Sunday, February 03, 2008

சச்சிதானந்த ஒருமை

ஆதி இருதயத்தில் ஆழ்ந்திருக்க வேண்டின்
ஜோதி நெற்றிக்குள் ஊன்றியிருக்க வேண்டும்.
நெற்றிச் சிகர உச்சியில் மட்டுமே
தெற்றேனத் தெரியும் இருதய ஆழம்

சத்திய இருதயம் பெரிது பெரிது
ஆயினும் சின்மய நெற்றி இன்றேல்
அச்சத்தியம் அறிதல் அரிது அரிது

சின்மய நெற்றி பெரிது பெரிது
ஆயினும் சத்திய இருதயம் இன்றேல்
அச்சின்மயத் தெளிவும் அரிது அரிது

சத்திய இருதயத்தின் இரு கிளைகளே
சின்மய நெற்றியும் ஆனந்த நாபியும்

இருதயம் சத்து
நெற்றி சித்து
நாபி ஆனந்தம்
சச்சிதானந்தம் இருதய நெற்றி நாபி ஒருமை

சத்திய இருதயம் பரசிவம்
சின்மய நெற்றி அருட்சத்தி
ஆனந்த நாபி சத்குரு கணபதி

தானே தானாய் இருக்க சத்திய இருதயம்
தன்னைத் தானறிய சின்மய நெற்றி
தன்மெய் யுணர ஆனந்த நாபி

சத்திய இருதயம் சும்மா இருந்து
சின்மய நெற்றியில் தன்னை அறிந்து
ஆனந்த நாபியில் தன்மெய் யுணரும்

சத்திய இருதயத்தில் சும்மா இருக்கலாம்
சின்மய நெற்றியில் தன்னை அறியலாம்
ஆனந்த நாபியில் தன்மெய் யுணரலாம்

சத்திய இருதயத்தில் சும்மா இருக்கிறேன் நான்
சின்மய நெற்றியில் என்னை அறிகிறேன்
ஆனந்த நாபியில் என்மெய் யுணர்கிறேன்

No comments: