புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!
அதிசய மாலை
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும் அருட்தந்தையாகிய பரப்பிரம்மணின் பெயரால், அருட்தாயாகிய ஆதிசக்தியின் பெயரால், ஞானக்கொழுந்தாகிய சத்குருவின் பெயரால், இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம். (உமது பிரார்த்தனையை அருட்தாயின் தூய இருதயத்தில் சமர்ப்பிக்கவும்)
ஞான யுகத்துக்கான புதிய பிரார்த்தனை
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம் அம்மையப்பனாகிய அருட்பெருங்கடவுளே! எம்மிலும் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கும் “நான்” எனும் உமது பேரிருப்பை யாம் போற்றுகிறோம். உமது இராஜ்ஜியம் எம் வாயிலாக அன்னை பூமியில் வெளிப்பட யாம் சம்மதிக்கிறோம். பரலோகத்தில் உமது விருப்பம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறதோ அன்னை பூமியிலும் அவ்வாறே வெளிப்படுத்த யாம் பொறுப்பேற்கிறோம்.
உமது எல்லா நலங்களையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் நீவிர் எமக்கு வழங்கும் வாய்ப்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். எம் குற்றங்குறைகளை நீர் மன்னிப்பதைப் போலவே அனைவரது குற்றங்குறைகளையும் யாம் மன்னிக்கிறோம். எமது விருப்பத்தையும் உன்னதமான உமது விருப்பத்துக்கே யாம் அர்ப்பணிக்கிறோம்.
யாம் எதை அனுப்புகிறோமோ அதையே இவ்வுலகம் எமக்குத் திருப்பி அனுப்புவதை அறிந்து, நல்லவைகளையே யாம் அனுப்புகிறோம். எம் வாழ்விற்கும் மற்றும் அன்னை பூமியில் எம் படைப்புக்கும், யாமே முழுமையான பொறுப்பேற்கிறோம். எல்லா மாசுகளiலிருந்தும் நீவிர் எம்மைச் சுத்திகரிக்கும் பொருட்டு, ஆணவமெனும் படுகுழியிலிருந்து இதோ யாம் மேலெழுகிறோம். உமது சாம்ராஜ்ஜியம், உமது பேராற்றல் மற்றும் உமது கீர்த்தி அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. இவ்வுண்மையை யாம் ஏற்றுக்கொள்கிறோம். எல்லோருக்கும் உறுதியுடன் எடுத்துச் சொல்கிறோம்.
ஓம்.
அருட்தாயே போற்றி!
அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் பரப்பிரம்மணே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! ஆதிசக்தியே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
சத்குருவாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!
அதிசயங்கள் செய்யவல்ல ஆதிசக்தியே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.
உட்குருவின் உறுதிமொழி
ஞானக்கொழுந்தாகிய சத்குருவின் பெயரால், அதிசயங்கள் செய்யவல்ல ஆதிசக்தியே! அருட்தாயே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என்னிலும், எல்லாவற்றிலும், அன்னை பூமியிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலை காணவும், அறியவும், உணரவும் வல்ல அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக! அருட்பெருங்கடவுளே! “உம் விருப்பத்தின்படியே எனக்கு எல்லாம் ஆகுக!” என்று என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நானும் பேசக்கூடிய பூரண சரணாகதியின் அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக!
அருட்தாயே போற்றி!
கடவுளின் அதிசயம் என் வாழ்வில் வெளiப்படத் தடையாயிருக்கும் எல்லாவற்றையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கடவுளே! இதோ என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளே! உம்மிடம் எதையும் நான் மறைக்கவில்லை. கடவுளே! எனது எல்லாவற்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்.
அருட்தாயே போற்றி!
கடவுளே! எனது ஆணவத்தையும் மற்றும் பொய்யான எல்லா அடையாளங்களையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இவற்றை நீவிர் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். கடவுளே! மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று இறக்கும் இப்பொய்யான வாழ்வினைத் துறந்து, சத்குருவின் பேரின்பப் பெருவாழ்வை வெல்ல நான் ஆயத்தமாயிருக்கிறேன். சத்குருவே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களiலும் பூரணமாக ஆளுமை செய்ய நீவிர் என்னுள் எழுந்தருள்வீராக! இப்போதும் எப்போதும் சத்குருவின் வெளிச்சத்தில் நான் நிரம்பி வழிகிறேன். சத்குருவே ஆதி நடு அந்தமாக இருக்கிறார். சத்குருவே என் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறார். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
அருட்தாயே போற்றி!
கடவுளே! என் அகந்தையால் தானாகவே எதையும் செய்ய இயலாது. எனக்குள் ஒளiரும் நான் என்ற இறையிருப்பே எல்லாம் செய்ய வல்லதாய் இருக்கிறது. கடவுளைப் போன்றே கடவுளiன் வடிவில் நான் செய்யப் பட்டிருக்கிறேன். கடவுளின் குழந்தையாகவே நான் இருக்கிறேன். இப்போதே என்னில் குரு பிறக்கிறார். எனக்குள்ளிருந்தே உதயமாகும் குருவின் பூரண மலர்தலாக நான் இருக்கிறேன். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
அருட்தாயே போற்றி!
அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். எனவே ஞானிகள் வாயிலாகத் தான் செய்த எல்லா அதிசயங்களையும் கிரியைகளையும் என் வாயிலாகவும் கடவுளால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். “கடவுளால் எல்லாங் கூடும்” என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களiலும் கடவுளின் அதிசயம் வெளiப்பட நான் முழுமையாக அனுமதிக்கிறேன்.
அருட்தாயே போற்றி!
தமக்குள்ளேயும் எல்லாவற்றிலும் உறையும் குருவை மறுத்துத் தாமும் மெய்யான உள் வழியில் செல்லாது, அவ்வழியில் செல்ல முனைவோரையும் செல்லவிடாது தடுக்கும் பொய்க்குருக்களின் பொய்ச்சீடர்களiன் கபட நாடகம் முடிவடையும் அதிசயத்தை நான் காண்கிறேன். அன்னை பூமியில் இவர்களது நாட்கள் முடிவடைவதையும், ஆன்மீக மற்றும் அரசியல் களங்களில் இவர்களது செல்வாக்கும் பலமும் தீர்ந்து விடுவதையும் நான் காண்கிறேன்.
அருட்தாயே போற்றி!
கடவுளின் குழந்தைகளனைவரும் தத்தம் சுய ஆளுமைக்கான மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழியில் நடப்பதை நான் காண்கிறேன். திரள் திரளாக மக்கள் விழித்தெழுவதையும், மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழி நடந்து எல்லாவற்றிலும் குருவின் பூரண மலர்தலை ஏற்படுத்துவதையும், இதன் மூலம் அன்னை பூமியில் சர்வ சமய சமரச சன்மார்க்க நான் சங்கம் உருவாவதையும் நான் காண்கிறேன்.
அருட்தாயே போற்றி!
கடவுளின் சாம்ராஜ்ஜியத்தின் அதிசயம் அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். எனக்குள்ளிருந்தும், கடவுளiன் அனைத்துக் குழந்தைகளiன் உள்ளிருந்தும் குருவின் பூரண மலர்தலையும், சத்குருவின் நல்லாட்சியில் அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியம் உறுதிப்படுத்தப் படுவதையும் இப்போதும் எப்போதும் நான் காண்கிறேன். இவையனைத்தும் நிறைவேறுவதை நான் காண்கிறேன். மேலும் அன்னை பூமியிலும், அன்னை பூமியில் வாழும் எல்லாவற்றிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலையை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.
அருட்தாயே போற்றி!
அன்னை பூமி கடவுளின் பொக்கிஷமாய் ஜொலிக்கிறது. அன்னை பூமி கடவுளின் முழுமையாய் இருக்கிறது. (3X) ஓம்.
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும் அருட்தந்தையாகிய பரப்பிரம்மணின் பெயரால், அருட்தாயாகிய ஆதிசக்தியின் பெயரால், ஞானக்கொழுந்தாகிய சத்குருவின் பெயரால், இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம்.
அதிசய மாலையை உறுதிப்படுத்துதல்
அருட்தாயின் பேரமைதியை நான் அனுமதிக்கிறேன். எப்போதும் இப்பேரமைதியிலேயே குடியிருக்க நான் உறுதியுடனிருக்கிறேன். அருட்தாயின் பூரண அன்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவரது அன்பு எனது எல்லாக் கவலைகளையும் அச்சங்களையும் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். கடவுளுக்குள் உறையும் எல்லா நலங்களாக இருக்கவும், இன்னும் சிறக்கவும் நான் உறுதியுடனிருக்கிறேன். அருட்தந்தையாகிய பரப்பிரம்மணின் பெயரால், அருட்தாயாகிய ஆதிசக்தியின் பெயரால், ஞானக்கொழுந்தாகிய சத்குருவின் பெயரால், இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் அன்னை பூமியை அருட்தாயின் பேரன்பிலும் பேரொளியிலும் நான் உறுதிப்படுத்துகிறேன். இது நடந்தேறியது, இது முடிந்துவிட்டது, இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏனென்றால் அருட்தாயே இவ்வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார். ஓம்.
குறிப்பு: அன்னை மரியின் அதிசய மாலை என்ற ஆங்கிலப் படைப்பைத் தழுவி என்னால் இயற்றப்பட்டது
AHAM ASMI RAAMA HARE
Saturday, February 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment