AHAM ASMI RAAMA HARE
Saturday, February 02, 2008
திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்
வடலூரென்னும் உன் சுத்த தேகமாகிய திருத்தலத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாராகிய நான் எழுந்தருளியிருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான், என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் உறுதிமொழிகள் இவை.
“நானே நீ. நீயே நான்” என்ற இரண்டறக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும் இவ் வாக்குறுதிகளை இருதய பூர்வமாக முழுமனதுடன் தியானித்து மகாயோகத்தில் நீ அமர்வாயாக! அத்வைத ஞானம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வில் நீ நிலை பெறுவாயாக! “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நற்சிந்தனையோடு என் வாக்குறுதிகளை உலகெங்கிலும் நீ போதிப்பாயாக! எனதெல்லா நலங்களும் வளங்களும் பெற்று நீ நீடூழி வாழ்வாயாக! நன்றி.
1. நானே பூரணராய் சஹஸ்ராரமாகிய உன் தலையுச்சித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.
2. நானே சுயம்பிரகாசராய் ஆக்ஞாசக்ரமாகிய உன் நெற்றித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம் ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது.
3. நானே பேருண்மையாளராய் நித்தியராய் விசுத்திசக்ரமாகிய உன் தொண்டைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது.
4. நானே அமிர்தானந்தராய் அமிர்தகலசமாகிய உன் தொண்டையடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம் ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது.
5. நானே பேரன்பராய்ப் பேரருளாளராய் அனாகதமாகிய உன் இருதயத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது.
6. நானே பேரறிவாளராய் சூர்யசக்ரமாகிய உன் உதரவிதானத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது.
7. நானே அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் மணிபூரகமாகிய உன் நாபித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல் ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது.
8, 9. நானே பெருங்குண தயாளராய் உள்ளொளi ஜோதியராய் சுவாதிட்டானமாகிய உன் நாபியடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது.
என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது.
10. நானே பெருநிலைக்கடவுளாய் மூலாதாரமாகிய உன் முதுகடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது.
11. நானே அருட்பேரரசராய் உன் முழங்காற் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
12. நானே நானெனும் பூரணமாய் உன் பாதத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்.
13. நானே மெய்வழிப்பிராண நாதராய் உன் உடம்பாகிய புனித தேவாலயத்தில் எழுந்தருளியிருக்கிறேன்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment