அருளே எல்லா மாகும் தெளிந்தே
அருளே பொருளாய்ப் போற்று
அருளே மெய்ப்பொருள் மெய்யாம் உடம்புக்கு
அருளே நோய்தீர் மருந்து
அருளே பொருளென அறியா திருக்கும்
மருளை அறுத்தால் சுகம்
அருளொன்றே அரும்பெரும் பரம்பொருள் இம்மெய்த்
தெருளொன்றே தரும்பெருஞ் சுகம்
அருளொன்றே போதுமென்றே நீயிருந்தால் அத்திருஅருளே
பொருளெல்லாம் தருமன்றோ உவந்து
அருளொன்றே பொருளாய்ப் போற்ற உதிக்கும்
தெருளன்றி மருளாம் மனம்
போற்றுக அருளைப் பொருளாய்ப் போற்றப்
போற்றப் பெருகுந் திரு
பிறந்திறந்தே யுழலும் பொய்வழக் கொழியவென்றும்
அறந்தலையாய்க் கொள்க அருள்
மரணப் பெரும்பிணி வாரா வகைக்கே
வரமாய் வருவதே அருள்
அருளொன்றே அரும்பெறற் பெரும்பொருள் நின்மனத்திலித்
தெருளின்றேல் மருண்மலச் சழக்கே
அருளைப் போற்றி அமுதுண்டு நின்றால்மெய்ப்
பொருளாய் ஓங்கு முடம்பு
அருளே பொருளெனப் போற்றுந் தெருளால்
திருவே பெருகும் விரைந்து
எல்லாப் பொருளும் பொருளல்ல ஞானியர்க்கு
மெய்யாம் அருளே பொருள்
திருவைத் தேடிஓயா தோடும் உலகில்
அருளைக் காணஆகுந் திரு
நான்பொருளாய்க் கண்டதெல்லாம் அருளே அதுவே
வான்பொருளாய்க் கண்டத்துள் விழும்
அருளாம் தெருளே பொருளாம் மற்றெல்லாம்
இருளாம் மருளே தேர்
குருவருள் பெற்று குவலயத்து நின்றால்
திருஅருள் தேடி வரும்
அரும்பொருளாம் அருளைப் பெற்றடங்கி நிற்க
பெருஞ்சுகமாம் பேரின்ப வாழ்வு
தேடுக அருளை மரணப் பிணிதீர்க்கும்
மருந்த தனிற்சிறந் ததில்
அன்பருள் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
வன்பிருள் இலாத செயல்
கொல்லாமல் உயிரோம்பும் அருள்நோக்கம் கொண்டு
எல்லார்க்கும் அன்புசெயல் அறம்
அன்பே ஆற்றலாய் அறிவினூடே வெளிப்படும்
இன்பே ஊற்றதாம் பெருக்கு
அன்பெனும் அருள்நிலையே அறிவிடத்து விளங்கும்
இன்பெனும் தெருள்நிலையே வீடு
அன்பும் அருளும் இருகண்ணாய்க் கொண்டு
இன்பும் பொருளும் காண்
அன்பும் அருளும் இருகரமாய்க் கொண்டு
இன்பும் பொருளும் அளி
அன்பும் அருளும் அறிவில் விளங்கின்
இன்பும் பொருளும் உறுதி
அருளொன்றே மரணத்தை வெல்லு முபாயமித்
தெருளின்றேல் மரணமே வாழ்வு
கருணையில் உயிர்களைக் கனிவுடன் காக்கும்
அருளாற்றல் அன்றோ இறை
பெருங்கருணை உளங்கொண்டு உயிர்நலம் பேணும்
அருட்செயலே தலையாய அறம்
பொருளல்லவரை அரும்பொரு ளாகச் செய்யும்
அருளல்லது இல்லை பொருள்
பொய்யரைத் திருத்தி நல்வழி நிறுத்தி
மெய்யராய்ச் செய்யும் அருள்
இறவா வாழ்வெனும் பெருவரத்தோடு மேலும்
பிறவா நிலைதரும் அருள்
அருளன்றிப் பொருளொன் றில்லை அருளே
பொருளென்று போற்றி நில்
AHAM ASMI RAAMA HARE
Saturday, February 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment