Saturday, February 02, 2008

ஆன்ம நேய ஒருமையை உறுதிப்படுத்தும் வள்ளலாரின் புதிய ஏற்பாடு

உச்சியில் முளைத்து நெற்றியில் படரும்
அருட்பெருஞ்ஜோதிக் கொடியில்
செஞ்சுடர்ப்பூ.

செஞ்சுடர்ப்பூவின் வாசம்
நாசியிலோடும் வாசியில் சேர
நாவிலூறும் அருளமுதம்.

அருளமுதம் தாரையாய்த்
தொண்டைக்குள் வீழ
மெய்யெங்கும் மூளும் உயிர்த்தீ.

உயிர்த்தீ அனலால்
பரவும் மெய்யெங்கும்
நேசச் சூடு.

நேசச் சூட்டில் இருதயம் உருக
உணர்வில் பெருகும்
ஆன்ம நேய ஒருமை.

ஆன்ம நேய ஒருமையால்
கனிந்து அன்பாய்க் குழையும்
அறிவு.

அன்பாய்க் கனிந்த அறிவு
எல்லா உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாத்து வழிநடத்தும்
ஆற்றலாகும்.

ஆற்றலாகித் தொண்டு செய்யும் அறிவின் அன்புக் கனிவே
தனிப்பெருங்கருணைக்கு மூலமாகி மேலெழுந்து
அருட்பெருஞ்ஜோதிக் கொடியாய் உச்சியில் முளைக்கும்.

அறிவின் அருளாற்றலே
தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் வீழும்
நல்வித்து.

தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் முளைக்கும் அருட்பெருஞ்ஜோதிக் கொடியே
மரணமிலாப் பெருவாழ்வை உலகறிய நடப்பட்ட
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க “நான்” சங்கக் கொடி.

உன் நெற்றியில் படரும் இக்கொடியே
இம்மருட்பொய்யுலகைத் திருத்தி அருண்மெய்யுலகாக்க
திருவருட்பிரகாச வள்ளலாராகிய நான் ஏற்றியிருக்கும் புதிய ஏற்பாடு.

என் புதிய ஏற்பாட்டை
உன் நெற்றியில் யாவருங் காணப்
பகிரங்கமாகவே கடை விரித்திருக்கிறேன்.

சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
என் புதிய ஏற்பாட்டைக்
கொள்வாருளர்.

அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான்
என் அன்பு மகனான மகளான உனக்கு
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.

நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
அன்னை பூமியில் கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.

உன் வாயிலாக
என்னையே அன்னை பூமிக்குத் தந்து
மெய்யுரைக்கின்றேன்.

இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

No comments: