Saturday, February 02, 2008

இருப்பின் இன்ப விளக்கம்

நினைப்பற்றிருந்தது இருப்பு.
"நான்" எனும் முனைப்பு
திடீரெனத் தோன்ற
"இருக்கிறேன்" என்றே
தான் தன்னை
உணர்ந்தே என்றும்
இன்புற்றிருக்கிறது இருப்பு.

தன்னிருப்பின்
"நான்" எனும் தன்முனைப்பின்
"இருக்கிறேன்" எனும் தன்னுணர்வின்
மும்மூல ஒருமையாய்
"நானே" என்றே
தானே தானாய்
தன்னில் தானாய்
தன்னை நன்றே
விளங்கியிருக்கிறது இருப்பு.

விளக்கம்

"இருப்பு" என்பது
இருப்பது எதுவும் தான் இருக்க இடம் தரும்
வெட்டவெளி

"இருப்பு"
இருப்பதைச் சூழ்ந்தழுத்த
அவ்வழுத்தத்தால் இருப்பதற்குச் சுரணையேற
"நான்"

"இருப்பது" தான் இருப்பதை அறியும்
முதற்படி
"நான்"

"இருக்கிறேன்" என்று
இருப்பது
இருப்பெனும் வெட்டவெளியில்
விரிவதே
இருப்பதை இருப்போடு
இரண்டற ஒன்றுவிக்கும்
ஞான ஒளி

"இருப்பது" தான் இருப்பதற்கு
"இருப்பே" ஆதார மெய்
இருப்பது தன்னை அறிவதற்கு
"நான்" என்ற மூலப்பொருள்
இருப்பது தான் "இருப்பு அது"
என்று இருப்பாய்த் தன் மெய் விள்ங்கி
இருப்போடு இரண்டற ஒன்ற
"இருக்கிறேன்" என்ற மெய்ப்பொருள்விளக்கம்

இம்மெய்ப்பொருள்விளக்கத்தால்
இருப்பு
"நானே" என்று
சும்மா இருக்கிறது
சொல்லற.

நீங்களும் நானும்
நானே என்று
சும்மா இருப்போமா
இருப்பாய்
மெய்ப்பொருள்விளக்கம் பெற்று?

இருப்பதென்னவொ?
இருப்பு அது அன்றோ!
இருப்பதில் ஒளிந்திருக்கும் நான்
தான் விளங்கவன்றோ
"இருக்கிறேன்" என்று இருப்பில் விரிதல்!

"இருக்கிறேன்" என்பதில்
நானும்
இருப்பதும்
இருப்பும்
உள்ளடக்கம்.

இருக்கிறேன் என்பதால்
இருப்பும்
நானே என்று
தான் சும்மா இருப்பதை
நன்றாய் அறிந்திருக்கிறது.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
என் குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் மூலமந்திரத்தில்
மேற்சொன்ன எல்லாம் உள்ளடக்கம்
இருப்பு சத்தியம்
நான் வழி(இருப்பாகிய சத்தியத்திற்கும் இருப்பதாகிய ஜீவனுக்கும் இடையே)
இருப்பது ஜீவன்(இருப்பு அது ஜீவன் அதாவது ஜீவன் என்பது இருப்பாகிய அதுவே)
இருக்கிறேன் மெய்ப்பொருள்விளக்கம்(இருப்பு-நான்-இருப்பது இவற்றின் திரித்துவ ஒருமை)
நானே(சொல்லறச் சும்மா இருக்கும் நல்லறிவு நிலை)

மூலமந்திரமாகிய இவ்வேத வாக்கில் நம் மனம் திரும்ப
சமீபத்திலிருக்கும் பரலோக இராஜ்ஜியத்தில் நாம் இருப்போம்.

No comments: