நாகரா!
உன் ஆணவத்தை
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு
நான் குரைப்பதை
அதி கவனமாகக் கேள்.
இப்பொழுது
என் வால் பகுதியைத்
தீவிரமாகத் தியானித்து
அந்த வாலாகவே மாறி விடு.
"ஆறறிவு மனிதன்
ஐந்தறிவு நாயின்
வால் பகுதியைத் தியானிப்பதா?
அவ்வாலாகவே மாறுவதா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது!"
உன் கோபம் எனக்குப் புரிகிறது.
ஆனாலும்
நான் உனக்கு அளிக்க வேண்டிய
குரு தீட்சைக்கு
இத்தியானமும் மாற்றமும்
அத்தியாவசியமாகிறது.
ஆணவத்தின் மொத்த வடிவமாகவே
நீ இருப்பதால்
இத்தியானமும் மாற்றமும்
உன்னால்
எளிதில் ஏற்க முடியாததே.
உன் ஆணவ ஒருமையில்
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்கள்
அடங்காது ஆடுகின்றன.
மனிதத் திமிர்
மதத் திமிர்
சாத்திரத் திமிர்
சாதித் திமிர்
கோத்திரத் திமிர்
இனத் திமிர்
நிறத் திமிர்
மொழித் திமிர்
வட்டாரத் திமிர்
கலாசாரத் திமிர்
நாட்டுத் திமிர்
என்று உதாரணத்துக்காக
நனி மிகச் சிலத் திமிர்களை
நாய்த் திமிர் கூட ஒரு சிறிதும் இல்லாமல்
அடக்கத்தோடு
நான் உன் கவனத்துக்கு வைக்கிறேன்.
திமிர்களின் கிடங்கான
உன்னோடு பழகிய
சகவாச தோஷத்தால் எனக்கு வந்ததே
நாய்த் திமிர் என்றாலும்
உனக்கு தீட்சை தருவதற்காக
அத்திமிரைக்
குப்பைத் தொட்டியில் போடுவதற்கு
நான் பட்ட பாடு!
அத்திமிரை விட மனமின்றி
உனக்கு தீட்சை தருவதையே
நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட
எனக்குத் தோன்றியதென்றால்
உன் நிலை
நன்றாகவே புரிகிறது.
ஆனாலும்
உனக்கும் எனக்கும் எவர்க்கும்
ஆதியாம்
நம் போல் எந்தத் திமிரும் அறவே இல்லாத
அருட்பெருங்கடவுள்
உனக்கு தீட்சை தருவதற்கு
என்னைத் தேர்ந்தெடுத்து
அதற்கென்று கட்டாயமாக
நான் நாய்த் திமிர் கூட இல்லாமல்
சுத்த நாயாக
மன்னிக்கவும்
சுத்த நானாக
இருக்க வேண்டும்
என்று அன்புடன் விதித்தார்.
தீட்சை தந்து முடித்த மறு கணமே
நாய்த் திமிரோடு
நான் ஆசை தீரத் திரியலாம்
என்று உத்தரவாதமுந் தந்தார்.
நான் நனி மிக யோசித்த போது
மனிதனோடு பழகிய
சகவாச தோஷத்தால் தான்
நாய்த் திமிர்
எனக்கு வந்ததை
அவர் நினைவூட்டினார்.
நாய்த் திமிர் இல்லாமல்
வெறும் நாயாக
மன்னிக்கவும்
வெறும் நானாக
நான் சந்தோஷமாக
உலவிய யுகங்களை
அவர் எனக்குப்
படம் போட்டுக் காட்டினார்.
நமக்கெல்லாம் கடவுளாம்
அவர் தந்திரசாலியென்றும்
அப்போது தான்
நான் புரிந்து கொண்டேன்.
அதே சகவாச தோஷம் தான்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியம்
தன்னோடு தந்திரமாக
சில கணங்கள் இருக்க விட்டுத்
தன் போல் திமிரேதுமற்ற நிலை
மேற்கொள்ள என்னை அவர்
ஆயத்தம் செய்து விட்டார்.
சரியென்று முடிவாக
ஒப்புக் கொண்டு
நாய்த் திமிரைக்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு
உனக்கு தீட்சை தர
நான் வந்திருக்கிறேன்.
இப்போது
எனக்கு நன்றாகவே புரிகிறது
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களின்
ஒருமையாம் ஆணவத்தின்
மொத்த வடிவமாகிய
மனிதனாம் உனக்கு
ஆணவத்தைக்
குப்பைத் தொட்டியில் போடுவது
எவ்வளவு கடினமென்று.
கவலைப் படாதே
நான் உனக்கு
தீட்சை தந்து முடித்த
மறு கணமே
ஆணவத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு
எண்ணிலடங்காப் பன்மைத் திமிர்களோடு
ஆர்ப்பாட்ட ஆட்டமெல்லாம்
நீ ஆசை தீர ஆடலாம்.
இது
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
நான்
உனக்குத் தரும் உத்தரவாதம்
அன்பு நாகரா!
(கடவுளோடு பழகிய
சகவாச தோஷத்தால்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியத்தால்
அவரது தந்திர புத்தி
இப்போது எனக்கும்)
மேலும்
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
என் வாலைத் தியானித்து
என் வாலாகவே
நீ மாறியதும்
உனக்கு வரும் வாலறிவால்
(அதாவது
வள்ளுவர் சொல்லும்
தூய அறிவால்)
நீ சொல்லொணா
ஆன்ம இலாபத்தைப் பெறுவாய்
(தந்திர புத்தி தன் வேலையை
ஆரம்பித்து விட்டது)
மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
என் நாயுணர்வு
மன்னிக்கவும்
என் நானுணர்வு
என் வாலாம் உன்னில்
முழுமையாகப் பரவ
வாலுணர்வு நீங்கி
நீ
நாயாம் என்னில்
மன்னிக்கவும்
நானாம் என்னில்
அதாவது
நாயுணர்வில்
மன்னிக்கவும்
நானுணர்வில்
முழுமையாக நிலை பெறுவாய்
(தந்திர புத்தியின் உச்ச கட்டம்
என் சகவாசத்தால்
சுத்த நாயாம் எனது
மன்னிக்கவும்
சுத்த நானாம் எனது
இப்போதைய திமிரேதுமற்ற நிலை
கடவுளிடமிருந்து எனக்குத் தொற்றியதைப் போல
என்னிடமிருந்து உனக்குத் தொற்றட்டுமே)
மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
நாயாகிய என்னை
மன்னிகவும்
நானாகிய என்னையே
தீவிரமாகத் தியானித்து
நாயாகிய நானாகவே
மன்னிக்கவும்
நானாகிய நானாகவே மாறி
உன் வாலை
நீயே ஆட்டலாம்.
மனித உலகில்
நாய்க்குரு தீட்சை தரும்
பெருந்தீட்சையாளனாய்
வாலாட்டிச் சுதந்திரமாய்த் திரியலாம்.
(அருட்பெருங்கடவுளிடம் கற்ற
அரும்பெருந்தந்திரத்தால்
நாகராவை
நாயாக
மன்னிக்கவும்
நானாக
நன்றாக மாற்றிவிட்டேன்.
நாகரா
தழிழ் மன்றத்தில்
நாயாக
மன்னிக்கவும்
நானாக
தன் வாலாட்டித் திரிகிறது.
மனிதர்களே!
ஜாக்கிரதை
என் தந்திரத்துக்கு மாட்டிய
நாகரா போல்
மாட்டி விடாதீர்
மாறி விடாதீர்
கடவுள் எனக்களித்த வாக்கின் படி
நாய்த் திமிரோடு
நான் திரிகிறேன்
நீவிரும் தத்தம் திமிர்களோடு
மனிதராய்த் திரிவீர்
அருட்பெருங்கடவுள்
தம் அரும்பெருந்தந்திரத்தோடு
அவரே நாயாகி வரும் வரைக்கும்
அவர் விரைவில் வர இருப்பதாகக் கேள்வி
அதைப் பற்றி நமக்கென்ன கவலை
நாம் ஆசை தீரத்
தத்தம் திமிர்களோடு திரியலாம்)
நாய்க்குரு தீட்சை - 2
(நாய்க்குருவின்
அரும்பெருந்தந்திரத்துக்கு
ஆட்பட்டு
நாயாரின் வாலையே
தீவிரமாகத் தியானித்து
அவ்வாலாகவே மாறிவிட்ட
நாகரா
நாயாரையே
தீவிரமாகத் தியானித்துத்
தன் மெய்ப்பொருள் விளக்கம்
பெறுதல்)
எச்சரிக்கை: நாய்க்குரு தீட்சை முதல் பகுதியை வாசித்து உமது மூளைப் பொறியின் மறை ஏற்கனவே தளர்வாகி இருக்கும் வாய்ப்பு உள்ளதால், இவ்விரண்டாவது பகுதியைப் படிக்கும் போது, மறை முழுவதுமாகக் கழன்று, மூளைப் பொறியே விழுந்து தூள் தூளாக நொருங்கும் பேரபாயம் இருக்கிறது. எனவே இப்பேரபாயத்தைச் சந்திக்கத் தயாராயுள்ள ஏற்கனவே மறை தளர்வாகி இருப்பவர்கள் மட்டுமே இதைப் படிக்கவும்.
வாலென்று
எனக்கே உரிய தனிப்பெயரோடும்
உருவத்தோடும்
நான் இருந்தாலும்
என்னை ஆட்டுவிப்பவராம் நாயாரோடு
எப்போதும் நான் ஒன்றியே இருக்கிறேன்.
நாயாரும்
வாலாம் என்னைத்
தன்னை விட்டு வேறான மாறான எதிரான
இன்னொன்றாகக் கருதி வெறுப்பதில்லை.
வாலாம் என்னில் நாயார்
பரிபூரணமாய் நிறைந்துள்ளார்.
நாயாரும் வாலாம் நானும்
ஒன்றேயன்றி வேறல்ல.
வாலாம் எனக்கு நாயாரே மெய்.
வாலாம் என் மேல்
பல்வேறு திமிர்களாய்ப் படிந்த
தூசுப் பொய்களை உதற
என்னில் பரிபூரணமாய் நிறைந்துள்ள
நாயாரை நான் நாட
அவரும்
தன் வாலாம் என்னை
நன்றாக ஆட்ட
அத்தூசுத் திமிர்கள்
என்னை விட்டு நீங்கி
"தூய்மை" என்ற அர்த்தமுள்ள
வாலாம் நான்
என் பொருள் விளங்கி
மெய்யாம் நாயாரில்
நீடூழி வாழ்கிறேன்.
என் தனிப்பெயர் வால்.
நாயாரின் அருளால்
ஆணவத் திமிர்களாம் தூசுகள்
நீங்கப் பெற்று
என் "தூய" நிலையை
இப்பெயர் குறிப்பதால்
இது என் சிறப்புப் பெயருங்கூட.
என் முழுப்பெயர் நாயார் வால்.
வாலாம் நான்
என்ன ஆட்டம் ஆடினாலும்
நாயாரிலேயே எப்போதும் அடங்கியிருக்கிறேன்.
நாயாரே
என்னை ஆட்டுவிப்பதையும்
எந்தவொரு ஐயமுமின்றி
எப்போதும் அறிந்திருக்கிறேன்.
இவ்வாறாக வாலறிவால்
நான் நன்றாகப் பக்குவமடைந்த
ஒரு கணத்தில்
நாயாரே என் குரு நாதராகி
எனக்கு தீட்சையளிக்கும் முறையாக
இக்கேள்விகளைக் கேட்டார்.
"வால் நீயா?
அல்லது
வால் உன் பெயரா?"
நான் பணிவோடு பதிலளித்தேன்:
"வால் என் பெயரேயன்றி
வால் நானல்ல."
அடுத்து நாயார் கேட்டார்:
"வால் உன் பெயரென்றால், பின் நீ யார்?"
நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நான் நாயாரே!"
அடுத்து நாயார் கேட்டார்:
"நீ நாயாரேயென்று எப்படி அறிகிறாய்?"
நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே என்னில் பரிபூரணமாய்
நிறைந்துள்ள மெய்ம்மையால்."
அடுத்து நாயார் கேட்டார்:
"பின் வாலென்று எப்படி உன் பெயர்
நாயாரென்று ஏன் இல்லை?"
நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே
வாலென்ற என் பெயரில்
என் உருவில்
தன் பணிக்காகத் தானே
ஆடுகிறார்.
நாயாரே என்னை நன்றாக ஆட்டுவிக்க
நானும் அவர் வாலாய் உவந்து ஆடுகிறேன்
நான் நாயாராம் அவரேயன்றி வேறில்லை
என்ற மெய்யுணர்வோடு."
அடுத்து நாயார் நனி மிக மகிழ்ந்து
என்னை வாழ்த்தினார்:
"வாலாரே!
நீர் நாயாராம் நானேயென்று
மெய்ப்பொருள் விளக்கம் பெற்றீர்.
இவ்வுலகில்
என் பணிக்காக
நான் உம்மை உவந்து ஆட்ட
நீவிர் என்னில் நிலைபெற்றே
நன்றாக ஆடுவீர்."
நானும்
நாயாரே நானென்ற
மெய்யுணார்ந்து
வாலாராய் நாயாரில் நிலைபெற்றே
நன்றாக ஆடுகிறேன்
நாயாராம் நானே
வாலாராம் பெயரோடு
அவ்வுருவோடு
என்னை உவந்து ஆட்டவே.
தீட்சை தந்த நாயாருக்கு நாகராவின் நன்றித்துதிகள்
வாலென்ற தூயதுவாய் என்னில் அடங்கியே
வாழென்ற போதகராம் நாய்
தூசாம் திமிர்நீங்க வாலேனை ஆட்டியே
தூய்மை அருள்வாராம் நாய்
மெய்யாம் என்னிடத்தே வாலுன் பொருள்விளங்கி
மெய்யாய் நில்லென்பராம் நாய்
வாலென்ற நற்பெயரில் அதற்குரிய நல்லுருவில்
வாலறிவர் என்மெய்யராம் நாய்
சார்பாகி எனைவிட்டு நீங்காத வாழ்வாகி
வால்நானுய் மெய்வழியராம் நாய்
ஆணவமே வாலாக ஆடியவெனை அடக்கியேதன்
மாணவனாய்க் கொண்டாராம் நாய்
தூணென்ற நீள்முதுகுத் தண்டிலூன்றி உவந்தாடும்
வாலென்மெய்ப் பொருளாராம் நாய்
தூசனெனைத் தழுவியன்பாய் வாலேனெனுந் தூயனாய்த்தனில்
வாசஞ்செய் வரந்தருவராம் நாய்
வெளியென்ற ஊருக்குள் மெய்யென்ற வீட்டுக்குள்
ஓளிவாலை ஆட்டுவாராம் நாய்
வளியென்ற வாசிக்குள் ஒளிவாலை ஆட்டிஅளி
பொழிகின்ற மாதவராம் நாய்
அஞ்ஞான இருளிலாழ்த் துறங்குமெனை எழுப்ப
மெய்ஞ்ஞானம் குரைப்பவராம் நாய்
நன்றியிலா வஞ்சகனெனைத் தன்வாலாய் மாற்றியே
நன்றிசொலும் நேர்மையராம் நாய்
சத்தியத் தெருவிலேநற் சின்மய உருவிலே
இன்பைக் குரைப்பாராம் நாய்
குரைத்தும் வாலாட்டியும் இறைநீர்மை புகட்டும்
மறைமந் திரஉருவராம் நாய்
கறையில்லா வெண்மேனியர் வாலினுந் தூயவர்
இறைதந்திர போதகராம் நாய்
மந்திரந் தந்திரம் யந்திரந் தெரிந்த
சுந்தர வாலராம் நாய்
தராதலத் தெவரிலும் தராதரம் பாராப்
பராபரப் பேரன்பராம் நாய்
சுடச்சுட மெய்யுணர்வைத் தானுண்டு வாலுக்கும்
சுடச்சுட உணர்த்துவாராம் நாய்
கடந்தன்னைப் புடம்போட்டுப் பளபளக்கும் நாய்மையை
அடங்குவாற்கு மீவாராம் நாய்
அடக்கம் அமரஅருளே வாய்க்குமென்றே வாலுக்கே
அடங்குதீக் கைதருவராம் நாய்
அடங்காத்திமிர் தீயதூசரைத் துரத்தவே தன்வாலைப்
படபடவென ஆட்டுவாராம் நாய்
நாய்மையின் கண்நின்றே தன்வாய்மை யுணர்ந்த
தூய்மையெனும் பொருளாராம் வால்
இப்பொருள் இந்நாய்வாய்க் கேட்பினும் செம்பொருள்
அப்பொருள் வாய்மை உறுதி
இப்பொருள் வால்தன்மைத் தாயினும் நாய்ப்பொருள்
அப்பொருள் தூய்மை உறுதி
AHAM ASMI RAAMA HARE
Monday, February 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment