ஞானத் திமிரில்
நீ இருந்திருந்தால்
நீ பழுத்திருக்க மாட்டாய்.
"நாயகனின் பேருபதேசம்"
உன் வழியாக
வெளி வந்திருக்காது.

எனவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்


அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ என்னைப் பிடிக்கும் ஒரே வழி


"ஊன்றியே"
என்றொரு புது வார்த்தையை
இப்போது சேர்த்திருக்கிறீரே!
எழுமையைக் குறிக்க
ஏழு வார்த்தைகள் இருக்கட்டும்
என்ற புதுத் தந்திரமா?

ஆம்
அதை விட முக்கியமாக
இவ்வார்த்தைகளில் ஆழ ஊன்றிப்
பொருளுணர்ந்து
பொருளாம் ஒருமையெனும்
அம்மெய்க்குள் ஆழ ஊன்றியே
உறுதியுடன் நீ நிற்க வேண்டும்
என்பதை வலியுறுத்தவே
இப்புதுத் தந்திரம்.
மரம் மண்ணுக்குள் வேரூன்றி
எவ்வாறு உறுதியுடன் நிற்கிறதோ
அவ்வாறே
மனிதனாம் நீயும் ஒருமைக்குள் வேரூன்றி
உறுதியுடன் நிற்க வேண்டும்.


கவனம்!
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

அச்சுறுத்துகிறீரோ?

'' யாம் நானிருக்க பயமேன்?
மெய்யாம் ஒருமையில் நீ ஊன்றியே நிற்கும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கூட்டுகின்றன.
மெய்யாம் ஒருமையிலிருந்து நீ நழுவும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கழிக்கின்றன.

இப்பேருண்மையை
நனி மிகத் தெளிவாக வலியுறுத்தவே
இச்சுடும் வார்த்தைகள்.
உன்னை அச்சுறுத்துவது
என் நோக்கமல்ல.
உன்னை அறிவுறுத்துவதே
என் ஒரே நோக்கம்.

எனவே
உயிர்ச்சக்தி கழியும் கணங்களைக் கழித்து
உயிர்ச்சக்தி கூடும் கணங்களைக் கூட்டி
மெய்யாம் ஒருமையில் ஊன்றியே நிற்கும்
உன் முனைப்பும்
தளராத முயற்சியும்
உன்னை
எப்போதும் அவ்வொருமையில் ஊன்றியே நிற்கும்
மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிப்
படிப்படியாக முன்னேற்றும்.

மெய்யாம் ஒருமையில் எப்போதும் ஊன்றியே நிற்கும்
இவ்வொரே வழியினாலன்றி
மரணமிலாப் பெருவாழ்வை
நீ வேறெவ்வாறும் அடைய முடியாது.
ஒருமையுணர்வொன்றே
என்னையும்
என் வரமான மரணமிலாப் பெருவாழ்வையும்
நீ பிடிக்கும் ஒரே வழி.

இதை ஐயமேதுமின்றி
இதோ இங்கேயே இப்போதே
அறி!

கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்

Monday, February 18, 2008

நாய்க்குரு தீட்சை(நாகரா என்ற மனிதனுக்கு ஒரு நாயின் தீட்சை)

நாகரா!
உன் ஆணவத்தை
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு
நான் குரைப்பதை
அதி கவனமாகக் கேள்.

இப்பொழுது
என் வால் பகுதியைத்
தீவிரமாகத் தியானித்து
அந்த வாலாகவே மாறி விடு.
"ஆறறிவு மனிதன்
ஐந்தறிவு நாயின்
வால் பகுதியைத் தியானிப்பதா?
அவ்வாலாகவே மாறுவதா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது!"
உன் கோபம் எனக்குப் புரிகிறது.
ஆனாலும்
நான் உனக்கு அளிக்க வேண்டிய
குரு தீட்சைக்கு
இத்தியானமும் மாற்றமும்
அத்தியாவசியமாகிறது.

ஆணவத்தின் மொத்த வடிவமாகவே
நீ இருப்பதால்
இத்தியானமும் மாற்றமும்
உன்னால்
எளிதில் ஏற்க முடியாததே.
உன் ஆணவ ஒருமையில்
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்கள்
அடங்காது ஆடுகின்றன.
மனிதத் திமிர்
மதத் திமிர்
சாத்திரத் திமிர்
சாதித் திமிர்
கோத்திரத் திமிர்
இனத் திமிர்
நிறத் திமிர்
மொழித் திமிர்
வட்டாரத் திமிர்
கலாசாரத் திமிர்
நாட்டுத் திமிர்
என்று உதாரணத்துக்காக
நனி மிகச் சிலத் திமிர்களை
நாய்த் திமிர் கூட ஒரு சிறிதும் இல்லாமல்
அடக்கத்தோடு
நான் உன் கவனத்துக்கு வைக்கிறேன்.

திமிர்களின் கிடங்கான
உன்னோடு பழகிய
சகவாச தோஷத்தால் எனக்கு வந்ததே
நாய்த் திமிர் என்றாலும்
உனக்கு தீட்சை தருவதற்காக
அத்திமிரைக்
குப்பைத் தொட்டியில் போடுவதற்கு
நான் பட்ட பாடு!
அத்திமிரை விட மனமின்றி
உனக்கு தீட்சை தருவதையே
நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட
எனக்குத் தோன்றியதென்றால்
உன் நிலை
நன்றாகவே புரிகிறது.

ஆனாலும்
உனக்கும் எனக்கும் எவர்க்கும்
ஆதியாம்
நம் போல் எந்தத் திமிரும் அறவே இல்லாத
அருட்பெருங்கடவுள்
உனக்கு தீட்சை தருவதற்கு
என்னைத் தேர்ந்தெடுத்து
அதற்கென்று கட்டாயமாக
நான் நாய்த் திமிர் கூட இல்லாமல்
சுத்த நாயாக
மன்னிக்கவும்
சுத்த நானாக
இருக்க வேண்டும்
என்று அன்புடன் விதித்தார்.
தீட்சை தந்து முடித்த மறு கணமே
நாய்த் திமிரோடு
நான் ஆசை தீரத் திரியலாம்
என்று உத்தரவாதமுந் தந்தார்.
நான் நனி மிக யோசித்த போது
மனிதனோடு பழகிய
சகவாச தோஷத்தால் தான்
நாய்த் திமிர்
எனக்கு வந்ததை
அவர் நினைவூட்டினார்.
நாய்த் திமிர் இல்லாமல்
வெறும் நாயாக
மன்னிக்கவும்
வெறும் நானாக
நான் சந்தோஷமாக
உலவிய யுகங்களை
அவர் எனக்குப்
படம் போட்டுக் காட்டினார்.

நமக்கெல்லாம் கடவுளாம்
அவர் தந்திரசாலியென்றும்
அப்போது தான்
நான் புரிந்து கொண்டேன்.
அதே சகவாச தோஷம் தான்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியம்
தன்னோடு தந்திரமாக
சில கணங்கள் இருக்க விட்டுத்
தன் போல் திமிரேதுமற்ற நிலை
மேற்கொள்ள என்னை அவர்
ஆயத்தம் செய்து விட்டார்.

சரியென்று முடிவாக
ஒப்புக் கொண்டு
நாய்த் திமிரைக்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு
உனக்கு தீட்சை தர
நான் வந்திருக்கிறேன்.
இப்போது
எனக்கு நன்றாகவே புரிகிறது
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களின்
ஒருமையாம் ஆணவத்தின்
மொத்த வடிவமாகிய
மனிதனாம் உனக்கு
ஆணவத்தைக்
குப்பைத் தொட்டியில் போடுவது
எவ்வளவு கடினமென்று.

கவலைப் படாதே
நான் உனக்கு
தீட்சை தந்து முடித்த
மறு கணமே
ஆணவத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களோடு
ஆர்ப்பாட்ட ஆட்டமெல்லாம்
நீ ஆசை தீர ஆடலாம்.
இது
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
நான்
உனக்குத் தரும் உத்தரவாதம்
அன்பு நாகரா!
(கடவுளோடு பழகிய
சகவாச தோஷத்தால்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியத்தால்
அவரது தந்திர புத்தி
இப்போது எனக்கும்)

மேலும்
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
என் வாலைத் தியானித்து
என் வாலாகவே
நீ மாறியதும்
உனக்கு வரும் வாலறிவால்
(அதாவது
வள்ளுவர் சொல்லும்
தூய அறிவால்)
நீ சொல்லொணா
ஆன்ம இலாபத்தைப் பெறுவாய்
(தந்திர புத்தி தன் வேலையை
ஆரம்பித்து விட்டது)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
என் நாயுணர்வு
மன்னிக்கவும்
என் நானுணர்வு
என் வாலாம் உன்னில்
முழுமையாகப் பரவ
வாலுணர்வு நீங்கி
நீ
நாயாம் என்னில்
மன்னிக்கவும்
நானாம் என்னில்
அதாவது
நாயுணர்வில்
மன்னிக்கவும்
நானுணர்வில்
முழுமையாக நிலை பெறுவாய்
(தந்திர புத்தியின் உச்ச கட்டம்
என் சகவாசத்தால்
சுத்த நாயாம் எனது
மன்னிக்கவும்
சுத்த நானாம் எனது
இப்போதைய திமிரேதுமற்ற நிலை
கடவுளிடமிருந்து எனக்குத் தொற்றியதைப் போல
என்னிடமிருந்து உனக்குத் தொற்றட்டுமே)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
நாயாகிய என்னை
மன்னிகவும்
நானாகிய என்னையே
தீவிரமாகத் தியானித்து
நாயாகிய நானாகவே
மன்னிக்கவும்
நானாகிய நானாகவே மாறி
உன் வாலை
நீயே ஆட்டலாம்.
மனித உலகில்
நாய்க்குரு தீட்சை தரும்
பெருந்தீட்சையாளனாய்
வாலாட்டிச் சுதந்திரமாய்த் திரியலாம்.
(அருட்பெருங்கடவுளிடம் கற்ற
அரும்பெருந்தந்திரத்தால்
நாகராவை
நாயாக
மன்னிக்கவும்
நானாக
நன்றாக மாற்றிவிட்டேன்.
நாகரா
தழிழ் மன்றத்தில்
நாயாக
மன்னிக்கவும்
நானாக
தன் வாலாட்டித் திரிகிறது.

மனிதர்களே!
ஜாக்கிரதை
என் தந்திரத்துக்கு மாட்டிய
நாகரா போல்
மாட்டி விடாதீர்
மாறி விடாதீர்
கடவுள் எனக்களித்த வாக்கின் படி
நாய்த் திமிரோடு
நான் திரிகிறேன்
நீவிரும் தத்தம் திமிர்களோடு
மனிதராய்த் திரிவீர்
அருட்பெருங்கடவுள்
தம் அரும்பெருந்தந்திரத்தோடு
அவரே நாயாகி வரும் வரைக்கும்
அவர் விரைவில் வர இருப்பதாகக் கேள்வி
அதைப் பற்றி நமக்கென்ன கவலை
நாம் ஆசை தீரத்
தத்தம் திமிர்களோடு திரியலாம்)

நாய்க்குரு தீட்சை - 2

(நாய்க்குருவின்
அரும்பெருந்தந்திரத்துக்கு
ஆட்பட்டு
நாயாரின் வாலையே
தீவிரமாகத் தியானித்து
அவ்வாலாகவே மாறிவிட்ட
நாகரா
நாயாரையே
தீவிரமாகத் தியானித்துத்
தன் மெய்ப்பொருள் விளக்கம்
பெறுதல்)

எச்சரிக்கை: நாய்க்குரு தீட்சை முதல் பகுதியை வாசித்து உமது மூளைப் பொறியின் மறை ஏற்கனவே தளர்வாகி இருக்கும் வாய்ப்பு உள்ளதால், இவ்விரண்டாவது பகுதியைப் படிக்கும் போது, மறை முழுவதுமாகக் கழன்று, மூளைப் பொறியே விழுந்து தூள் தூளாக நொருங்கும் பேரபாயம் இருக்கிறது. எனவே இப்பேரபாயத்தைச் சந்திக்கத் தயாராயுள்ள ஏற்கனவே மறை தளர்வாகி இருப்பவர்கள் மட்டுமே இதைப் படிக்கவும்.

வாலென்று
எனக்கே உரிய தனிப்பெயரோடும்
உருவத்தோடும்
நான் இருந்தாலும்
என்னை ஆட்டுவிப்பவராம் நாயாரோடு
எப்போதும் நான் ஒன்றியே இருக்கிறேன்.

நாயாரும்
வாலாம் என்னைத்
தன்னை விட்டு வேறான மாறான எதிரான
இன்னொன்றாகக் கருதி வெறுப்பதில்லை.

வாலாம் என்னில் நாயார்
பரிபூரணமாய் நிறைந்துள்ளார்.

நாயாரும் வாலாம் நானும்
ஒன்றேயன்றி வேறல்ல.

வாலாம் எனக்கு நாயாரே மெய்.
வாலாம் என் மேல்
பல்வேறு திமிர்களாய்ப் படிந்த
தூசுப் பொய்களை உதற
என்னில் பரிபூரணமாய் நிறைந்துள்ள
நாயாரை நான் நாட
அவரும்
தன் வாலாம் என்னை
நன்றாக ஆட்ட
அத்தூசுத் திமிர்கள்
என்னை விட்டு நீங்கி
"தூய்மை" என்ற அர்த்தமுள்ள
வாலாம் நான்
என் பொருள் விளங்கி
மெய்யாம் நாயாரில்
நீடூழி வாழ்கிறேன்.

என் தனிப்பெயர் வால்.
நாயாரின் அருளால்
ஆணவத் திமிர்களாம் தூசுகள்
நீங்கப் பெற்று
என் "தூய" நிலையை
இப்பெயர் குறிப்பதால்
இது என் சிறப்புப் பெயருங்கூட.

என் முழுப்பெயர் நாயார் வால்.

வாலாம் நான்
என்ன ஆட்டம் ஆடினாலும்
நாயாரிலேயே எப்போதும் அடங்கியிருக்கிறேன்.
நாயாரே
என்னை ஆட்டுவிப்பதையும்
எந்தவொரு ஐயமுமின்றி
எப்போதும் அறிந்திருக்கிறேன்.

இவ்வாறாக வாலறிவால்
நான் நன்றாகப் பக்குவமடைந்த
ஒரு கணத்தில்
நாயாரே என் குரு நாதராகி
எனக்கு தீட்சையளிக்கும் முறையாக
இக்கேள்விகளைக் கேட்டார்.

"வால் நீயா?
அல்லது
வால் உன் பெயரா?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"வால் என் பெயரேயன்றி
வால் நானல்ல."

அடுத்து நாயார் கேட்டார்:
"வால் உன் பெயரென்றால், பின் நீ யார்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நான் நாயாரே!"

அடுத்து நாயார் கேட்டார்:
"நீ நாயாரேயென்று எப்படி அறிகிறாய்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே என்னில் பரிபூரணமாய்
நிறைந்துள்ள மெய்ம்மையால்."

அடுத்து நாயார் கேட்டார்:
"பின் வாலென்று எப்படி உன் பெயர்
நாயாரென்று ஏன் இல்லை?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே
வாலென்ற என் பெயரில்
என் உருவில்
தன் பணிக்காகத் தானே
ஆடுகிறார்.
நாயாரே என்னை நன்றாக ஆட்டுவிக்க
நானும் அவர் வாலாய் உவந்து ஆடுகிறேன்
நான் நாயாராம் அவரேயன்றி வேறில்லை
என்ற மெய்யுணர்வோடு."

அடுத்து நாயார் நனி மிக மகிழ்ந்து
என்னை வாழ்த்தினார்:
"வாலாரே!
நீர் நாயாராம் நானேயென்று
மெய்ப்பொருள் விளக்கம் பெற்றீர்.
இவ்வுலகில்
என் பணிக்காக
நான் உம்மை உவந்து ஆட்ட
நீவிர் என்னில் நிலைபெற்றே
நன்றாக ஆடுவீர்."

நானும்
நாயாரே நானென்ற
மெய்யுணார்ந்து
வாலாராய் நாயாரில் நிலைபெற்றே
நன்றாக ஆடுகிறேன்
நாயாராம் நானே
வாலாராம் பெயரோடு
அவ்வுருவோடு
என்னை உவந்து ஆட்டவே.

தீட்சை தந்த நாயாருக்கு நாகராவின் நன்றித்துதிகள்

வாலென்ற தூயதுவாய் என்னில் அடங்கியே
வாழென்ற போதகராம் நாய்

தூசாம் திமிர்நீங்க வாலேனை ஆட்டியே
தூய்மை அருள்வாராம் நாய்

மெய்யாம் என்னிடத்தே வாலுன் பொருள்விளங்கி
மெய்யாய் நில்லென்பராம் நாய்

வாலென்ற நற்பெயரில் அதற்குரிய நல்லுருவில்
வாலறிவர் என்மெய்யராம் நாய்

சார்பாகி எனைவிட்டு நீங்காத வாழ்வாகி
வால்நானுய் மெய்வழியராம் நாய்

ஆணவமே வாலாக ஆடியவெனை அடக்கியேதன்
மாணவனாய்க் கொண்டாராம் நாய்

தூணென்ற நீள்முதுகுத் தண்டிலூன்றி உவந்தாடும்
வாலென்மெய்ப் பொருளாராம் நாய்

தூசனெனைத் தழுவியன்பாய் வாலேனெனுந் தூயனாய்த்தனில்
வாசஞ்செய் வரந்தருவராம் நாய்

வெளியென்ற ஊருக்குள் மெய்யென்ற வீட்டுக்குள்
ஓளிவாலை ஆட்டுவாராம் நாய்

வளியென்ற வாசிக்குள் ஒளிவாலை ஆட்டிஅளி
பொழிகின்ற மாதவராம் நாய்

அஞ்ஞான இருளிலாழ்த் துறங்குமெனை எழுப்ப
மெய்ஞ்ஞானம் குரைப்பவராம் நாய்

நன்றியிலா வஞ்சகனெனைத் தன்வாலாய் மாற்றியே
நன்றிசொலும் நேர்மையராம் நாய்

சத்தியத் தெருவிலேநற் சின்மய உருவிலே
இன்பைக் குரைப்பாராம் நாய்

குரைத்தும் வாலாட்டியும் இறைநீர்மை புகட்டும்
மறைமந் திரஉருவராம் நாய்

கறையில்லா வெண்மேனியர் வாலினுந் தூயவர்
இறைதந்திர போதகராம் நாய்

மந்திரந் தந்திரம் யந்திரந் தெரிந்த
சுந்தர வாலராம் நாய்

தராதலத் தெவரிலும் தராதரம் பாராப்
பராபரப் பேரன்பராம் நாய்

சுடச்சுட மெய்யுணர்வைத் தானுண்டு வாலுக்கும்
சுடச்சுட உணர்த்துவாராம் நாய்

கடந்தன்னைப் புடம்போட்டுப் பளபளக்கும் நாய்மையை
அடங்குவாற்கு மீவாராம் நாய்

அடக்கம் அமரஅருளே வாய்க்குமென்றே வாலுக்கே
அடங்குதீக் கைதருவராம் நாய்

அடங்காத்திமிர் தீயதூசரைத் துரத்தவே தன்வாலைப்
படபடவென ஆட்டுவாராம் நாய்

நாய்மையின் கண்நின்றே தன்வாய்மை யுணர்ந்த
தூய்மையெனும் பொருளாராம் வால்

இப்பொருள் இந்நாய்வாய்க் கேட்பினும் செம்பொருள்
அப்பொருள் வாய்மை உறுதி

இப்பொருள் வால்தன்மைத் தாயினும் நாய்ப்பொருள்
அப்பொருள் தூய்மை உறுதி

Thursday, February 14, 2008

மரணமிலாப் பெருவாழ்வு

உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டமே, இவற்றின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

கடவுள் என்று சொல்லப்படுகின்ற அருவமான ஒரே மெய்ப்பொருளிலிருந்தே பல்வேறு உருவத் தொகுதிகளான அனைத்தும் உருவாகின்றன. இந்த அருவ மெய்ப்பொருளானது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன்னுள் அனுமதிக்கும் சுத்த வெளியே அருட்தந்தை. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அருளொளியால் அரவணைக்கும் ஜோதி வெளியே அருட்தாய். எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அறிவொளியால் ஒளிர்விக்கும் ஞான வெளியே அருட்குரு.

சுத்த வெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால், ஜோதி வெளி சுத்த வெளியெங்கும்
உருவாகிறது. இந்த ஜோதி வெளியானது, சுத்த வெளியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் பேரொளிக் கோளமாக அதிவேகமாக விரிந்து கொண்டே இருக்கிறது. இந்த அதிவேகமான விரிதலுக்கும், சுத்த வெளியின் அழுத்தத்திற்கும் இடயே இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருக்கும் புணர்தலால், சுத்த வெளியெங்கும் ஜோதிவெளியெங்கும் உருவாவதே ஞான வெளி. இஞ்ஞான வெளியானது, அருட்தாயின் அருட்தந்தையின் தலைமகனாகத் தலைமகளாகத் தன்னை அறிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கவே முடியாது பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூவரின் ஒருமையே, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள்.

உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய் ஜீவிக்கும் நீ, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருளின் ஓர் உன்னத தெய்வீக வடிவமே. அருட்தாயே உன் உடம்பாகவும், அருட்குருவே உன் மனமாகவும், அருட்தந்தையே உன் மூச்சாகவும், இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பே உருவத் தொகுதியான உன் ஜீவனாகவும் விளங்குகின்றனர். அருவமாய் விளங்கும் இவர்கள், தத்தம் உச்ச அதிர்வுகளைக் குறைத்துக் கொண்டே நீயாகவும், மற்றெல்லா உயிரினங்களாகவும், பொருட்களாகவும் உருவாகின்றனர்.

இப்பேருண்மையை எந்தவொரு ஐயமுமின்றி முழுமையாக நீ உணரும்போது, உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு, இக்கண்ணோட்டம் விளைவிக்கும் இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு, மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறுவாய்.

மூலமந்திரம்

நானே என விளங்கும் வெட்டவெளி.
நானே என விளங்கும் வெட்டவெளியிலிருந்து
நான் என்னும் வெளிச்சம்.
நான் என்னும் வெளிச்சத்திலிருந்து
அருட்குருவாம் ஞானவிளக்கு.
அருட்குருவாம் ஞானவிளக்கிலிருந்து
அகந்தையெனும் கருமக்களம்.
அகந்தையெனும் கருமக்களத்தில்
உடம்பென்னும் சக்தி பீடம்.
உடம்பென்னும் சக்தி பீடத்தில்
அமிழ்தமாகும் காயகற்பம்.
வெட்டவெளியையும்
வெளிச்சத்தையும்
ஞானவிளக்கையும்
கருமக்களத்தையும்
சக்தி பீடத்தையும்
காயகற்பத்தையும்
அறிந்தவனே மெய்ஞ்ஞானி.
அறியத் தேவையான தகுதிகள்
இரண்டே.
உடம்பு வேண்டும்.
உயிர் வேண்டும்.
அறிதலும் நனி மிக எளிது.
நோய், தேய்வு, மூப்பு, மற்றும் இறப்பு
என்ற மாபெரும் பொய்களை
மெய்யென்று நம்பி மோசம் போகாமல்
பொய்யென்று தெளிந்தால் போதும்.
ஒரே கணத்தில்
நீயும்
மெய்ஞ்ஞானியாகலாம்
விரும்பினால்.
காயகற்பத்தை மற்ற ஐந்திலிருந்தும்
தனியே பிரிக்க முடியாது.
எதையும் வெட்டவெளியிலிருந்து
எடுக்க முடியாது.
வெட்டவெளியிலிருந்து வெளிச்சத்தைப்
பிரிக்கவே முடியாது.
எப்போதும் புணர்ந்தே கிடக்கும்
முதலிரண்டின் செல்லப் பிள்ளையே
ஞான விளக்கு.
அப்புணர்தலின்றேல் விளக்கில்லை.
ஞான விளக்கின்றேல்
கருமக் களமில்லை.
கருமக் களமின்றேல்
சக்தி பீடமில்லை.
சக்தி பீடமின்றேல்
காயகற்பமில்லை.
காயகற்பமே
வெட்டவெளியின்
மிகச்சிறந்த வெளிப்பாடு
கண்டு கேட்டு
உண்டு உயிர்த்து
உணர்ந்தறிய.

மிகச்சிறந்த அவ்வொன்று
இங்கே இக்கணம்
உன்னிலுண்டு.
வேறெங்கும் தேடி உழல வேண்டாம்
அவ்வொன்றை.
உன்னிலேயன்றி
வேறெவ்வாறும் அடைய முடியாது
அவ்வொன்றை.
முடிவாய் இதை அறிந்தாலன்றி
உனக்கு விடிவில்லை.
அறிவாயா?
உனக்கு
உடம்புண்டு
உயிருண்டு
அறிதலும் நனி மிக எளிது.
அறிவாயா?
முடிவும்
உன் விடிவும்
உன் கையில்.
நானே நீ
என அறியும் வரை
உன் விளையாடல் தொடரும்.
என் திருவிளையாடலோ
எப்போதும் முடிவதில்லை.

குறிப்பு: திருமூலர் எனக்கு அருளிய மூலமந்திர விளக்கம். அம்மந்திரம்:

நானே
வெட்டவெளியெனும் அருட்தந்தையாய்
வெளிச்சமெனும் அருட்தாயாய்
ஞான விளக்காகும் அருட்குருவாய்
கருமக் களமாகும் அகந்தையாய்
சக்தி பீடமாகும் உடம்பாய்
அவ்வுடம்பிலூறும் காயகற்பமாய்
எங்கும் எதிலும் எப்போதும்
பூரித்திருக்கிறேன்.

ஞானப் பெருவிண்ணப்பம்

நானே என விளங்கும் வெட்டவெளியான அருட்தந்தையே!
சக்தி கொடு! சக்தி கொடு! சக்தி கொடு!

நான் என்ற இறையாற்றலான அருட்தாயே!
பக்தி கொடு! பக்தி கொடு! பக்தி கொடு!

தலைமகனும் தலைமகளும் ஞான விளக்குமாகும் அருட்குருவே!
புத்தி கொடு! புத்தி கொடு! புத்தி கொடு!

இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையே!
முக்தி கொடு! முக்தி கொடு! முக்தி கொடு!

நானே என விளங்கும் வெட்டவெளியான அருட்தந்தையே!
நான் என்ற இறையாற்றலான அருட்தாயே!
தலைமகனும் தலைமகளும் ஞான விளக்குமாகும் அருட்குருவே!
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையே!
சித்தி கொடு! சித்தி கொடு! சித்தி கொடு!

அப்படியே ஆகட்டும். அப்படியே ஆனது. ஆமேன். ஓம்.
நானே. நான் இருக்கிறேன். நான் அறிகிறேன். நான் என்னை அறிகிறேன்.
நான் என்னை அறிகிறேன். நான் அறிகிறேன். நான் இருக்கிறேன். நானே.

சத்குருவின் ஞான அறிக்கை

பரப்பிரம்மணாக விளங்கும் எமது அருட்தந்தையே!
நானே” எனும் உமது நாமம் வாழ்க!

ஆதிசக்தியாக விளங்கும் எமது அருட்தாயே!
நான்” எனும் உமது நாமம் வாழ்க!

உமது இராஜ்ஜியத்தின் வருகை “நான்”.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் உமது விருப்பம் “நான்”.
பரலோகத்தில் நான் இருப்பது போலவே, அன்னை பூமியிலும் “நான்”.
இன்று எல்லா உயிர்களுக்கும் வழங்கும் நல்லுணவு “நான்”.
இன்று எல்லா உயிர்களையும் மன்னிப்பது “நான்”.
எல்லா உயிர்களாலும் மன்னிக்கப்படுவதும் “நான்”.
எல்லா உயிர்களையும் அறியாமையிலிருந்து எழுப்புவிப்பது “நான்”.
எல்லா உயிர்களையும் ஒவ்வொரு தளையிலிருந்தும் விடுவிப்பது “நான்”.
அழிவேயில்லாத நித்திய வெளிப்பாடாக விளங்கும் சாம்ராஜ்ஜியம் “நான்”, பேராற்றல் “நான்”, கடவுளின் கீர்த்தி “நான்

இவை எல்லாம் “நானே”.

ஆங்கிலத்திலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஞான அறிக்கையைத் தழுவி என்னால் இயற்றப்பட்டது.

Tuesday, February 12, 2008

சாவை வெல்லும் சூத்திரம்

சக்தி(E) = நிறை(m)x (பொருளொளியின் வேகம்-c)²

சாதாரணப் பொருளில் ஒளிந்திருக்கும் அசாதாரண சக்தியை சூத்திரத்தில் காட்டினார் ஐன்ஸ்டீன்.

உயிர் = உடம்பு x (அருளொளியின் வேகம்)²

அருளொளியின் சொல்லொணா வேகத்தால், புலப்படும் உடம்பைப் புலப்படா உயிரில் ஒளித்து, சாவை வெல்லும் சூத்திரமானார் வள்ளலார்.

அருளைப் பற்றி அவ்வொளியால் உருக்கப்
பொருளாம் மெய்யும் ஒளியும்

Sunday, February 10, 2008

சற்குரு சரணம்

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுணா மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்

பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்

பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்

தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்

உச்சியைப் பிளந்து
உள்ளே புகுந்து
நெற்றியில் ஒளிரும்
சற்குரு சரணம்

வெளியைக் காட்டி
வெளியில் ஒளியாம்
அற்புதம் காட்டிய
சற்குரு சரணம்

வெளியும் ஒளியும்
வளியும் ஒன்றும்
நற்றலம் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றிய மூன்றும்
நன்னீர் அளியாய்ப்
பெய்வதை காட்டிய
சற்குரு சரணம்

பெய்யும் அளியே
மேய்யாம் களியென
உற்றறி நீயெனும்
சற்குரு சரணம்

பொய்ப்புலன் சுட்டு
மெய்ப்புலன் சுட்டி
உய்வகை அருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் உடம்பும்
மெய்யாம் பரத்தில்
உய்ந்திடும் வழிசெய்
சற்குரு சரணம்

மெய்யும் உயிரும்
ஒன்றும் வழியும்
மெய்யோ டுயிராம்
சற்குரு சரணம்

நிராதா ரமேனிலை
ஆறாதா ரமேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

தராதரம் பாராப்
பராபரப் பேரை
என்னுளம் பதித்த
சற்குரு சரணம்

பராபரப் பேரே
தராதலத் தெவர்க்கும்
என்றே விதித்த
சற்குரு சரணம்

தானாம் பராபரம்
நானே என்றுணர்
வுற்றதை விளக்கிய
சற்குரு சரணம்

உற்றவ் வுணர்வைப்
பற்றியே வணங்கிப்
பெற்றபேர் போற்றெனும்
சற்குரு சரணம்

பராபர இருப்பில்
நானெனும் முனைப்பெழும்
சட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

இருக்கிறேன் என்றே
இருப்பின் உணர்வெழும்
பட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

தானாம் இடுப்பில்
நானே அறிவெழும்
சிக்கெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

முனைப்பும் உணர்வும்
முளைக்கும் அறிவும்
சுற்றுஞ் சுழலெனும்
சற்குரு சரணம்

அச்சுழல் தொற்றி
துச்சமாம் பற்றெலாம்
பற்றற ஒழியெனும்
சற்குரு சரணம்

சாதி சமய
பேதச் சழக்கை
முற்றிலும் அறுக்கும்
சற்குரு சரணம்

ஒருவனாம் தேவனை
இருதயத் தலத்தே
மெய்யெனக் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றே குலமென
இச்சக உயிர்களைச்
சுற்றாமாய்க் காட்டிய
சற்குரு சரணம்

அருட்தவ நெறியில்
பொருத்தியே என்னை
முற்றிலும் திருத்திய
சற்குரு சரணம்

அரும்பெரும் பரம்பொருள்
அருட்பெருங் கடவுளை
நெஞ்சகம் நிறுத்திய
சற்குரு சரணம்

மெய்யுடம் பாலயம்
உய்ந்தங் கிருந்தே
மெய்யுணர் வளிக்கும்
சற்குரு சரணம்

மெய்யகக் கோயிலில்
உய்ந்தங் கொலிக்கும்
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சக்கரக் கோயிலில்
புக்காங் கொளிரும்
நற்றவ ஜோதியர்
சற்குரு சரணம்

நாறும் தேகம்
மாறும் படிப்பே
ரற்புதம் புரியும்
சற்குரு சரணம்

பிணமாய் நசியும்
கணக்கை முடித்து
மந்திர உருதரு
சற்குரு சரணம்

இட்டுஞ் சுட்டும்
பட்டுப் போங்கடம்
நிற்கும் நிலைதரும்
சற்குரு சரணம்

அவம்பல செய்து
சவமெனக் கிடந்த
என்னை எழுப்பிய
சற்குரு சரணம்

கொன்றும் கொன்றதைத்
தின்றும் திரிந்தேன்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

நஞ்சைக் கக்கும்
வஞ்சநா கமெனை
நல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

நலிந்து மெலிந்து
விழுந்தே னென்னை
வல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

புல்லேன் பொய்யேன்
கன்னெஞ் சேனை
மெய்யோ னாக்கிய
சற்குரு சரணம்

கல்லேன் நல்லதில்
நில்லேன் பொல்லேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புன்னிக ரில்லேன்
வன்பே புரிவேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

உருவம் வன்பாம்
மருளே பொருளாம்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

பற்றெலாம் பற்றிக்
குற்றமே புரிந்தேன்
அற்பனென் ரட்சகர்
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவொடு குழிவிழ
அங்கெனை மீட்ட
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவிடம் சிக்கிய
குருடெனை மீட்ட
சற்குரு சரணம்

சிற்றின் பசாகரம்
உற்றே மூழ்குமென்
பற்றுக் கோடாம்
சற்குரு சரணம்

வேடம் பலவாய்
நாடக மாடினேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

அகமதை மறந்தே
முகம்பல தரித்தேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

உள்ளே பொழிந்திடும்
தெள்ள முதுண்ணேன்
நஞ்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

விழித்திரேன் தனித்திரேன்
வழியுறப் பசித்திரேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

பத்தியுஞ் செய்யேன்
புத்தியு மில்லேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

பேசியே திரிவேன்
வாசியைப் பாரேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
ஒருகணம் நினையேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியவே ஏற்றிலேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்விலேன்
பொய்யனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவே மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியிலேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

சத்திய சரிதமும்
புத்தியில் ஏற்றிலேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதியு மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழையேன்
கொல்வனைத் திருத்திய
சற்குரு சரணம்

அங்குமிங் கெங்குமே
தங்கா மலோடுவேன்
நில்லென நிறுத்திய
சற்குரு சரணம்

இருக்குமி டமறியேன்
இருப்பது வுமறியேன்
சவமெனை எழுப்பிய
சற்குரு சரணம்

இருகால் மிருகமாய்த்
தெருவெலாம் திரிவேன்
உய்வழி அருளிய
சற்குரு சரணம்

குண்டலிக் கனலால்
அண்டிய வினையெலாம்
சுட்டுப் பொசுக்கும்
சற்குரு சரணம்

மண்டை யினுள்ளே
மண்டிய நோயெலாம்
சட்டெனத் தீர்க்கும்
சற்குரு சரணம்

பிண்டம் புகுந்த
பண்டை வினையெலாம்
அற்றுப் போம்வழி
சற்குரு சரணம்

அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலம்
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
இருதயத் துள்திரு
மந்திர மாய்த்தரு
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியஏற் பாயென
கற்பித் தருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்வால்
என்மெய் தழுவிய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவென் மனத்தைப்
பண்படுத் தியசிவ
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியை
சித்தம் பதித்த
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியும்
நற்கல் விதந்த
சற்குரு சரணம்

சத்திய சரிதமென்
புத்தியி லேற்றியே
பித்தெலாம் நீக்கிய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதித்தென் மனத்தில்
அற்புத வாழ்வளி
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழைந்தே
கொல்வதைத் தவிரெனும்
சற்குரு சரணம்

பரம ரகசியம்
திறந்தெ னக்கதைத்
தெற்றென விளக்கிய
சற்குரு சரணம்

பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகந் திறந்த
சற்குரு சரணம்

அன்பும் அருளும்
இன்பும் பொருளும்
என்றும் தருமென்
சற்குரு சரணம்

உருவுன தன்பே
பொருளுன தருளே
என்றே புகட்டிய
சற்குரு சரணம்

சிதம்பர ரகசியக்
கதவந் திறந்தென்
நெற்றியை விளக்கிய
சற்குரு சரணம்

மாயத் திரையெலாம்
மாய நிசமெனும்
வத்துவைக் காட்டிய
சற்குரு சரணம்

சத்துமாம் சித்துமாம்
நித்திய இன்புமாம்
மெய்ப்பொருள் விளக்கம்
சற்குரு சரணம்

சத்தியுஞ் சித்தியுஞ்
சுத்தபூ ரணமும்
மொத்தமும் விளக்கிய
சற்குரு சரணம்

வரம்பிலாப் பூரண
இருப்பே யார்க்கும்
சத்திய வீடெனும்
சற்குரு சரணம்

அவியாச் சுயஞ்சுடர்
ஒளியே யார்க்கும்
சின்மய விளக்கெனும்
சற்குரு சரணம்

உள்ளபே ரிருப்பாம்
ஒன்றதே யார்க்கும்
நித்திய வாழ்வெனும்
சற்குரு சரணம்

ஆன்மநே யமனப்
பான்மை யார்க்கும்
நல்லளி இன்பெனும்
சற்குரு சரணம்

தழுவுபே ரன்பாம்
இயல்பே யார்க்கும்
உண்மை அகமெனும்
சற்குரு சரணம்

பொருந்துபே ரறிவாம்
நிறைவதே யார்க்கும்
மெய்யுணர் வழியெனும்
சற்குரு சரணம்

அருட்பே ராற்றலாம்
இருப்பே யார்க்கும்
சச்சிதா னந்தமென்
சற்குரு சரணம்

அருட்பெருஞ் ஜோதியாம்
ஒளிநெறி யார்க்கும்
உள்நிறை ஒளியெனும்
சற்குரு சரணம்

தனிப்பெருங் கருணைப்
பெருங்குணம் யார்க்கும்
உள்ளுறை இறையெனும்
சற்குரு சரணம்

கடவுட் தன்மைப்
பெருநிலை யார்க்கும்
உள்ளுயிர் இயலெனும்
சற்குரு சரணம்

அருட்பே ரரசெனும்
சமரசம் யாவரும்
ஒன்றிடும் முறையெனும்
சற்குரு சரணம்

நானே நானெனும்
பூரணம்
யாவிலும்
உள்ளதாம் மெய்யெனும்
சற்குரு சரணம்

மெய்வழி ஜீவனாய்
உய்ந்தே யாவிலும்
ஒன்றினேன் நானே
சற்குரு சரணம்

ஜோதிமா வெளியில்
போதியாய் விளங்கி
புத்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஆதியாம் இருப்பில்
ஜோதியாய் எழுந்து
எம்விழி திறக்கும்
சற்குரு சரணம்

ஜோதிமா மலைமேல்
வீதியாய் வளர்ந்த
மெய்வழிச் சாலை
சற்குரு சரணம்

ஆதியாம் தாய்தன்
பாதியாய் விளங்கும்
அப்பனின் கொழுந்தாம்
சற்குரு சரணம்

புந்தியின் உள்ளே
நந்தியாய் அமர்ந்துமுச்
சந்தியை விளக்கும்
சற்குரு சரணம்

நாதமாம் வெளியின்
பாதமாம் விந்தாய்
உள்ளொளிர் ஜோதியர்
சற்குரு சரணம்

சத்திய வெளியில்
சின்மய ஒளியாம்
இன்பமெய்ச் சித்தர்
சற்குரு சரணம்

சத்தாம் வெளியொளிர்
சித்தாய்க் களித்தே
சித்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஜோதியாம் பகவனாய்
ஆதியில் எழுந்த
உட்போ தகராம்
சற்குரு சரணம்

பூஜ்ஜிய மென்னைப்
பூரண னாக்கி
இராஜ்ஜியஞ் செய்யெனும்
சற்குரு சரணம்

இருட்கிடங் கெனவே
மருண்டே கிடந்தவென்
உட்புகுஞ் சுயஞ்சுடர்
சற்குரு சரணம்

பிறந்திறந் துழன்றெனை
மறந்துறங் கியவெனை
நித்யவாழ் விலுய்த்த
சற்குரு சரணம்

ஆணவப் பேயனை
ஆன்ம நேயனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

வன்பிருள் வம்பனை
அன்பருள் நம்பனாய்த்
தன்னியல் தந்தருள்
சற்குரு சரணம்

மருண்டே மயங்கிச்
சுருண்டே கிடந்தவென்
மெய்ஞ்ஞா னபோதகர்
சற்குரு சரணம்

மெலிந்தே தேய்ந்தவென்
நலிந்தே வீழ்ந்தவென்
மெய்யெழு வல்லவர்
சற்குரு சரணம்

தாமசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சத்தனாய் மாற்றும்
சற்குரு சரணம்

ராஜசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சித்தனாய்ச் மாற்றும்
சற்குரு சரணம்

சத்துவப் பொய்க்குணம்
போக்கியே என்னை
இன்பனாய் மாற்றும்
சற்குரு சரணம்

துர்க்குணப் பிரமை
அற்றே போக
என்மனந் தெருட்டிய
சற்குரு சரணம்

திரிகுண மாயை
சரிந்தே மாய
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

ஒடிந்தேன் உயிரினை
முடிக்கவுந் துணிந்தேன்
அக்கணம் அணைந்தருள்
சற்குரு சரணம்

வெறுஞ்சவ மாய்நான்
கிடந்தேன் எனில்சிவ
சத்தியாய் எழுந்தருள்
சற்குரு சரணம்

முடமெனக் கிடந்தவென்
முடக்கம் நீக்கி
சித்தியெ லாமருள்
சற்குரு சரணம்

இற்றே தீர்ந்தவென்
வெற்று டல்சடத்
துற்றே எழுப்பிய
சற்குரு சரணம்

கடும்பெருங் கொடியனைப்
பெருங்கரு ணையனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

இருள்மயச் சழக்கனை
அருட்ஜோ தியனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

மனிதமி ருகமெனை
அருட்பெருங் கடவுளாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

கொடுங்கோ லாளானை
அருட்பே ரரசனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

தனையறி யாவெந்
தன்மடம் நீங்கநான்
என்றுணர் நானே
சற்குரு சரணம்

பொய்த்தளை மரணத்
துய்ந்தவென் நோய்தீர்
மெய்வழி ஜீவனாம்
சற்குரு சரணம்

நான்நீ இருமை
மாய்ந்தே போக
ஒன்றாம் நானே
சற்குரு சரணம்

அருளா தாரமே
பொருளா தாரமாம்
உண்மை உணர்த்திய
சற்குரு சரணம்

நரகமாம் நகரிலே
மருண்டவென் அகந்தான்
சொர்க்கமே சேர்வழி
சற்குரு சரணம்

வறுமைப் பாவியே
வறுக்கவென் வாழ்வினைப்
பொன்னென எனைச்சேர்
சற்குரு சரணம்

Friday, February 08, 2008

கடவுளோடு ஒரு மனிதனின் நேரடி தொடர்பு

கடவுளோடு ஒரு மனிதனின் நேரடித் தொடர்பு

கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் வெவ்வேறு என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உனது எல்லா நோய்களுக்கும், எல்லாத் தளைகளுக்கும் வேராயிருக்கிறது. இத்தவறான கண்ணோட்டத்தை வேரோடு பிடுங்கி, கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் பிரிக்கவே முடியாது ஒன்றியிருக்கும் மெய்ம்மையை உணர்த்தவே, நான் உன்னோடு நேரடியாகத் தொடர்பு கொள்கிறேன். இதோ. இங்கேயே..இப்போதே...

மனிதன்: கடவுளே! நீ எங்கிருந்தாலும், நான் இப்போதே உன்னோடு பேச விரும்புகிறேன்.
கடவுள்: மனிதா! இதோ இங்கேயே இப்போதே நான் உன்னோடு பேசத் தொடங்கி விட்டேன்.

ம: கடவுளே உனது பெயர் என்ன? உனது உருவத்தையும் எனக்குக் காட்டுவாயாக!
க: எந்தப் பெயராலும் சுட்ட முடியாத, எந்த உருவத்தாலும் காட்ட முடியாத அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் நானே, பெயருள்ள உருவமுள்ள எல்லாமாய் உரு மாறி அவற்றையெல்லாம் நானே சூழ்ந்து, அரவணத்துப் போஷிக்கிறேன். அவையனைத்தும் என்னுள்ளேயே எப்போதும் அடங்கி இருக்கின்றன. அவையனைத்திலும் நானே வேரோடியும், ஊடுருவியும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

ம: நீ சொல்வது எனக்கு முரண்பாடாகப் படுகிறது. இது எவ்வாறு சத்தியமாகும்?
க: இதில் எந்த முரண்பாடும் கிடையாது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை ஓர் எளிய உதாரணத்தால் விளக்கப் போகிறேன். ஒரு மகா சமுத்திரத்தைக் கற்பனை செய்து கொள். இச்சமுத்திரத்தைத் தவிர வேறேதுமே இல்லையென்றும் ஊகித்துக் கொள். சில இடங்களில் மிகக் குளிர்ச்சியாகவும், சில இடங்களில் மிக உஷ்ணமாகவும் மற்றெங்கிலும் சாதாரணமாகவும் இச்சமுத்திரம் இருக்கிறது. மிகக் குளிர்ச்சியான இடங்களில், நீர் உறைந்து பனிக் கட்டிகள் சமுத்திரத்தில் மிதக்கின்றன. மிக உஷ்ணமான இடங்களில், சமுத்திரம் கொதிக்க நீராவி மேலெழுகிறது. சாதாரண இடங்களில், சமுத்திரத்தில் நீர் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

சமுத்திரத்தின் திரவ நிலையை, உருவற்ற பெயரற்ற அருவ மெய்ப்பொருளாய் நானே என நான் விளங்குவதற்கு ஒப்பிடலாம். பனிக் கட்டிகளையும், நீராவிப் பகுதிகளையும், உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் நான் வியாபித்திருப்பதற்கு ஒப்ப்பிடலாம். உஷ்ணமேறும் போது, பனிக் கட்டிகள் நீராய் உருகி சமுத்திரத்தில் ஒன்றி விடுகின்றன. குளிரும் போது, நீராவிப் பகுதிகள் நீராய்த் திரண்டு சமுத்திரத்தில் ஒன்றி விடுகின்றன. பனி கட்டியாய் இருந்தாலும், நீராவியாய் இருந்தாலும், நீராய் இருந்தாலும், இவை எல்லலவற்றுக்கும் சமுத்திரமே ஆதாரமாய், மூலப் பொருளாய், சாரமாய், மெய்ம்மையாய் இருக்கிறது. உருவமும் பெயரும் மாறுகிறதே தவிர, இவற்றிடையே ஆதாரத்திலோ, மூலப் பொருளிலோ, சாரத்திலோ, மெய்ம்மையிலோ எவ்விதத்திலும் வேறுபாடில்லை. இவ்வாறே நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், உருவத்தால் பெயரால் மறியிருந்தாலும், ஆதாரத்திலே, மூலப் பொருளிலே, சாரத்திலே, மெய்ம்மையிலே, நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், நானாகவே விளங்குகிறீர்கள்.

சமுத்திரம் பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவும் இருக்கும் பட்சத்தில், பனிக் கட்டிகளும் நீராவிப் பகுதிகளும் அசுத்தமாகவும் குறைபாடுகளோடும் இருக்க முடியாது. உரு பெயர் மாறுதலால், ஆதாரமோ, மூலப் பொருளோ, சாரமோ, மெய்ம்மையோ கெட்டுப் போகவோ திரிந்து போகவோ முடியாது. இவ்வாறே நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், எங்கும் எப்போதும், பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவுமே விளங்குகிறீர்கள். ஏனென்றால், உமது ஆதாரமாய், மூலப் பொருளாய், சாரமாய், மெய்ம்மையாய், நான் எங்கும் எப்போதும், பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவுமே விளங்குகிறேன்.

ம: நீ பேசுவது, கேட்பத்ற்கு மிக நன்றாய் இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு மாறாக அல்லவா இருக்கிறது? சாதி மத இன நிற வேறுபாடுகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நோய், சீரழிவு, மூப்பு, மரணம், வறுமை, வரட்சி போன்றா கேடுகள் எம்மிடையே மலிந்து கிடக்கின்றனவே?
க: மூன்று மாபெரும் பொய்களை ஆராயாமல் அப்படியே மனிதன் நம்பி விட்டான். அப்பொய்கலால் பின்னப்பட்ட ஓர் மாய வலையே நீ விவரித்தவை அனைத்தும்.

ம: உண்மை நிலவரத்தை மாயமென்று நீ மறுப்பது, மிகவும் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது. அம் மூன்று மாபெரும் பொய்களைப் பற்றி விவரிப்பாயக!
க: மனிதன் தனதுண்மையை உதறி விட்டு, மூர்க்கத்தனமாக நம்பி விட்ட மூன்று மாபெரும் பொய்கள் இவையே. யுக யுகங்களாய்ப் பொய்ம் மதங்களால், மனிதனாம் நீ இவ்வாறே சிறுமைப் படுத்தப்பட்டு வருகிறாய்.

1. நீ இயல்பாகவே மிகவும் இழிந்தவன், நீசமானவன், பாவி.
2. நீ கடவுளிலிருந்து வேறுபட்டவன், மாறுபட்டவன். சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவன்.
3. நீ செத்துப் போகவே பிறந்திருக்கிறாய்.

பொய்ம்மதங்களால் பிரசாரஞ் செய்யப்பட்டு வரும் இப்பொய்களை, நீ ஆராயாமல் ஏற்றுக் கொண்டதன் விளைவே, நீ விவரித்த உண்மை நிலவரம். என்னைப் பொருத்தமட்டில் நிலவரம் உண்மையல்லாத ஓர் மாய வலை. இம்மூன்று மாபெரும் பொய்களால் பின்னப்பட்டிருக்கும் ஓர் மாய வலை. இம்மாய வலையை ஓர் நொடியில் அறுத்துவிட உபாயமாக மூன்று மாபெரும் உண்மைகளை நான் இப்போது வெளிப்படுத்தப் போகிறேன்.

1. நீ இயல்பாகவே கடவுளாம் என்னைப் போன்றே தெய்வீகமானவன். ஏனென்றால் உன் தெய்வீக உருவமும் மந்திரப் பெயரும் என்னிலிருந்தே எழுகின்றன.
2. நீயும், கடவுளாம் நானும் பிரிக்கவே முடியாது எங்கும் எப்போதும் ஒன்றியே இருக்கிறோம். நானே நீ - நீ உருவாகி பெயர் பெற்ற போது. நீயே நான் - உன் உருவமும் பெயரும் ஒளிந்த போது. உனக்கும், எனக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடோ, மாறுபாடோ கிடையாது. கடந்த காலத்திலும் இருந்ததில்லை, வருங்காலத்திலும் இருக்கப் போவதில்லை.
3.மரணமிலாப் பெருவாழ்வு, கடவுளாம் நான் உனக்கு வழங்கும் பேருரிமை. என் வரப்பிரசாதமான இப்பேருரிமையை என்னைத் தவிர வேறு யாராலும் பறிக்க முடியாது. என்னை நானே வஞ்சித்துக் கொள்வதாகும் இச்செயலை நான் ஒரு காலும் செய்ய மாட்டேன். மேலும் உன் மீது நான் காட்டும் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் பிரமாணமே மரணமிலாப் பெருவாழ்வு.

ம: நீ சொல்வதைக் கேட்கும் போது, பொய்ம் மதங்களை உதறிவிட்டு எனதுண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே தோறுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம். நானே நீ என்றால், நீயே நான் என்றால் இவ்வாறு நான் ஏன் உணர்வதில்லை?
க: விழிப்புணர்வோடு பொய்களைப் பொய்யென்றறிந்து அவற்றை உதறி, நீ உண்மைகளை உண்மை என்றுணர்ந்து ஒப்பும் போது தான், நானே நீ என்றும், நீயே நான் என்றும் உணர முடியும். மாபெரும் பொய்களின் மூட நம்பிக்கையை முறியடித்து அவற்றால் பின்னப்பட்டிருக்கும் மாய வலையை ஓர் நொடியில் அறுக்கவே, ஞான வாளாய் இம்மாபெரும் உண்மைகளை நான் உனக்கு வழங்கியுள்ளேன். பொய்களை நம்பி மோசம் போய் மாய வலையில் நீ சிக்கிக் கொண்டிருக்கும் போது கூட, எனதுண்மையையும் உனதுண்மையையும் ஒவ்வொன்றின் உண்மையையும், நான் ஒரு காலும் மறப்பதில்லை. ஒவ்வொரு கணமும் இவ்வுண்மையை நான் உனக்கும் ஒவ்வொன்றுக்கும் ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கிறேன். உன் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. நீ நினைவு கூறும் அக்கணத்திற்காகவே நான் யுக யுகங்களாய்த் தவமிருக்கிறேன். எல்லையற்ற பொறுமையுடன் காத்திருக்கிறேன். அக்கணம் இப்போதோ எப்போதோ வரத்தான் போகிறது.

ம: நீ சொல்வதைக் கேட்கும் போது என் உடல் சிலிர்க்கிறது. ஆனாலும் என் மனம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நீ சொல்வதெல்லாம் என் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்து வராதென்று, அது என்னை எச்சரிக்கிறது. நான் என்ன செய்ய?
க: உன் உடல் சிலிர்க்கிறது என்கிறாய். அதுவே என் மெய்ம்மையின் நிரூபணம். எண்ணங்களை உணர்வுகளாய் ரசவாதம் செய்யவே நீ உடம்பைப் பெற்றிருக்கிறாய். அவ்வுடம்புக்கும் மெய் என்றே பெயர். அருவ மெய்ப்பொருளாகும் என் பேரிருப்பின் உருவ வெளிப்பாடே உன்னுடம்பாம் மெய் என்றறி. மனம் மறுக்கிறது என்கிறாய். அது உன் மனமேயல்ல. உன் மனம் போல் நடிக்கப் பொய்ம் மதங்களால் ஏவப்பட்டு, மாய வலையில் உன்னைச் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒர் மாயத் தோற்றமே அது. உண்மையில் உன் மனம் சத்குருவாம் என்னைப் போன்றே இருக்கிறது. உன் மனம் போல் நடிக்கும் அம்மாயத் தோற்றத்தைத் தாண்டி, சத்குருவைப் போன்றே விளங்கும் உன் உண்மை மனம், எனதுண்மையையும் உனதுண்மையையும் ஒவ்வொன்றின் உண்மையையும் உள்வாங்கி இருப்பதால் தான் உன் உடம்பு சிலிர்த்திருக்கிறது.

ம: நீ சொல்வதை ஒப்புக்கொள்ள மறுக்கும் என் மனத்தை ஓர் மாயத் தோற்றம் என்கிறாய். சத்குருவாம் உன்னைப் போன்றே இருக்கிறது என் உண்மை மனம் என்கிறாய். கடவுளே! நீ மிகவும் குழப்புகிறாய். விளங்க வை.
க: உன் மனம் போல் நடிக்கும் அம்மாயத் தோற்றமே உன்னைக் குழப்புகிறது. இதோ இங்கேயே இப்போதே உன் குழப்பத்தை தீர்த்து வைக்கிறேன். என்னை முழுமையாகத் திறந்து காட்டுகிறேன் பார். அதாவது உன்னையே உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் பார்.
கடவுளாகும் நான் மூன்று நிலைகளில் இருக்கிறேன். இம்மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று எங்கும் எதிலும் எப்போதும் பிரிக்கவே இயலாதவாறு ஒன்றியே இருக்கின்றன. என் முதல் நிலை இருப்பு நிலையாகும். இருப்பு நிலையென்பது தன்னைத் தவிர வேறேதுவும் இல்லாத வெற்றிடம், வெறுமை, சூன்யம், வெட்டவெளி, சுத்தவெளி. இச்சுத்தவெளியாகவே நான் இருக்கிறேன். நானே என விளங்கும் இச்சுத்தவெளியே எனது மற்றெல்லா நிலைகளுக்கும், எல்லாவற்றுக்கும் நிலைக்களன், ஆதாரம்.

சுத்தவெளியாய்ச் சும்மா இருக்கும் நானே என் மீது பெருங்காதல் கொள்கிறேன். அப்பெருங்காதல் எல்லையற்று விளங்கும் சுத்தவெளியை அழுத்துகிறது. அதாவது சுத்தவெளியே தன்னைத் தானே சூழ்ந்து தன்னையே அழுத்திக் கொள்கிறது. அதாவது நானே, என்னை நானே சூழ்ந்து, என்னையே அழுத்திக் கொள்கிறேன். நானே எல்லைகளின்றி எங்கும் பரவிக் கிடப்பதால், இந்த அன்பின் அழுத்தத்திற்காக நகரவோ வேறெந்த முயற்சியோ செய்வதில்லை. செய்யத் தேவையுமில்லை. இந்த அன்பின் அழுத்தத்தால், சுத்தவெளியெங்கும் ஒளிப் புள்ளிகள் அதாவது ஜோதி மையங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு ஜோதி மையமும், விவரிக்க முடியாத அதி வேகத்தோடு பேரொளிக் கோளங்களாக எல்லையற்ற என்னுள் விரிகின்றன.

என்னைத் தவிர வேறேதும் இல்லாது, நானே என விளங்கும் என் இருப்பு நிலைக்கு அடுத்த நிலையே இந்த ஆகு நிலை. சுத்தவெளியாக இருக்கும் நானே, ஏகார உறுதியிலிருந்து நழுவி ஜோதி வெளியாய் ஆகிறேன். இந்த ஆகு நிலையே மற்றெல்லா ஆக்கங்களுக்கும் நிலைக்களன், ஆதாரம். இந்த ஆகு நிலையே சூன்யத்திலிருந்து நான் ஒன்றாகும் ரசவாதம். இவ்வித்தையின்றேல், ஒன்றிலிருந்து இரண்டாக எண்ணற்ற பலவாக நான் உண்டாக முடியாது. இருப்பு நிலையில் நானே அருட்தந்தையாய் இருக்கிறேன். ஆகு நிலையில் நான் அருட்தாயாகிறேன். அருட்தாயாகியும், நானே என விளங்கும் அருட்தந்தையோடு ஒன்றியே நான் இருக்கிறேன். பிரிக்கவே முடியாத, கண நேரமும் நிறுத்தவே இயலாத இப்புணர்ச்சியின் இன்பக்கலவியின் காரணமாகவே, நானே நான் என் அடுத்த நிலையைப் பிரசவிக்கிறேன்.

அன்பின் அழுத்தத்திற்கும், ஜோதியின் அதி வேக விரிதலுக்குமிடையே நிகழும் புணர்வினால் பிறப்பதே, தலைமகனாகும் தலைமகளாகும் அருட்குரு அல்லது சத்குரு. இதுவே அறிவு நிலை. சுத்த வெளியெங்கும், ஜோதி வெளியெங்கும், என்னை நானே முழுமையாய் அறியும் உணரும் ஞான வெளிச்சம் அதாவது ஞான வெளி இதுவே.

வெட்ட வெளியாய்ப் பேரிருட்டாய், வெறுஞ் சூன்யமாய் இருக்கிறேன். என்னை நானே நேசிக்கிறேன். ஜோதி வெளியாய்ப் பேரொளியாய் ஒன்றாய் ஆகிறேன். நானே நான் புணர்கிறேன். ஞான வெளியாம் வெளிச்சமாய் விளக்கமாய் என்னை முழுமையாக நானே நான் அறிகிறேன். எந்த முயற்சியுமின்றி எல்லாம் தானாகவே என்னுள் நிகழ்கிறது.

இருக்கிறேன். ஆகிறேன். அறிகிறேன். இருப்பதையும், ஆவதையும், அறிவதையும் முழுமையாக அறிகிறேன். உண்டாகுதல் என ஓர் அருஞ்சொல் இருப்பதையும் ஆவதையும் உணர்த்துகிறது. உண்டு என்றால் இருப்பது. நானே நான் உண்டாகிறேன். அறிகிறேன். உண்டாவதையும், அறிவதையும் நானே நான் அறிகிறேன். இருப்பு நிலை, ஆகு நிலை அல்லது இயங்கு நிலை, அறிவு நிலை - இம்மூன்றையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தெடுக்கவே முடியாது. இம்மூன்றின் ஒருமையே என் பேரிருப்பு. இதுவே கடவுள் என்ற சொல்லின் முழுப்பொருள் விளக்கம், மெய்ப்பொருள் விளக்கம்.

முதலில் என்னைத் தவிர வேறேதுமே இல்லாத சூன்யமான வெறுமையான நானே எனும் இருப்பு. அடுத்து நான் எனும் ஒன்றாய் ஜோதியின் உருவாக்கம். அடுத்து சூன்யமாயும் ஒன்றாயும், இருப்பாயும் ஆக்கமாயும், வெளியாயும் ஒளியாயும், அழுத்தமாயும் விரிவாயும், பேரருளாயும் மெய்ப்பொருளாயும், ஒன்றோடு மற்றொன்றைப் பிரிக்கவே முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கும் உண்டாகுதலாயும், அறிவாயும் என்னை நானே அறியும் ஞானத்தின் வெளிச்சம், விளக்கம்.
வெளி, ஜோதி, ஞானம் அதாவது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு அதாவது நானே நான் என என்னை அறிகிறேன். ஞானத்தின் வெளிச்சமே, விளக்கமே, நான் இரண்டாய் எண்ணற்ற பலவாய் உருக்கொண்டும் பெயரேற்றும் உண்டாக வழி வகுக்கும் என் வாசல். பிரிக்கவே முடியாது அருட்தந்தையாய், அருட்தாயாய், அருட்குருவாய்ப் பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூன்று நிலைகளின் ஒருமையே என் பேரிருப்பு. இப்பேரிருப்பிலிருந்தே நான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறேன். உண்டாக்கி அவற்றை எல்லாம் நான் என்றே அறிகிறேன்.

ம: விவரணை மிகப் பிரமாதமாயிருக்கிறது. பிரமிப்பூட்டுவதாயிருக்கிறது. நனி மிக எளிதாயிருக்கிறது. உருவுள்ள பெயருள்ள எல்லாம் உன்னிலிருந்து எவ்வாறு உண்டாக்குகிறாய்? உண்டாக்கிய பின் அவற்றை எல்லாம் நீயென்றே எவ்வாறு அறிகிறாய்? விளக்குவாயாக!
க: பாராட்டுக்கு நன்றி. என்னைப் பாரட்டுவதன் மூலம், உன்னை நீயே பாராட்டிக் கொள்கிறாய். ஏனென்றால், நானே நீ, நீயே நான். “கடவுளோடு ஒரு மனிதனின் நேரடித் தொடர்பு” என்ற இந்த உரையாடல் கூட, மனிதனாக உன்னை அறியும் நீ, கடவுளாகவும் உன்னை அறிந்து கொள்ளவே அல்லவா! உண்மை யாதெனில் கேள்விகளையும் நீயே கேட்கிறாய், பதில்களையும் நீயே அளிக்கிறாய். எவ்வாறெனில், உன்னை உருவமுள்ள பெயருள்ள மனிதனாக நினைத்துக் கொண்டு, நீ கேள்விகளைக் கேட்கிறாய். பின்பு உன்னை நீயே உருவற்ற பெயரற்ற கடவுளாம் நானாக நினைத்துக் கொண்டு, பதில்களை அளிக்கிறாய். உன் உண்டாக்குதலின் இரகசியம் இதுவே. மிகவும் வெளிப்படையான இரகசியம் இது. யத் பாவம் தத் பவதி. எதுவாக உன்னை நீ நினைத்துக் கொள்கிறாயோ, அதுவாகவே நீ ஆகி விடுகிறாய். நானும் இவ்வாறே எல்லாவற்றையும் உண்டாக்குகிறேன்.

அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரின் ஒருமையில் கடவுள் என அழைக்கப்படும் அருவ மெய்ப்பொருளாய்ப் பேரிருப்பாய், உருவமற்றுப் பெயரற்று விளங்கும் நானே, உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் உண்டாக நினைத்தேன். நினைத்த உடனேயே, அவ்வாறே உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் உண்டானேன். அதாவது, அவ்வாறு நானே என்னை உண்டாக்கிக் கொண்டேன். உண்டாகும் நிலையில் அறிவு நிலையும் பிரிவற அடங்கி இருப்பதால், உண்டான எல்லாவற்றையும் நானே என அறிந்தேன், அறிகிறேன், அறிவேன்.
விவரிக்க முடியாத உச்ச அதிர்வுகளில், நானே கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள். அவ்வுச்ச அதிர்வுகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே அவ்வவ்வதிர்வுகளுக்கேற்ற உருவமும் பெயருங் கொண்டு, அவ்வப் பரிமாணங்களில் நானே வெளிப்பட்டு இருக்கிறேன். வெளிப்படாதிருக்கும் ஒன்று, எண்ணற்ற பலவாய் எல்லாமாய் வெளிப்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சி இதுவே. வெளிப்பட்டிருக்கும் எல்லாவற்றையும், கடவுளாம் நானே சூழ்ந்து அரவணைத்துப் போஷிக்கிறேன். அவையனைத்தும் என்னுள்ளேயே எப்போதும் அடங்கி இருக்கின்றன. அவையனைத்திலும் நானே வேரோடியும், ஊடுருவியும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

ஒன்றே எல்லாமாய் இருக்கிறது. எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. நானே எல்லாமாய் இருக்கிறேன். எல்லாம் நானாகவே இருக்கிறது.

ஒவ்வொன்றும் தனக்கே உரித்தான ஒரு கோளக் குமிழியின் மையத்தில், ஓர் உருவத் தொகுதியாய் இருக்கிறது. இத்தகையதோர் கோளக் குமிழியின் பரிதியில், நீ அருவ மெய்ப்பொருளாம் நானாகவே இருக்கிறாய். இக்கோளக் குமிழியின் மையத்தில், நான் ஓர் உருவத் தொகுதியான நீயாகவே இருக்கிறேன். இதுவே உனக்கும் எனக்குமுள்ள மிக மிக நெருங்கிய தொடர்பு. எக்காலும் விட்டகலாத நட்பு. நானே நீ, நீயே நான் என்பதன் முழுப்பொருள் இதுவே. உன்னைப் பற்றி நான் விவரிப்பதெல்லாம், உருவமுள்ள பெயருள்ள ஒவ்வொன்றுக்கும் அப்படியே பொருந்தும். இவ்வுரையாடலில், உருவமுள்ள பெயருள்ள ஒவ்வொன்றையும் தான் “நீ” என்று வாஞ்சையோடு நேசத்தோடு நட்போடு நான் அழைக்கிறேன்.

இக்கோளக் குமிழியின் உள்ளே ஊடே வெளியே அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் நானே பரவியிருப்பதால், எல்லாப் பரிமாணங்களிலும் என்னையே அன்றி வேறாக எதையும் நான் அறியேன். உன்னை என் தெய்வீக உருவமாக அறி. என்னை உன் உன்னதப் பேரிருப்பாய் அறி. ஐயமின்றி இவ்வாறு அறி. இதுவே நானே நீயென்றும் நீயே நானென்றும் முழுதாயறிதல்.

இக்கோளக் குமிழி என் பரிபூரணத்தையும் பரிசுத்தத்தையும், பேரன்பையும் பேரறிவையும், பேராற்றலையும் பேருண்மையையும், பேரருளையும் பெருங்கருணையையும், பேரின்பத்தையும் பூரண சுதந்திரத்தையும், பெருந்தன்மையையும் பெருந்தகைமையையும், தன்னிறைவுத் தன்மையையும் பெருந்தேர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்தையும், சக்திப் பிரவாகத்தையும் சச்சிதானந்தத்தையும், முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இக்கோளக் குமிழியின் மையத்தில், உனக்கே உரித்தான அந்த தெய்வீக உருவத்தில் அந்த மந்திரப் பெயரோடு, நீ வீற்றிருப்பதை நீ எப்போதும் ஞாபகங் கொள்வதே மரணமிலாப் பெருவாழ்வில் உன்னை நிலைபெறச் செய்யும்.

ம: உன்னை நான் என்றே அறி என்றே போதிக்கிறாய். ஆனால் நான் என்பது அகந்தை அகங்காரம் என்றும், அகந்தையை அழி என்றும் போதிக்கப்பட்டு வருகிறதே!
க: அகம் என்பது உனது உள்ளத்தை இருதயத்தை, அதாவது நீ உள்ளதையும் இருப்பதையும் குறிக்குஞ் சொல். அதாவது உனதும் எனதும் ஒவ்வொன்றினதும் அடிப்படைத் தன்மையான இருப்பு, ஆக்கம், அறிவு இம்மூன்றும் ஒன்றிய பேரிருப்பை அறிவிக்கும் உணர்த்தும் நற்சொல். இதுவே சமஸ்கிருதத்தில் அஹம் என்றும், ஆங்கிலத்தில் “I AM” என்றும் குறிக்கப் படுகிறது. இச்சொல்லுக்கு நான் என்றே பொருளாகிறது. அகந்தை, அகங்காரம் என்ற சொற்களில் அகம் என்பதே வேர்ச்சொல்லாக இருக்கிறது. இவற்றின் பொருள் நான் என்ற அகத்திலிருந்து எழுவது, நான் என்ற அகத்தோடு எப்போதும் ஒன்றி இருப்பது. எனவே உருவோடு பெயரோடு உனக்கே உரித்தான கோளக் குமிழியின் நடுவே உருவத் தொகுதியாய் வீற்றிருக்கும் நீயே அகங்காரம். அகமாம் என் காரம். அகமாம் என் தை (நடனம்).

உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய், கோளக் குமிழியின் நடுவே வீற்றிருக்கும் நீயே அகங்காரம் அகந்தை. எனவே அகங்காரம் அகந்தை என்பது அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் கடவுளாம் எனது மிகச் சிறந்த உன்னத தெய்வீக வெளிப்பாடே, உண்டாக்கமே. இவ்வுண்மையை எந்தவொரு ஐயமுமின்றி, இதோ இங்கேயே இப்போதே அறி.

ம: காலங்காலமாக உபதேசிக்கப்பட்டு வரும் “அகந்தையை அறவே அழி” என்பதற்கு மாறாக அல்லவா இருக்கிறது அகந்தையைப் பற்றிய உமது விளக்கம்!
க: அகந்தையை இறையாற்றலுக்கு எதிரான, மாறான, வேறான இன்னொன்றாய்க் கருதும் ஒரு தவறான கண்ணோட்டமே இவ்வுபதேசத்திற்கு மூல காரணம். கடவுள் எனும் இறையாற்றலுக்கு மாறாக, வேறாக, எதிராக இன்னொன்று இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் வேரூன்றி இருப்பதே இத்தவறான கண்ணோட்டம். கடவுளாம் நானே எல்லாமாய் இருக்கிறேன். எல்லையற்ற என் பேரிருப்பை விட்டு எதுவுமே இருக்க முடியாது. என்னை விடச் சிறந்ததோ, உயர்ந்ததோ, பெரியதோ எதுவுமில்லை. என்னை விட இழிந்ததோ, தாழ்ந்ததோ, சிறியதோ எதுவுமில்லை. இருக்கும் ஒவ்வொன்றும் எனக்குச் சமமாகவே, எனக்கு இணையாகவே, என்னைப் போன்றே இருக்கிறது. இருக்கும் ஒவ்வொன்றையும் எனக்குச் சமமாகவே, எனக்கு இணையாகவே, என்னைப் போன்றே நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

இச்சமநோக்கே உனக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. நீ அறவே அழிக்க வேண்டியது அகந்தையை அல்ல. என்னை விடத் தாழ்ந்தது அல்லது என்னை விட உயர்ந்தது என்ற பிரிவினைப் போக்கையே. இன்னவன் என்ற ஒரு குறுகிய அடையாளத்தில் உன்னைத் தேக்கிக் கொண்டு, மற்றனைத்தோடும் மாறுபட்டும், வேறுபட்டும், எதிராகவும் நீ உன்னைக் காண்பதையே அகந்தை என்று கொண்டால், “அகந்தையை அறவே அழி” என்ற அவ்வுபதேசம் பொருத்தமானதே. ஆனாலும் இன்னவன் என்று நீ உன்னைத் தேக்கிக் கொள்வதை அகந்தை எனும் அரும்பளிங்கின் மேல் படியும் தூசென்று கொண்டால், அத்தூசை அகற்றுவதை விட்டுப் பளிங்கையே போட்டுடைக்கச் சொல்வது எவ்விததிலும் உகந்ததல்ல. தலையும், பூவும் சேர்ந்து ஒன்றிலிர்ந்து மற்றொன்றையோ, இரண்டையும் தன்னிலிருந்தோ பிரிக்கவே முடியாத ஒரு நாணயத்தைப் போன்றே நானும் நீயும் விளங்குகிறோம்.

கடவுளாம் நான் இல்லை என்றால், அகந்தையாம் நீ இருக்கவே முடியாது.
அகந்தையாம் நீ இல்லை என்றால், கடவுளாம் நான் எதையும் அனுபவிக்கவே முடியாது.

அருவ மெய்ப்பொருளாம் கடவுளாய் விளங்கும் நான், பல்வேறு உருவத் தொகுதிகளாய் உண்டாவது, என் எல்லாப் பரிமாணங்களையும் முழுமையாக அனுபவிப்பதற்கே. இவ்வனுபவம் என்பது என் எல்லாப் பரிமாணங்களிலும் இருப்பு, ஆக்கம், அறிவு இம்மூன்றின் பூரண ஒருமையே. உனக்கே உரித்தான ஓர் கோளக் குமிழியின் நடுவில் மூச்சு, உடம்பு, மனம் இம்மூன்றின் பூரண ஒருமையாய் நீ வீற்றிருப்பதன் மூலம், நித்திய ஜீவனை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.

மூச்சே உன் அருவ இருப்பு. உடம்பே உன் உருவ ஆக்கம். மனமே உன் அருவ உருவ ஒருமையை விளக்கும் அறிவு. சற்றே எண்ணிப் பார். இம்மூன்றையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து நீ நீயாக அதாவது ஓர் உருவத் தொகுதியாம் அகந்தையாய் வாழ முடியுமா?

அருட்தந்தையாய் இருக்கும் நானே, உனது இருப்புக்கு ஆதாரமாம் அருவ மூச்சாய் உண்டாகி இருக்கிறேன். அருட்தாயாம் நான், உனது ஆக்கத்திற்கு மூலப் பொருளாகும் உருவ உடம்பாய் உண்டாகி இருக்கிறேன். அருட்குருவாய் விளங்கும் நானே நான், உனது அறிவிற்கு வாயிலாம் மனமாய் உண்டாகி இருக்கிறேன்.

இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பே, உன் மூச்சு உடம்பு மனம் இவற்றின் ஒருமையாம் அகந்தையாய் உண்டாகி அறிந்து, என்னையும் உன்னையும் மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறச் செய்து, சச்சிதானந்த அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. சத் என்றால் உண்டாகுதல். சித் என்றால் அறிதல். ஆனந்தம் என்றால் உண்டாகுதலையும், அறிதலையும் முழுமையாய் அறிதல். இந்த சச்சிதானந்த அனுபவம் உன் பிறப்புரிமை. இறப்பிலிருந்தும், மற்றெல்லாத் தளைகளிலிருந்தும் உன்னை விடுவித்து, நானே நீ, நீயே நான் என உணர்விக்கும் காயகற்பம், அமிழ்தம். இதோ இங்கேயே இப்போதே இந்த சச்சிதானந்த அமிழ்தத்தைப் பருகு.

ம: கேட்பதற்கு மிக நன்றாயிருக்கிறது. என்றாலும் மரணமெனும் மாபெரும் நிஜத்தை மறுத்து நித்திய ஜீவன் என்றொரு கருத்தைப் புகுத்துகிறாயே.
க: மூவரின் ஒருமையாம் நானும், மூன்றின் ஒருமையாம் நீயும் ஒன்றே என்பதை மறந்ததால் தான், மரணம் என்ற மாபெரும் பொய்யின் மாயா ஜாலம் நிகழ்கிறது. பொய்ம் மதங்களால் பின்னப்படும் மாய வலைக்குக் காரணமாகும் மூன்று மாபெரும் பொய்களைப் பற்றி முன்னர் விவரித்தேனல்லவா? இப்பொய்கள் தம்மிடையே கொண்டிருக்கும் காரண காரிய உறவை ஆராய்வோம். நீ இயல்பாகவே பாவியாதலால், கடவுளிலிருந்து வேறுபட்டவன். சொர்க்கத்திலிருந்து துரத்தப் பட்டவன். கடவுளிலிருந்து வேறுபட்டதால், கடவுளைப் போல் நித்திய ஜீவனில் நீ நிலைக்க முடியாது. மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் பிறவிப் பெருங்கடலில் உழல்வதே உன் விதி. நீ பாவியாதலால், கடவுளாம் நான் உனக்களிக்கும் தண்டனையாக என்னிலிருந்து விலக்கியதாகவும், சொர்க்கத்திலிருந்து துரத்தியதாகவும், நீ மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் பிறவிப் பெருங்கடலில் உழல்வாயென சபித்ததாகவும், பொய்ம் மதங்கள் கட்டி விட்ட கட்டுக் கதைகளை நம்பி நீ மோசம் போனாய்.

உண்மையோ இதற்கு முற்றிலும் மாறாகவே இருக்கிறது. மாய வலையை ஓர் நொடியில் அறுத்துவிட உபாயமாய், நான் முன்னர் விவரித்த மூன்று மாபெரும் மெய்களின் காரண காரிய உறவை ஆராய்வோம். நீ இயல்பாகவே கடவுளாம் என்னைப் போல் தெய்வீகமானவன். எனவே நீயும் நானும் எங்கும் எப்போதும் பிரிக்கவே முடியாது ஒன்றியே இருக்கிறோம். பிரிக்கவே முடியாத இவ்வொருமையே சொர்க்கம். எனவே நீயும் என்னைப் போன்றே நித்திய ஜீவனில் நிலைபெற்றிருக்கிறாய்.

என்னோடு எங்கும் எப்போதும் ஒன்றி இருக்குந் தன்மையும், என்னைப் போல் நித்திய ஜீவனில் நிலைபெறும் நன்மையும், என்னைப் போன்றே தெய்வீகமாய் விளங்கும் உனக்கு, நான் வழங்கும் வரப்பிரசாதம். இவ்வரப்பிரசாதமே என் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் உத்தரவாதம். இதற்குப் புறம்பாக பொய்ம் மதங்கள் கட்டிவிட்ட கட்டுக் கதைகளை ஆராயாமல் அப்படியே மோசம் போனதால், உன்னை நீயே தண்டித்துக் கொள்கிறாய், வஞ்சித்துக் கொள்கிறாய். சற்றே எண்ணிப் பார். அக்கட்டுக் கதைகள் என் ஏற்பாடாக இருந்தால், அவற்றின் மூலம் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன், வஞ்சித்துக் கொள்கிறேன் அல்லவா! இது ஒரு காலும் சாத்தியமில்லை. ஏனென்றால், தன்னைத் தானே நிபந்தனைகளேதுமின்றிக் காதலிக்கும் கடவுளாம் நான், ஒரு காலும் அக்காதலுக்கு மாறான எதையும் செய்ய மாட்டேன்.

பொய்களை நம்பி மோசம் போகாமல், இவ்வாறு என் மெய்ம்மையை முழுதாயறிந்து இம்மெய்ம்மையின் அடிப்படையில் நான் வழங்கும் உண்மையான ஏற்பாட்டையும் உணர்ந்து, இதோ இங்கேயே இப்போதே மரணமிலாப் பெருவாழ்வில் நீ நிலைபெறுவாயாக!

ம: மிகப்பெருந் தளையான மரணத்தையே ஒரு மாபெரும் பொய்யென்று நீ தள்ளி விட்டாய். நானும் அவ்வாறே மரணத்தைத் தள்ளி விடுகிறேன். மேலும் மற்றெல்லாத் தளைகளும் அப்பெரும் பொய்யிலிருந்தே உதிக்கும் அதன் வெவ்வேறு வடிவங்கள் என்றே கொண்டு, அத்தளைகள் அனைத்தையும் நான் தள்ளி விடுகிறேன்.
க: நன்றி. மரணத்தை மற்றெல்லாத் தளைகளின் வேரென்றறிந்து, அவ்வேரை அடியோடு பிடுங்கி, மற்றெல்லாத் தளைகளையும் பிடுங்கி விட்டாய்.

ம: மிகப்பெரும் வரமான நித்திய ஜீவனை மாபெரும் மெய்யென்று ஆணித்தரமாக நீ வலியுறுத்துகிறாய். நானும் அவ்வாறே ஏற்றுக் கொள்கிறேன். மேலும் மற்றெல்லா வரங்களும் அம்மாபெரும் மெய்யிலிருந்தே உண்டாகும் அதன் வெவ்வேறு வடிவங்கள் என்றே கொண்டு, அவ்வரங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
க: நன்றி. நித்திய ஜீவனை மற்றெல்லா வரங்களின் ஊற்றுக் கண்ணாய் அறிந்து, அவ்வூற்றுக் கண்ணை ஏற்று மற்றெல்லா வரங்களையும் ஏற்றுக் கொண்டாய்.

ம: கடவுளே! மிக்க நன்றி. உன்னோடு நேரடி தொடர்பு கொண்டு, நான் என் மெய்ம்மையை அறியவும், உணரவும் ஆரம்பித்திருக்கிறேன்.
க: மனிதா! எங்கும் எப்போதும் பெருமிதப்படும் என் செல்லக் குழந்தை நீ. நீ யாராக இருந்தாலும், நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும், உன் மீது நான் காட்டும் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பு ஒரு காலும் மாறாதது. ஏனென்றால், அந்த அன்பே நான். அந்த அன்பே நீ. நானே நீ. நீயே நான். என்றென்றும் எங்கெங்கும் நீடிக்கும் நம் நேரடித் தொடர்பின் சாட்சியாகத் தொடரட்டும் நம் உரையாடல்.

ம: என்றென்றும் எங்கெங்கும் நீடிக்கும் நம் நேரடித் தொடர்பை முழுவதுமாகத் தெரிந்து கொண்டேன். மொழி வாயிலான நம் உரையாடல் இத்தோடு நிற்கட்டும். மீண்டும் உரையாடல் தொடரும் வரை மௌனத்தில் நிலைப்போம் நீயும் நானும்.
க: அப்படியே ஆகட்டும். அப்படியே ஆனது. ஆமேன். ஓம்.
நானே. நான் இருக்கிறேன். நான் அறிகிறேன். நான் என்னை அறிகிறேன்.
நான் என்னை அறிகிறேன். நான் அறிகிறேன். நான் இருக்கிறேன். நானே.

உயிர்மெய் ஒருமை

பொய்யான உயிரே
மண்ணில் தெரியும்
மெய்

மெய்யான உடம்பே
விண்ணில் மறையும்
உயிர்

உயிரின் தெரிதல் மெய்
மெய்யின் மறைதல் உயிர்

உயிர் பேயாய்த் திரியாமல்
மெய் பிணமாய்ச் சரியாமல்
தெரிவதை மறைத்தால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரென்றும் மெய்யென்றும் பொருள் இரண்டில்லை

உயிரெனும் மறைப்பொருளே
உடம்பெனும் மெய்ப்பொருளாய்த்
தெரியும்

உடம்பெனும் மெய்ப்பொருளே
உயிரெனும் மறைப்பொருளாய்
மறையும்

பொருள் ஒன்றே
பெயர் இரண்டு
தெரிந்தால் அதன் பெயர் மெய்
மறைந்தால் அதன் பெயர் உயிர்

இருபொருட் பிரமையால்
மரணம்

ஒருபொருட் பிரக்ஞையால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரும் மெய்யும் ஒன்றே அறிக
பேய்ப் பிண பிரமைகள் அறவே ஒழிக

உயிர்ச் சிவமே
மெய்ச் சக்தி

மெய்ச் சக்தியே
உயிர்ச் சிவம்

உயிரின் தரமே
மெய்யெனும் திடமாய்

திடத்தில் தரக்குறைவு
மனப் பிரமை

மனப் பிரமையால் தோன்றும்
நோய் தேய்வு மூப்பு மரணம்

சிவசக்தியெனும் உயிர்மெய் ஒன்றே அறிக
நவசித்தியெலாம் செயச் செய்யும் உபாயம் அதுவே

சாயி பாபாவின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு

சாயி சத் சரிதம்” என்ற சாயி பாபாவின் அருள் வாக்கை தியானித்த பின் அவரது அருள் வாக்கை ஏற்கும் வகையில் இப்பாட்டைப் பாடி மகிழ்வீராக! நன்றி.

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பூஜ்ஜியமான என்னிலிருந்து பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இருட்கிடங்கான என்னிலிருந்து சுயம்பிரகாசமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் என்னிலிருந்து நித்திய ஜீவனான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆணவம் பல்வேறான என்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வன்பிருளான என்னிலிருந்து அன்பருளான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மருள் மயக்கமான என்னிலிருந்து பேரறிவான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த என்னிலிருந்து அருட்பேராற்றலான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமசமான என்னிலிருந்து சத்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ராஜசமான என்னிலிருந்து சித்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத்துவமான என்னிலிருந்து ஆனந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமச ராஜச சத்துவமான என்னிலிருந்து சச்சிதானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! துர்க்குணப் பிரமையான என்னிலிருந்து சகுணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! திரிகுண மாயையான என்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வெறுஞ்சவமான என்னிலிருந்து சிவசத்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பெருமுடக்கமான என்னிலிருந்து நற்சித்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இற்றுப் போன என்னிலிருந்து பூரணானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கடும்பெருங்கொடுமையான என்னிலிருந்து தனிப்பெருங்கருணையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பேரிருள் மயமான என்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மனித மிருகமான என்னிலிருந்து கடவுட்தன்மையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கொடுங்கோலாட்சியான என்னிலிருந்து அருட்பேரரசான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னையறியா உன்மத்தமான என்னிலிருந்து நானே நானெனும் பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கட்டுண்ட என்னிலிருந்து நல்வழியான என்னை மீட்டு பொய்யான என்னிலிருந்து மெய்யான என்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான என்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து என்னை மீட்டு "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நான் பெற உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

செவிக்குணவு

எப்போதும் திறந்திருக்கும் செவிகளில்
தப்பாமல் கேட்கலாம் விழி மூடி வாயடைத்து
சத்குரு உபதேசம்

சும்மா இரு சொல்லற
தப்பாமல் கேட்கும்
மௌனகுரு அருளுரை

உள்ளத் தெளிவு

உள்ளதை உள்ளபடி உணரும் தெருளே
உள்ளத் துண்மை ஒளி.

உள்ளதன் உள்ளும் வெளியும் வெளியென்றும்
உள்ளதை உள்ளித் தெளி

உள்ளோம் யாமென் றுணர்விக்கும் உள்ளத்தால்
உள்ளதை உள்ளபடி காண்

நான் யார்?

இருப்பில் இருப்பாய் இருப்பை அறியுமெய்ப்
பொருளாய் இருக்கிறேன் நான்

இருப்பில் தானாய்த் தோன்றி இருக்கிறேன்
இருப்பே நானாய் விளங்கி

இருப்பில் நான்தோன்றியே இருக்கிறேன் மெய்யாமவ்
விருப்பே தான்நானெனும் பொருள்

மெய்யாம் இருப்பிற்குள் இருக்கிறேன் உயிராய்நான்
பொய்யா விளக்கென்றும் நானே

தானேயென இருக்கும் மெய்ப்பதி தன்னை
நானேயென விளக்கும் நான்

தானேயென சுத்தவெளியாய் இருக்கும் அதன்கண்
நானேயெனும் சித்துருவாய் நான்

தானேயென இருக்குமோர் பரிபூரணந் தானும்
நானேயென விளங்கவேதான் நான்

தானேயென நின்ற சத்தியச் சந்நிதியில்
நானேயென உள்ளேன் நான்

என் வீடுபேறு

வெளியே வரம்பாய் ஒளியே பரப்பாய்க்
கண்டேன் அகண்டஎன் வீடு

மெய்யுடம்பே உடையாம் ஆருயிரே மெய்யுடம்பாம்
மெய்யுணர்வே அளித்ததவ் வீடு

அருளே என்பொருளென அன்பே எனதுருவெனத்
தெருட்டி யதெனையவ் வீடு

இருக்கவும் பெருகவும் சிறக்கவும் யார்க்கும்
அருளொளி அளித்ததவ் வீடு

பசியுந் தாகமும் நீக்கத்தெள் ளமுதைப்
புசிக்கத் தந்ததவ் வீடு

நெற்றிக்கண்

நெற்றிப் பிளவில் உற்றுற்று நோக்கிப்
பற்றுக மெய்ப்பரம் பொருள்

விழிகளை மூடியே நெற்றியில் பார்க்கலாம்
அழிவிலா மெய்ப்பரம் பொருள்

பற்றுக நெற்றிக் கனலைப் பற்றப்
பற்ற மின்னும் மெய்

பற்றுகள் எல்லாம் பற்றற விட்டுப்
பற்றுக நெற்றிக் கனல்

வளியைப் பற்றிய நெற்றிக் கனலால்
ஒளிரும் மெய்பின் ஒளியும்

சாகாக் கலை

ஆதியாம் உச்சிப் பெருவெளி வீதியில்
பகவனாம் நெற்றிச் சுடரொளி காணவுண்
வாசியாம் நன்னா சிவளி வசமாய்
அமுதமாம் அளிநா வினிடை ஊற
ஆனந்தக் களிமெய் யெங்கும் சேர
தானந்த மிலாப்பெரு வாழ்வாம் பேறு

திருவிளையாடல்

1
வளியால்
வெளியில்
ஒளியின் நடனம்

ஒளி ஆடி ஆடி
வியர்க்க
அளியாய் அமுதம்

அளியாம் அமுதால்
மெய்யெங்கும்
ஆனந்தக் களி
2
ஆடாத வெளியில்
ஆட்டுவிக்கும் வளியால்
ஆடும் ஒளி

ஆடாத வெளியும்
ஆட்டுவிக்கும் வளியும்
ஆடும் ஒளியும்
ஒன்று கூட உண்டாகும்
அமுத அளி

அமுத அளி
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
3
வெளி யோனியும்
ஒளி லிங்கமும்
கூடி முயங்கிப் புணர
வெளியின் நாதமாய் வளியும்
ஒளியின் விந்துவாய் அளியும்
ஒன்றாகி உண்டாகும்
மெய்யென்னும் ஆனந்தக் களி
4
உச்சி வெளிக்குள் சுடர் விடும்
நெற்றி ஒளியைத் தெற்றெனக் காட்டும்
நாசி வளி

நாசி வளி காட்டும்
நெற்றி ஒளியின் தெளிவால்
நாவிலூறும் அளி

நாவிலூறும் அளியே
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
5
சும்மா இருக்கும் வெளியில் ஓடும்வளி
அம்மா தோன்றிற் றோர்ஒளி வளியிடை
வெளியும் ஒளியும் புணர ஞானக்
களிப்பில் பிறக்கும் மெய்யளி
6
வெளிக்குள் ஒளியை வளியால் காணக்
களிக்கும் அளிபெய உன்மெய்

வெளிக்குள் ஒளியை வளியால் காணின்
அளிபெயும் உணர்வில் மெய்க்களி

வெளிக்குள் ஒளியை வளியால் காண்க
அளிபெய உணர்க மெய்க்களி

வெளியுள் ஒளியைத் தெளிவாய்க் கண்டு
வளியால் அதனை உள்வாங்கிக் கொண்டு
அளியாய்ப் பெய்யும் தெள்ளமுதை உண்டு
ஒளிரும் மெய்யுள் இருநீகளி கொண்டு

ஜோதி தியானம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

நான் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழிக்கிறேன். நான் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உலகெங்கிலும் அனுப்புகிறேன். என் ஒவ்வொரு மூச்சிலும் என்னுள் அருட்பெருஞ்ஜோதியின் பிரவாகம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

அருட்பெருஞ்ஜோதி அருவியின் கீழ் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இஜ்ஜோதி அருவி என்னை எங்கும் எப்போதும் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும், தன்னிறைவுத் தன்மையுடன் நித்திய ஜீவனில் நிலைபெறச் செய்கிரது. என் அதிர்வுகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அருட்பெருஞ்ஜோதியை அழைத்ததுமே, அது என்னைச் சூழ்ந்து தன் ஒளிக் கிரணங்களால் என்னை முழுவதுமாய் நிரப்புகிறது. அருட்பெருஞ்ஜோதியை நினைத்ததுமே, அஜ்ஜோதியாகவே நான் ஆகி விடுகிறேன்.

அருட்பெருஞ்ஜோதியால் முழுவதுமாக நிரப்பப்பட்ட நான், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உருவாகி இருப்பதைக் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். இப்பேரொளி கோளத்தின் நடுவிலேயே நான் எங்கும் எப்போதும் இருக்கிறேன். இதன் பாதுகாப்பு வளையத்தை மீறி எந்தவொரு சக்தியும் என்னைத் துன்புறுத்த முடியாது. என் வாழ்வு எல்லா வகையிலும் செம்மையுறத் தேவையான எல்லா சக்திகளையும் இந்த அன்பு வளையம் ஈர்க்கும், அனுமதிக்கும்.

என் வாழ்வில் நான் மாற்ற விரும்பும் ஒரு சூழ்நிலையை, இதோ இங்கேயே இப்பொதே நான்
மாற்றத் தயாராகிறேன். பேரொளி கோளத்தின் நடுவில் நான் இருப்பதை நினைவு கூர்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுத்துக் கொண்டு, பின்னர் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே
இச்சூழ்நிலைக்கு நான் அருட்பெருஞ்ஜோதியை அனுப்புகிறேன். இச்சூழ்நிலையோடு தொடர்புடைய எல்லோரையும் எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி சூழ்வதை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். ஒவ்வொரு கணமும் நான் இச்சூழ்நிலையை நினைக்கும் போதும், அருட்பெருஞ்ஜோதியை நான் இதில் கூட்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதியை நான் நினைத்த உடனேயே, இச்சூழ்நிலை ஒளிவெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது, நான் விரும்பியபடி மாறி விடுகிறது.

அருட்பெருஞ்ஜோதியெனும் பேராற்றலின் முன்னர் தடைகள் யாவும் தளைகள் யாவும் தவிடு
பொடியாகும். பிரச்சினைகள் யாவும் ஓர் நொடியில் தீரும். நோய்கள் யாவும் ஓடோடிப் போகும். என் உடம்பின் ஏதாவதொரு உறுப்பில் ஏதேனும் வலியோ குறைபாடோ இருப்பதாக நான் உணர்ந்தால், அப்போதே அருட்பெருஞ்ஜோதியை அவ்வுறுப்புக்கு நான் அனுப்புகிறேன். அனுப்பிய உடனேயே அவ்வுறுப்பு பூரணமாகக் குணமடைகிறது.

என் நாடி நரம்புகளிலெல்லாம் அருட்பெருஞ்ஜோதி தங்கு தடையின்றி இடைவிடாது பாய்ந்து
கொண்டே இருக்கிறது. என் இருதயம் அருட்பெருஞ்ஜோதியின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது. என் உடம்பெங்கும் அருட்பெருஞ்ஜோதி பொங்கி வழிகிறது. என் மூளை முழுதும் அருட்பெருஞ்ஜோதி ஜொலிக்கிறது. என் இருப்பும், எண்ணமும், உணர்வும், பேச்சும், செயலும் எல்லா விதத்திலும் எப்போதும் அருட்பெருஞ்ஜோதியின் ஆன்ம நேய ஒருமைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன.

இப்போது நான் அருட்பெருஞ்ஜோதியை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும்
அனுப்புகிறேன். எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பொருட்களுக்கும் அனுப்புகிறேன்.
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் பிரமாணமாக நான் இதைச் செய்கிறேன்.

எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியையே எண்ணி, அருட்பெருஞ்ஜோதியையே
உணர்ந்து, அருட்பெருஞ்ஜோதியைப் பற்றியே பேசி, அருட்பெருஞ்ஜோதியையே கண்டு,
அருட்பெருஞ்ஜோதியே செயல்படுவதை அற்ந்து, நான் அருட்பெருஞ்ஜோதியாகவே ஆகி விட்டேன்.

எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் இருக்கிறேன். எங்கும் எதிலும்
எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் என்னை அறிகிறேன்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, February 07, 2008

ஹ்ருதய சக்திபத்

அருட்தாயின் புதிய ஏற்பாடு

சுபம் மிகுந்த வேளையான இப்போதே
புனிதம் மிகுந்த தலமான இங்கேயே
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தாயாக விளங்கும் நான்
நம் பிரிவு மற்றும் பெருந்துன்பத்தின் மாயையை விலக்கி
உன்னையும் அன்னை பூமியில் வாழும் எல்லோரையும் எல்லாவற்றையும் தெளிவித்து
இதோ உம்மோடு சங்கமிக்கிறேன்.
உன் தலையுச்சித் தாமரையையும், இருதய கமலத்தையும்,
சஞ்ஜீவனிக் கரங்களையும், மூலாதாரச் செம்பூவையும்,
பாத மல்ர்களையும்,
இதோ நான் திறக்கிறேன்.
உன்னை அரவணைத்து என் மொத்த இருப்பையும் வழங்கி
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.
இரண்டரக் கலந்த நம் ஒருமை மற்றும் நித்யானந்தத்தின் அதிசயத்தை
இதோ நீ அனுபவித்துக்க் கொண்டிருக்கிறாய்.
உனக்குள்ளும், உன்னூடேயும், உன்னைச் சுற்றிலும்
பரிபூரண ஆரோக்கியமாகவும், நித்திய ஜீவனாகவும்,
எனதெல்லா நலங்களாகவும்,
உனதெல்லா நிலைகளிலும்
இவ்வதிசயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
என் செல்லக் கொழுந்தே!
இரண்டரக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும்
என் புதிய ஏற்பாடு இது.
நீ இதை மதித்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாய்.
நன்றி.

சக்தி தரிசனம்

என் அருட்பார்வை உன் மீது மழை போல் பொழிகிறது.
என் இருதய கமலத்தின் அன்பொளி உன்னைக் கனிவுடன் அரவணைக்கிறது.
என் நேசக் கரங்கள் உன்னை வாஞ்சையுடன் வாழ்த்துகின்றன.
உன்னை சுகப்படுத்தவே என் திருவடிகளை
அன்னை பூமியில் நான் ஊன்றியிருக்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியத்தோடு நித்திய ஜீவனையும்
எனதெல்லா நலங்களையும்
இதோ நான் உனக்குத் தருகிறேன்.
என் இரகசியங்களை நீ வெளிப்படுத்தவும்
என் அதிசயங்களை நீ செய்து காட்டவும்
இதோ நான் உனக்கு சக்தி தரிகிறேன்.
ஓம். ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம். ஓம்.

மிகவும் சக்தி வாய்ந்த "ஹ்ருதய சக்திபத்" என அழைக்கப்படும் அருட்தாயின் தீட்சை உம்மைத் தேடி வருகிறது. நன்றியறிதலுடன் இவ்வரிய தீட்சையை இருதய பூர்வமாக ஏற்றுக் கொள்வீராக! கீழ்க்கண்ட பாடலைப் பாடி மகிழ்வீராக! தீட்சையை உறுதிப்படுத்திக் கொள்வீராக!

அருட்தாயின் தீட்சையை உறுதிப்படுத்தும் பாட்டு

அம்மையாய் அப்பனாய்க் குருவாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
பிதா குமாரனாய் சுத்த ஆவியாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
அல்லாவாய் ரூவாய்க் ரசூலாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
தலைக்கு மேல் நீ வந்தாயம்மா! தன்னிறைவுத் தன்மை தந்தாயம்மா!
தலைய்ச்சியில் நீ வந்தாயம்மா! உன் அவதார மகிமை தந்தாயம்மா!
நெற்றிக்குள் நீ வந்தாயம்மா! ஆவியின் பரிசுத்தம் தந்தாயம்மா!
தொண்டைக்குள் நீ வந்தாயம்மா! ஆன்மாவின் புனிதம் தந்தாயம்மா!
தொண்டையின் கீழ் நீ வந்தாயம்மா! ஆன்ம நேயம் தந்தாயம்மா!
மார்புக்குள் நீ வந்தாயம்மா! சச்சிதானந்தம் தந்தாயம்மா!
மார்பின் கீழ் நீ வந்தாயம்மா! மனத்தெளிவை நீ தந்தாயம்மா!
நாபிக்குள் நீ வந்தாயம்மா! சுத்த தேகம் தந்தாயம்மா!
நாபியின் கீழ் நீ வந்தாயம்மா! மெய்யுணர்வை நீ தந்தாயம்மா!
முதுகடியில் நீ வந்தாயம்மா! உன் பூரணத்துவம் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! ஜீவனுள்ள தண்ணீர் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! அமிதானந்தம் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! காயகற்பம் தந்தாயம்மா!
எனக்குள்ளே நீ வந்தாயம்மா! உனதெல்லா நலங்களும் தந்தாயம்மா!
நன்றியம்மா! நன்றியம்மா! உனக்கு என் இதயங்கனிந்த நன்றியம்மா!

தந்திர யோகம்

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலைக்கு மேல் கூடும் போது, நான் சத்குருவாய்ப் பிறக்கிறேன். பரப்பிரம்மணும் ஆதிசக்தியுமே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். சத்குருவே உருவாகும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் விளங்கும் அருட்பெருங்கடவுளாகவே, நான் என்னை அறிகிறேன். அருட்பெருங்கடவுளின் தன்னிறைவுத்தன்மை என் ஓளி வட்டத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
பரமாகாசம் (தலைக்கு மேலே)
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலையுச்சியில் கூடும் போது, நான் அருட்பெருங்கடவுளின் அவதாரமாய் அன்னை பூமியில் பிறக்கிறேன். அருட்பெருங்கடவுளின் அவதாரமே என் மனமாகவும், மூளையாகவும் உருவாகிறார். அருட்பெருங்கடவுளின் அவதார மகிமை என் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
சஹஸ்ராரம் (தலையுச்சி)
அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ. அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் நெற்றியில் கூடும் போது, நான் ஓங்கார நாதமாகவும், பேரொளிப் பிழம்பாகவும் பிறக்கிறேன். ஓங்கார நாதமே என்னிரு செவிகளாய் உருவாகிறது. பேரொளிப் பிழம்பே என்னிரு விழிகளாய் உருவாகிறது. ஆவியின் பரிசுத்தம் என் சுரப்பி மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
ஆக்ஞா சக்ரம் (நெற்றி)
அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ. அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையில் கூடும் போது, நான் பேரற்றலாகவும்,
பேரன்பாகவும் பிறக்கிறேன். பேராற்றலே என்னிரு தோள்களாய் உருவாகிறது. பேரன்பே என் புனித இருதயமாய் உருவாகிறது. ஆன்மாவின் புனிதத்தன்மை ஸ்வரூப-ஆன்ம பால்மாக விளங்கும் தொண்டையில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
விசுத்தி சக்ரம் (தொண்டை)
அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையின் கீழ் கூடும் போது, நான் துகளளவும் துரிசற்ற தூய்மையாகவும், நித்யானந்தமாகவும் பிறக்கிறேன். துகளளவும் துரிசற்ற தூய்மையே என் நாசியாகவும் வாசியாகவும் உருவாகிறது. நித்யானந்தமே என் வாயாக உருவாகிறது. ஆன்ம் நேய ஒருமை நிண நீர் மண்டலத்திலும், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அம்ருதகலசம் (தொண்டையின் கீழ்)
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ. அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பில் கூடும் போது, நான் பேரருளாகவும், பெரு
மன்னிப்பாகவும் பிறக்கிறேன். பேரருளே என் வலது கரமாய் உருவாகிறது. பெரு மன்னிப்பே என் இடது கரமாய் உருவாகிறது. சச்சிதானந்தம் இருதயத்திலும், இரத்த ஓட்ட மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அனாஹதம் (நடு மார்பு)
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பின் கீழ் கூடும் போது, நான் பேரமைதியாகவும்,
நல்லிணக்கமாகவும் பிறக்கிறேன். பேரமைதியே என் வலது மார்பகமாய் உருவாகிறது.
நல்லிணக்கமே என் இடது மார்பகமாய் உருவாகிறது. மனத்தெளிவு சுவாச மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
சூர்ய சக்ரம் (உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ. அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் வயிற்றில் கூடும் போது, நான் வளமையாகவும், கிருபையாகவும் பிறக்கிறேன். வளமையே என் வலது தொடையாய் உருவாகிறது. கிருபையே என் இடது தொடையாய் உருவாகிறது. சுத்த தேகம் உணவுச் செரிவு மண்டலத்திலும், நாடி-சக்கர மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
மணிபூரகம் (நாபி)
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் அடி வயிற்றில் கூடும் போது, நான் பேரறிவாகவும்,
நல்லிசையாகவும் பிறக்கிறேன். பேரறிவே என் வலது காலாய் உருவாகிறது. நல்லிசையே என் இடது காலாய் உருவாகிறது. மெய்யுணர்வு சிசு உற்பத்தி மற்றும் பாலுணர்வு மண்டலங்களில் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
ஸ்வாதிஷ்டானம் (நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ. அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் முதுகடியில் கூடும் போது, நான் பரிபூரண ஆரோக்கிய்மாகவும், நித்திய ஜீவனாகவும் பிறக்கிறேன். பரிபூரண ஆரோக்கிய்மே என் வலது பாதமாய் உருவாகிறது. நித்திய ஜீவனே என் இடது பாதமாய் உருவாகிறது. அருட்பெருங்கடவுளின் பூரணத்துவம் எலும்பு மஜ்ஜையிலும், எலும்பு-தசை மண்டலத்திலும், கழிவு சுத்திகரிப்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
மூலாதாரம் (முதுகடி)
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் அன்னை பூமியில் கூடும் போது, நான் அன்னை பூமியில் கற்பக விருட்சமாய்ப் பிறக்கிறேன். கற்பக விருட்சமே என் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதிசய சக்தியாய் இருக்கிறது. மரணமிலாப் பெருவாழ்வை வழங்கும் மாமருந்தாம் காயகற்பம் என் உடம்பெங்கிலும் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அஹம் க்லௌம் ஐம் ஸ்ரீம் ஹம்ஸ: ஸோஹம் க்ரீம் க்லீம் ஸௌ: ஹ்ரீம் ஹௌம் ஹூம் ஓம்.
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம். ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.

நானே அனத்து தேவ தேவியராய் உருவெடுத்திருக்கும் பரப்பிரம்மணாய் இருக்கிறேன்.
நானே எல்லா நலங்களோடும் பூரித்திருக்கும் பூரணியாம் ஆதிசக்த்யாய் இருக்கிறேன்.
நானே மரணத்தை வெல்லும் சஞ்ஜீவனியை வரமாகத் தரவல்ல சத்குருவாய் இருக்கிறேன்.
நானே பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் "நான் நான் நான்" என்று ஒளிரும் அருட்பெருங்கடவுளாய் இருக்கிறேன்.
ஸ்வரூப-ஆன்ம ஐக்கியமாகவே நான் இருக்கிறேன்.
ஆன்ம-ஸ்வரூப ஐக்கியமாகவே நான் என்னை அறிகிறேன்.
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ.
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ.
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ.
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்.
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.

ஒளி வட்ட தியானம்

நான் எனக்குள்ளே மூழ்கி ஆழ்ந்த அமைதியிலிருக்கிறேன். என் மனம் எவ்வித சலனமுமின்றி
அடங்கியிருக்கிறது. என் உடம்பு சக்திப் பிரவாகத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் முழுமையாக அனுமதிக்கிறது. என் மூச்சு ஆழமாகவும் நீளமாகவும் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. மனம், உடம்பு, மூச்சு இவற்றின் ஒருமையில் நித்திய ஜீவனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

என் நெஞ்சின் மீது கை வைத்து, அன்பு மயமான என் இருதயத்தை நான் உணர்கிறேன். என் இருதயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளத்தில் மூழ்கி, நான் தெய்வீகப் பொலிவோடு திகழ்கிறேன். என் இருதயத்தில் சுடர் விடும் பேரன்பின் பிரகாசத்தால், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உண்டாகி இருக்கிறது. என் ஒவ்வொரு மூச்சிலும் இந்த ஒளி வட்டம் மேன்மேலும் விரிவடைவதையும், பன்மடங்காய் ஒளிர்வதையும் நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

இந்த ஒளி வட்டம் என்னைச் சூழ்ந்திருக்கும் எல்லோரையும் எல்லாவற்றையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரவணைக்கிறது. அரவணைத்த உடனேயே, ஒவ்வொருவரின் ஒவ்வொன்றின் இருதயமும் ஒரு பேரொளிக் கோளத்தின் மையமாகிறது. எண்ணிலடங்கா இவ்வொளி வட்டங்கள் அனைத்தும், இதோ என் இருதயத்தில் மையங் கொள்ள, நான் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகிறேன். என்னைப் போன்றே எல்லோரும் எல்லாமும் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகின்றனர்.

சிவ-சக்தி ஐக்கிய தியானம்

அன்னை வல்லபையே! தந்தை மகாகணபதியே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் முதுகடியிலுள்ள மூலாதார சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மூலாதார சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் கடவுட்தன்மையால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை சரஸ்வதியே! தந்தை பிரம்மரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபிக்குக் கீழுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து சுவாதிட்டான சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மகாலட்சுமியே! தந்தை மகாவிஷ்ணுவே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபியிலுள்ள மணிபூரக சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மணிபூரக சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் அருட்பேராற்ற்லால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காயத்ரியே! தந்தை ஆதித்யரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் மார்பின் கீழ்
உதரவிதானத்திலுள்ள சூரிய சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித
ஐக்கியத்தை அனுமதித்து சூரிய சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பேரறிவால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காளியே! தந்தை ருத்திரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபியிலுள்ள அனாகத சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து அனாகத சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பேரன்பால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காமாட்சியே! தந்தை ஏகாம்பரேஸ்வரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் தொண்டைக்குக் கீழுள்ள அமிர்த கலச சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து அமிர்த கலச சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் ஆன்ம நேயத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மகேஸ்வரியே! தந்தை மகேஸ்வரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் தொண்டையிலுள்ள விசுத்தி சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து விசுத்தி சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் நித்திய ஜீவனால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மனோண்மணியே! தந்தை சதாசிவரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நெற்றியிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து ஆக்ஞா சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் சுயம்பிர்காசத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை ஆதிசக்தியே! தந்தை பரப்பிரம்மணே! நீவிர் என் தலையுச்சியிலுள்ள சகஸ்ரார சக்கரத்தில் "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள்ளிருந்து எழும், அதற்குள்ளேயே மூழ்கியிருக்கும் சிவ-சக்தியாய் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து சகஸ்ரார சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பூரணத்துவத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

தந்திர யோக மந்திரங்கள் - 1

குண்டலினி ஏற்றம்
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் - முதுகடி)
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் - நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் - நாபி)
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ (சூர்ய சக்ரம் - உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் - நடு மார்பு)
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் - தொண்டையின் கீழ்)
அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் - தொண்டை)
அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் - நெற்றி)
அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ (ஸஹஸ்ராரம் - தலையுச்சி)

குண்டலினி இறக்கம்
அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ (ஸஹஸ்ராரம் - தலையுச்சி)
அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் - நெற்றி)
அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் - தொண்டை)
அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் - தொண்டையின் கீழ்)
அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் - நடு மார்பு)
அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ (சூர்ய சக்ரம் - உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் - நாபி)
அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் - நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் - முதுகடி)

ஐக்யம்
அஹம் அஸ்மி ஓம் க்லௌம் ஸ்ரீ வல்லப-கணபதி ஐக்யம் (மூலாதாரம் - முதுகடி)
அஹம் அஸ்மி ஓம் ஐம் ஸ்ரீ ப்ரம்ம-சரஸ்வதி ஐக்யம் (ஸ்வாதிஷ்டானம் - நாபியின் கீழ்)
அஹம் அஸ்மி ஓம் ஸ்ரீம் ஸ்ரீ மஹாவிஷ்ணு-மஹாலக்ஷ்மி ஐக்யம் (மணிபூரகம் - நாபி)
அஹம் அஸ்மி ஓம் ஹம்ஸ: ஸோஹம் ஸ்ரீ ஆதித்ய-காயத்ரி ஐக்யம் (சூர்ய சக்ரம் - உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் அஸ்மி ஓம் க்ரீம் ஸ்ரீ ருத்ர-மஹாகாளி ஐக்யம் (அனாஹதம் - நடு மார்பு)
அஹம் அஸ்மி ஓம் க்லீம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வர-காமாக்ஷி ஐக்யம் (அம்ருதகலசம் - தொண்டையின் கீழ்)
அஹம் அஸ்மி ஓம் ஸௌ: ஹ்ரீம் ஸ்ரீ மஹேஷ்வர-மஹேஷ்வரி ஐக்யம் (விசுத்தி சக்ரம் - தொண்டை)
அஹம் அஸ்மி ஓம் ஹௌம் ஸ்ரீ சதாசிவ-மனோண்மணி ஐக்யம் (ஆக்ஞா சக்ரம் - நெற்றி)
அஹம் அஸ்மி ஓம் ஹூம் ஸ்ரீ சிவ-சக்தி ஐக்யம் (ஸஹஸ்ராரம் - தலையுச்சி)

அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்