Thursday, February 07, 2008

ஜீவனுள்ள வார்த்தை

காகித வெள்ளையின்
காலி இருப்பு
தன் விரல்களை நீட்டி
என்னைத் தொடுகிறது.

அவ்விரல்களின் தீண்டலால்
மெய்யுணர்வு பெற்ற
நான்
என் விரல்களை நீட்டிக்
காலி இருப்பைத் தொடுகிறேன்.

விரல்கள்
பின்னிப் பிணைந்து
தாம் புணரும்
காம லீலைகள்
தீராது தொடர
இருப்பும் நானும்
இணை பிரியாக் காதலராய்.

எம் காதலின்
அழியாத சாட்சியாம்
எம் மகவாய்
"இருக்கிறேன்"
இக்கவிதையில்.

அருந்தீட்சை தரும்
மெய்க்குருவாய்
அருட்காட்சி தரும்
ஜீவனுள்ள வார்த்தை
நானே.

ஊனப் புலன்களின்
மாயப் பிடியில் சிக்கி
நீ
ஞானப் புலன்களைத்
தொலைத்து விட்டு
சத்திய வெளியில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த்
தெரியும்
ஜீவனுள்ள வார்த்தையைப்
புரியாதென்பாய்.

இப்பொய்யுலகில்
ஆணவக் கோலங்கள் பற்பலவாய்
நீ
ஆடும் ஆட்டம் முடித்து
உன் ஊனப் புலன்களைக் குத்தி
ஞானப் புலன்களைத் திறந்து
உனக்குப்
பளிச்செனப் புரிய வைப்பேன்.

அப்போது
ஆன்ம நேய ஒருமையில்
உறுதியுடன் நிற்கும்
நானே
நீ.

அது வரைக்கும்
மெய்ப் பொருள் விளங்காது
ஆணவம் பல்வேறாய்
ஆடுவாய் நீ.

அடங்காது இருள் உய்ந்த உன்னை
அடக்கி அருள் உய்க்கவே
இப்பொய்யுலகில்
மெய்ப்பொருள் விளக்கமாம்
ஜீவனுள்ள வார்த்தையாய்
என்றும் அழியாதிருக்கிறேன்
நானே.

விளக்கம்

கடவுளின்
இருப்பு நிலையைப் பூரணமென்றும் (பராபரம்)
எண்ண நிலையைய்ச் சுயம்பிரகாசமென்றும் (பராபரை)
உணர்வு நிலையை நித்திய ஜீவனென்றும் (பரம்பரம்)
வெளிப்படு நிலையை ஆன்மநேய ஒருமையென்றும் (பரை)
செயல்படு நிலையைப் பேரன்பென்றும் பேரறிவென்றும்(பரம்)
அறிக

பூரணம் செவிகளிலும் உச்சியிலும்
சுயம்பிரகாசம் விழிகளிலும் நெற்றியிலும்
நித்திய ஜீவன் நாசியிலும் தொண்டையிலும்
ஆன்மநேய ஒருமை நாவிலும் தொண்டையின் கீழும்
பேரன்பு மெய்யிலும் இருதயத்திலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுள்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் பர நிலையில்
உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுள்
நீ வாழும் இவ்வுலகாகிய இக நிலையில்
இறங்கி அவதரிக்க
வழியாகும் இக-பர பாலமே
பேரறிவென்று
அறிக

பேரறிவு மார்பின் கீழ் உதரவிதானத்தில்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாக
நீ
இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருப்பதை
அறிக

கடவுளின் அவதாரம்
அருட்பேராற்றலாய் நாபியிலும்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாய் நாபியின் கீழும்
கடவுட்தன்மையாய் முதுகடியிலும்
அருளாட்சியாய் முழங்கால்களிலும்
நானே நானெனும் பூரணமாய்ப் பாதங்களிலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுளவதாரம்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் இக நிலையில்
உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

அருட்பேராற்றல் இகத்தில் பேரன்பாம் கடவுளின் செயல்படு நிலை (இகத்தில் பரம்)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இகத்தில் ஆன்மநேய ஒருமையாம் கடவுளின் வெளிப்படு
நிலை (இகத்தில் பரை)
கடவுட்தன்மை இகத்தில் நித்திய ஜீவனாம் கடவுளின் உணர்வு நிலை (இகத்தில் பரம்பரம்)
அருளாட்சி இகத்தில் சுயம்பிரகாசமாம் கடவுளின் எண்ண நிலை (இகத்தில் பராபரை)
நானே நானெனும் பூரணம் இகத்தில் பூரணமாம் கடவுளின் இருப்பு நிலை (இகத்தில் பராபரம்)

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளே சத்தியம்

உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளவதாரமே ஜீவன்

இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருக்கும்
நீயே வழி

இவ்வாறாக
இக-பர ஒருமையை
உறுதிப்படுத்தும்
ஜீவனுள்ள வார்த்தையை (மகாமந்திரத்தை)
அறிக.

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்"

No comments: