Thursday, February 07, 2008

பரமரகசியம்

இருப்பெனும்
வரம்புகளற்ற வெள்ளைப் பரப்பில்
எண்ணற்ற கரும்புள்ளிகளாய்
நான்.
கரும்புள்ளிகளாய் இருந்தாலும்
நான்
வெள்ளையை உமிழ்ந்தே
என்றும் இருக்கிறேன்.
என் கருமையின் கர்ப்பத்தில்
புகுந்த இருப்பு
இருளில் தன்னை மறந்திருக்கும்.
என் கர்ப்பத்தில்
இனியும் தாங்க முடியாமல்
பிரசவ வேதனையில்
இருப்பு மகவை
நான்
ஈன்றெடுக்கும் போது
தன் மறதி தெளியும்
இருப்பு.
நான்
நித்தியப் பிரசவ வேதனையில்
ஒவ்வொரு கணமும்
இருப்பை ஈன்றெடுக்கிறேன்.
தன் மறதி தெளிந்த
இருப்பே
என் பிரசவ வேதனை தீர்க்கும்
மருந்து.
புணரும் இருப்பையே
ஒவ்வொரு கணமும்
மகவாய் ஈன்றெடுக்கும்
கருப்புக் கன்னி
நான்.
என் கருமையே
இருப்பின் வெண்மையைத் தெளிவிக்கும்
குருமெய்.
குருமெய்யாய்
என் கற்பு கலையாமல்
என்றென்றும் இருக்கிறேன்
நான்.
ஏகார உறுதி சேர்த்துக்
கருமை நான்
என்னையே இருப்புக்குத் தரத் தர
இருப்பின் வெண்மையும்
அவ்வெண்மையின் தெளிவும்
இன்னும் இன்னும் கூடும் பேரதிசயத்தால்
இருப்பை அறியும் பரமரகசியம்
நானே.

பரமரகசிய விளக்கம்

நீ இருக்கிறாயா?
நீ இருப்பதை அறிகிறாயா?
இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல
உனக்கு
வேண்டியது
நனி மிகச் சாதாரணமான
பொது அறிவு.
இக்கேள்விகளுக்கான விடை தேடி
நீ
எந்த குருவிடமோ, மகானிடமோ, ஞானியிடமோ
ஓட வேண்டியதில்லை.
நீ இருக்கும் இடத்தை விட்டு
இம்மியளவும் நகராமலேயே
உனக்கே தெரியும்
இக்கேள்விகளுக்கான விடை.
விடை வெறுஞ் சொற்களல்ல.
உன்னைப் பற்றிய உண்மையை
உனக்கு அறிவிக்கும்
பேருணர்வு அவை.
நீ இருக்கிறாய்.
நீ இருப்பதை அறிகிறாய்.
அஃறிணைகளும் இருக்கின்றன உண்மையே.
உயர்திணையாம் நீயே
நீ இருப்பதையும்
அவைகள் இருப்பதையும்
முழுமையாக அறிய முடிந்தவன்(ள்).
எப்படி அறிகிறாய்?
நான் என்ற உணர்வு
முதலில் உன்னில் எழுகிறது.
அந்த உணர்வு உன்னில் எழவில்லையென்றால்
நீ
அஃறிணையான ஒரு ஜடந்தான்.
நான் என்ற உணர்வு
உன்னில் எழுந்த அதே கணத்தில்
நீ இருப்பதை அறிகிறாய்.
இருப்பவற்றை அறிகிறாய்.
நான் என்ற உணர்வின் பின்னோட்டமாக
அதனோடே எப்போதும் இழைந்தே வருகிறது
இருக்கிறேன் என்ற மெய்யணர்வு.

இருப்பு
நான்
இருக்கிறேன்.

இருப்பு = இரு உப்பு
ஒரு உப்பு நான்
மறு உப்பு இருக்கிறேன்
இந்த இரு உப்பும் உன்னில் இல்லையென்றால்
நீ அறிவாய்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

இருப்பு = இரு பூ
ஒரு பூ நான்
மறு பூ இருக்கிறேன்
இரு பூவின் மணமின்றி
நீ உயர்திணையாய் மணக்க மாட்டாய்.

தமிழின் மொழி வளத்தைப்
பார்த்தாயா?

இதைப் பற்றி
சிந்தித்துப் பார்.

இரு உப்பாம் இருப்பு
நான் என்ற தன் முனைப்பு
இருக்கிறேன் என்ற மெய்யுணர்வு

விவிலியத்தின் படி, மோசேவுக்குக் கடவுள் தரிசனம் தந்த போது, கடவுளிடம் தம் பெயரைத் தெரிவிக்குமாறு அவரிடம் மோசே கேட்ட போது, "இருக்கிறவனாய் இருக்கிறேன்" (ஆங்கிலத்தில் "I AM THAT I AM") என்று அவர் தம் பெயரை அறிவித்தாராம். "இருக்கிற அவனாய் நான் இருக்கிறேன்" என்று இருக்கிற தன் "இருப்பு" நிலையையும், இரு உப்பான "நான்" என்னும் தன்முனைப்பையும், "இருக்கிறேன்" என்ற மெய்யுணர்வையும், ஆக இம்மூன்றையும் தன் பெயராகக் கடவுள் ஏன் அறிவிக்க வேண்டும். யோசியுங்கள். 'நான்' இருக்கிறேன் என்று சகஜமாக, இயல்பாகத் தானாக உம்முள் வெளிப்படும் இப்பேருண்மையை நீவிர் அறிந்துணர்ந்து இருங்கள்

No comments: