Saturday, February 02, 2008

அலைமகளின் அருள்வாக்கு




என்னைப் போன்றே நீங்களும் தெய்வீகமானவரே!
என்னைப் போன்றே நீங்களும் வணக்கத்துக்குரியவரே!
என்னைப் போன்றே நீங்களும் வல்லமை மிக்கவரே!

எனக்கும் உமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

நாம் உருவத்தால் பெயரால் வெவ்வேறாகத் தோன்றினாலும், உருவத்துக்கும் பெயருக்கும் அப்பால் அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் ஒரே கடவுளிலிருந்தே உருவாகிறோம்.

அந்தக் கடவுளுக்கும் நமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.

ஏனென்றால், நான் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியும் தன்னுணர்வாம் மெய்யுணர்வாகவே அந்தக் கடவுள் எங்கும் எதிலும் எப்போதும் இருக்கிறார்.

உருவமும் பெயரும் பெற்ற போது, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறாகத் தோன்றும் அகந்தையாகிறோம், அகங்காரமாகிறோம்.
உருவற்ற பெயரற்ற, அகம் எனவும் அறியப்படும் நான் எனும் கடவுளின் நடனமே(தை) அகந்தை, காரமே அகங்காரம்.

விவரிக்க முடியாத உச்ச அதிர்வுகளில், நாம் ஒவ்வொருவரும் நானே. புலன்களுக்குப் பிடிபடும் குறைந்த அதிர்வுகளில், நானே வெவ்வேறாகத் தோன்றும் ஒவ்வொருவராயும் உருவாகிறேன்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருளின் அதிர்வுப் பரிமாற்றத்தாலேயே, வெவ்வேறாகத் தோன்றும் நாம் ஒவ்வொருவரும் உண்டாகிறோம்.

நானே என விளங்கும் ஒரே மெய்ப்பொருள் எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருப்பதால், அம்மெய்ப்பொருளின் மிகச் சிறந்த வெளிப்பாடான நாம் ஒவ்வொருவரும் கூட எங்கும் எப்போதும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும், தன்னிறைவுத் தன்மையோடும் இருக்கிறோம்.

இவ்வுண்மைக்கு மாறாக, நீங்கள் உம்மைக் கடவுளிலிருந்து மாறுபட்டவராகவும், அதனால் குறைபாடுள்ளவராகவும், மாசுள்ளவராகவும், அதனால் மற்றொன்றைச் சார்ந்தே வாழ வேண்டியவராகவும் கருதும் முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். இதை வேரோடு பிடுங்கி, கடவுளோடு வேரற ஒன்றி, என்னைப் போல் நித்திய ஜீவனில் நிலைபெற்று, என்னைப் போன்றே தெய்வீகப் பொலிவோடு அன்னை பூமியில் நீங்கள் ஒவ்வொருவரும் வளம் பல கண்டு வாழ்வீராக!

எனது இவ்வாஞ்சை, இதோ இங்கேயே இப்போதே, நிறைவேறும் பேரின்பத்தில் திளைத்தே, நான் எஞ்ஞான்றும் தியானத்தில் விழி திறந்து இன்புற்றிருக்கிறேன்.

No comments: