Sunday, February 10, 2008

சற்குரு சரணம்

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்

மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்

பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்

பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்

பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்

பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்

தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்

நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்

நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்

அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்

கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்

பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்

மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம்

கசடறக் கற்று
நிசமாய் நிற்கும்
உத்தியைச் சொல்லும்
சற்குரு சரணம்

நான்தான் நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

நான்நீ நீக்கி
நானே என்றே
உய்யும் ஓர்வழி
சற்குரு சரணம்

பெருவெளி உற்று
அருளொளி காணும்
மெய்வழி காட்டும்
சற்குரு சரணம்

பெருவெளி உய்த்து
அருளொளி தந்தே
நித்திய வாழ்வளி
சற்குரு சரணம்

சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டும்
சற்குரு சரணம்

நிர்க்குணப் பிரம்மமே
சகுணப் பிரம்மமாம்
உன்னுரு எனப்பகர்
சற்குரு சரணம்

திரிகுணா மாயை
உரித்தவ் விடத்தே
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

என்றும் இளசாய்க்
குன்றாப் பொலிவுடன்
நன்றாய் இருக்கும்
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
அப்பாற் பரநிலை
சற்குரு சரணம்

பராபரம் பராபரை
பரம்பரம் பரைபரம்
இப்பால் இகநிலை
சற்குரு சரணம்

பரநிலைத் தலையே
இகநிலைக் காலாம்
ஒப்பிலா மெய்வழி
சற்குரு சரணம்

பரநிலை மெய்யே
இகநிலை உயிராம்
செப்பரும் ஓர்வழி
சற்குரு சரணம்

தற்பர போத
சற்குரு சரணம்
சிற்பர ஞான
சற்குரு சரணம்

உச்சியைப் பிளந்து
உள்ளே புகுந்து
நெற்றியில் ஒளிரும்
சற்குரு சரணம்

வெளியைக் காட்டி
வெளியில் ஒளியாம்
அற்புதம் காட்டிய
சற்குரு சரணம்

வெளியும் ஒளியும்
வளியும் ஒன்றும்
நற்றலம் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றிய மூன்றும்
நன்னீர் அளியாய்ப்
பெய்வதை காட்டிய
சற்குரு சரணம்

பெய்யும் அளியே
மேய்யாம் களியென
உற்றறி நீயெனும்
சற்குரு சரணம்

பொய்ப்புலன் சுட்டு
மெய்ப்புலன் சுட்டி
உய்வகை அருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் உடம்பும்
மெய்யாம் பரத்தில்
உய்ந்திடும் வழிசெய்
சற்குரு சரணம்

மெய்யும் உயிரும்
ஒன்றும் வழியும்
மெய்யோ டுயிராம்
சற்குரு சரணம்

நிராதா ரமேனிலை
ஆறாதா ரமேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

தராதரம் பாராப்
பராபரப் பேரை
என்னுளம் பதித்த
சற்குரு சரணம்

பராபரப் பேரே
தராதலத் தெவர்க்கும்
என்றே விதித்த
சற்குரு சரணம்

தானாம் பராபரம்
நானே என்றுணர்
வுற்றதை விளக்கிய
சற்குரு சரணம்

உற்றவ் வுணர்வைப்
பற்றியே வணங்கிப்
பெற்றபேர் போற்றெனும்
சற்குரு சரணம்

பராபர இருப்பில்
நானெனும் முனைப்பெழும்
சட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

இருக்கிறேன் என்றே
இருப்பின் உணர்வெழும்
பட்டெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

தானாம் இடுப்பில்
நானே அறிவெழும்
சிக்கெனப் பற்றெனும்
சற்குரு சரணம்

முனைப்பும் உணர்வும்
முளைக்கும் அறிவும்
சுற்றுஞ் சுழலெனும்
சற்குரு சரணம்

அச்சுழல் தொற்றி
துச்சமாம் பற்றெலாம்
பற்றற ஒழியெனும்
சற்குரு சரணம்

சாதி சமய
பேதச் சழக்கை
முற்றிலும் அறுக்கும்
சற்குரு சரணம்

ஒருவனாம் தேவனை
இருதயத் தலத்தே
மெய்யெனக் காட்டிய
சற்குரு சரணம்

ஒன்றே குலமென
இச்சக உயிர்களைச்
சுற்றாமாய்க் காட்டிய
சற்குரு சரணம்

அருட்தவ நெறியில்
பொருத்தியே என்னை
முற்றிலும் திருத்திய
சற்குரு சரணம்

அரும்பெரும் பரம்பொருள்
அருட்பெருங் கடவுளை
நெஞ்சகம் நிறுத்திய
சற்குரு சரணம்

மெய்யுடம் பாலயம்
உய்ந்தங் கிருந்தே
மெய்யுணர் வளிக்கும்
சற்குரு சரணம்

மெய்யகக் கோயிலில்
உய்ந்தங் கொலிக்கும்
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சக்கரக் கோயிலில்
புக்காங் கொளிரும்
நற்றவ ஜோதியர்
சற்குரு சரணம்

நாறும் தேகம்
மாறும் படிப்பே
ரற்புதம் புரியும்
சற்குரு சரணம்

பிணமாய் நசியும்
கணக்கை முடித்து
மந்திர உருதரு
சற்குரு சரணம்

இட்டுஞ் சுட்டும்
பட்டுப் போங்கடம்
நிற்கும் நிலைதரும்
சற்குரு சரணம்

அவம்பல செய்து
சவமெனக் கிடந்த
என்னை எழுப்பிய
சற்குரு சரணம்

கொன்றும் கொன்றதைத்
தின்றும் திரிந்தேன்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

நஞ்சைக் கக்கும்
வஞ்சநா கமெனை
நல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

நலிந்து மெலிந்து
விழுந்தே னென்னை
வல்லவ னாக்கிய
சற்குரு சரணம்

புல்லேன் பொய்யேன்
கன்னெஞ் சேனை
மெய்யோ னாக்கிய
சற்குரு சரணம்

கல்லேன் நல்லதில்
நில்லேன் பொல்லேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புன்னிக ரில்லேன்
வன்பே புரிவேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

உருவம் வன்பாம்
மருளே பொருளாம்
என்னைத் திருத்திய
சற்குரு சரணம்

பற்றெலாம் பற்றிக்
குற்றமே புரிந்தேன்
அற்பனென் ரட்சகர்
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவொடு குழிவிழ
அங்கெனை மீட்ட
சற்குரு சரணம்

குருட்டினை நீக்காக்
குருவிடம் சிக்கிய
குருடெனை மீட்ட
சற்குரு சரணம்

சிற்றின் பசாகரம்
உற்றே மூழ்குமென்
பற்றுக் கோடாம்
சற்குரு சரணம்

வேடம் பலவாய்
நாடக மாடினேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

அகமதை மறந்தே
முகம்பல தரித்தேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

உள்ளே பொழிந்திடும்
தெள்ள முதுண்ணேன்
நஞ்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

விழித்திரேன் தனித்திரேன்
வழியுறப் பசித்திரேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

பத்தியுஞ் செய்யேன்
புத்தியு மில்லேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

பேசியே திரிவேன்
வாசியைப் பாரேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
ஒருகணம் நினையேன்
புல்லனைத் திருத்திய
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியவே ஏற்றிலேன்
துட்டனைத் திருத்திய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்விலேன்
பொய்யனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவே மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியிலேன்
எத்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியேன்
அற்பனைத் திருத்திய
சற்குரு சரணம்

சத்திய சரிதமும்
புத்தியில் ஏற்றிலேன்
பித்தனைத் திருத்திய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதியு மனமிலேன்
துச்சனைத் திருத்திய
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழையேன்
கொல்வனைத் திருத்திய
சற்குரு சரணம்

அங்குமிங் கெங்குமே
தங்கா மலோடுவேன்
நில்லென நிறுத்திய
சற்குரு சரணம்

இருக்குமி டமறியேன்
இருப்பது வுமறியேன்
சவமெனை எழுப்பிய
சற்குரு சரணம்

இருகால் மிருகமாய்த்
தெருவெலாம் திரிவேன்
உய்வழி அருளிய
சற்குரு சரணம்

குண்டலிக் கனலால்
அண்டிய வினையெலாம்
சுட்டுப் பொசுக்கும்
சற்குரு சரணம்

மண்டை யினுள்ளே
மண்டிய நோயெலாம்
சட்டெனத் தீர்க்கும்
சற்குரு சரணம்

பிண்டம் புகுந்த
பண்டை வினையெலாம்
அற்றுப் போம்வழி
சற்குரு சரணம்

அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலம்
சற்குரு சரணம்

அருள்வாக் குறுதியை
இருதயத் துள்திரு
மந்திர மாய்த்தரு
சற்குரு சரணம்

புதியஏற் பாடுவுள்
பதியஏற் பாயென
கற்பித் தருளிய
சற்குரு சரணம்

மெய்யாம் ஒருசொல்
மெய்யதன் உணர்வால்
என்மெய் தழுவிய
சற்குரு சரணம்

வள்ளலின் பாடலைக்
கொள்ளவென் மனத்தைப்
பண்படுத் தியசிவ
சற்குரு சரணம்

வள்ளலின் வருகை
கொள்ளுமு றுதியை
சித்தம் பதித்த
சற்குரு சரணம்

அம்மை யப்பனை
இம்மை யிலறியும்
நற்கல் விதந்த
சற்குரு சரணம்

சத்திய சரிதமென்
புத்தியி லேற்றியே
பித்தெலாம் நீக்கிய
சற்குரு சரணம்

அதிசய மாலை
பதித்தென் மனத்தில்
அற்புத வாழ்வளி
சற்குரு சரணம்

உயிர்நலம் பேணும்
உயர்மெய் விழைந்தே
கொல்வதைத் தவிரெனும்
சற்குரு சரணம்

பரம ரகசியம்
திறந்தெ னக்கதைத்
தெற்றென விளக்கிய
சற்குரு சரணம்

பரம பதத்தைச்
சிரமேற் பதித்து
நெஞ்சகந் திறந்த
சற்குரு சரணம்

அன்பும் அருளும்
இன்பும் பொருளும்
என்றும் தருமென்
சற்குரு சரணம்

உருவுன தன்பே
பொருளுன தருளே
என்றே புகட்டிய
சற்குரு சரணம்

சிதம்பர ரகசியக்
கதவந் திறந்தென்
நெற்றியை விளக்கிய
சற்குரு சரணம்

மாயத் திரையெலாம்
மாய நிசமெனும்
வத்துவைக் காட்டிய
சற்குரு சரணம்

சத்துமாம் சித்துமாம்
நித்திய இன்புமாம்
மெய்ப்பொருள் விளக்கம்
சற்குரு சரணம்

சத்தியுஞ் சித்தியுஞ்
சுத்தபூ ரணமும்
மொத்தமும் விளக்கிய
சற்குரு சரணம்

வரம்பிலாப் பூரண
இருப்பே யார்க்கும்
சத்திய வீடெனும்
சற்குரு சரணம்

அவியாச் சுயஞ்சுடர்
ஒளியே யார்க்கும்
சின்மய விளக்கெனும்
சற்குரு சரணம்

உள்ளபே ரிருப்பாம்
ஒன்றதே யார்க்கும்
நித்திய வாழ்வெனும்
சற்குரு சரணம்

ஆன்மநே யமனப்
பான்மை யார்க்கும்
நல்லளி இன்பெனும்
சற்குரு சரணம்

தழுவுபே ரன்பாம்
இயல்பே யார்க்கும்
உண்மை அகமெனும்
சற்குரு சரணம்

பொருந்துபே ரறிவாம்
நிறைவதே யார்க்கும்
மெய்யுணர் வழியெனும்
சற்குரு சரணம்

அருட்பே ராற்றலாம்
இருப்பே யார்க்கும்
சச்சிதா னந்தமென்
சற்குரு சரணம்

அருட்பெருஞ் ஜோதியாம்
ஒளிநெறி யார்க்கும்
உள்நிறை ஒளியெனும்
சற்குரு சரணம்

தனிப்பெருங் கருணைப்
பெருங்குணம் யார்க்கும்
உள்ளுறை இறையெனும்
சற்குரு சரணம்

கடவுட் தன்மைப்
பெருநிலை யார்க்கும்
உள்ளுயிர் இயலெனும்
சற்குரு சரணம்

அருட்பே ரரசெனும்
சமரசம் யாவரும்
ஒன்றிடும் முறையெனும்
சற்குரு சரணம்

நானே நானெனும்
பூரணம்
யாவிலும்
உள்ளதாம் மெய்யெனும்
சற்குரு சரணம்

மெய்வழி ஜீவனாய்
உய்ந்தே யாவிலும்
ஒன்றினேன் நானே
சற்குரு சரணம்

ஜோதிமா வெளியில்
போதியாய் விளங்கி
புத்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஆதியாம் இருப்பில்
ஜோதியாய் எழுந்து
எம்விழி திறக்கும்
சற்குரு சரணம்

ஜோதிமா மலைமேல்
வீதியாய் வளர்ந்த
மெய்வழிச் சாலை
சற்குரு சரணம்

ஆதியாம் தாய்தன்
பாதியாய் விளங்கும்
அப்பனின் கொழுந்தாம்
சற்குரு சரணம்

புந்தியின் உள்ளே
நந்தியாய் அமர்ந்துமுச்
சந்தியை விளக்கும்
சற்குரு சரணம்

நாதமாம் வெளியின்
பாதமாம் விந்தாய்
உள்ளொளிர் ஜோதியர்
சற்குரு சரணம்

சத்திய வெளியில்
சின்மய ஒளியாம்
இன்பமெய்ச் சித்தர்
சற்குரு சரணம்

சத்தாம் வெளியொளிர்
சித்தாய்க் களித்தே
சித்தராய் எமைச்செய்
சற்குரு சரணம்

ஜோதியாம் பகவனாய்
ஆதியில் எழுந்த
உட்போ தகராம்
சற்குரு சரணம்

பூஜ்ஜிய மென்னைப்
பூரண னாக்கி
இராஜ்ஜியஞ் செய்யெனும்
சற்குரு சரணம்

இருட்கிடங் கெனவே
மருண்டே கிடந்தவென்
உட்புகுஞ் சுயஞ்சுடர்
சற்குரு சரணம்

பிறந்திறந் துழன்றெனை
மறந்துறங் கியவெனை
நித்யவாழ் விலுய்த்த
சற்குரு சரணம்

ஆணவப் பேயனை
ஆன்ம நேயனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

வன்பிருள் வம்பனை
அன்பருள் நம்பனாய்த்
தன்னியல் தந்தருள்
சற்குரு சரணம்

மருண்டே மயங்கிச்
சுருண்டே கிடந்தவென்
மெய்ஞ்ஞா னபோதகர்
சற்குரு சரணம்

மெலிந்தே தேய்ந்தவென்
நலிந்தே வீழ்ந்தவென்
மெய்யெழு வல்லவர்
சற்குரு சரணம்

தாமசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சத்தனாய் மாற்றும்
சற்குரு சரணம்

ராஜசப் பொய்க்குணம்
போக்கியே என்னைச்
சித்தனாய்ச் மாற்றும்
சற்குரு சரணம்

சத்துவப் பொய்க்குணம்
போக்கியே என்னை
இன்பனாய் மாற்றும்
சற்குரு சரணம்

துர்க்குணப் பிரமை
அற்றே போக
என்மனந் தெருட்டிய
சற்குரு சரணம்

திரிகுண மாயை
சரிந்தே மாய
சச்சிதா னந்தமாம்
சற்குரு சரணம்

ஒடிந்தேன் உயிரினை
முடிக்கவுந் துணிந்தேன்
அக்கணம் அணைந்தருள்
சற்குரு சரணம்

வெறுஞ்சவ மாய்நான்
கிடந்தேன் எனில்சிவ
சத்தியாய் எழுந்தருள்
சற்குரு சரணம்

முடமெனக் கிடந்தவென்
முடக்கம் நீக்கி
சித்தியெ லாமருள்
சற்குரு சரணம்

இற்றே தீர்ந்தவென்
வெற்று டல்சடத்
துற்றே எழுப்பிய
சற்குரு சரணம்

கடும்பெருங் கொடியனைப்
பெருங்கரு ணையனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

இருள்மயச் சழக்கனை
அருட்ஜோ தியனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

மனிதமி ருகமெனை
அருட்பெருங் கடவுளாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

கொடுங்கோ லாளானை
அருட்பே ரரசனாய்த்
தன்போல் மாற்றிய
சற்குரு சரணம்

தனையறி யாவெந்
தன்மடம் நீங்கநான்
என்றுணர் நானே
சற்குரு சரணம்

பொய்த்தளை மரணத்
துய்ந்தவென் நோய்தீர்
மெய்வழி ஜீவனாம்
சற்குரு சரணம்

நான்நீ இருமை
மாய்ந்தே போக
ஒன்றாம் நானே
சற்குரு சரணம்

அருளா தாரமே
பொருளா தாரமாம்
உண்மை உணர்த்திய
சற்குரு சரணம்

நரகமாம் நகரிலே
மருண்டவென் அகந்தான்
சொர்க்கமே சேர்வழி
சற்குரு சரணம்

வறுமைப் பாவியே
வறுக்கவென் வாழ்வினைப்
பொன்னென எனைச்சேர்
சற்குரு சரணம்

No comments: