உச்சிவெளியால் வெளுக்கும் நெற்றிஒளியில்
அச்சிதம்பர ரகசியம் வெளிப்படும்
வளிவழிப்படும் ஒளிதான் அளித்திடும்
அளிஅமுதால் மெய்தான் களித்திடும்
மெய்க்களியால் மெய்தான் கரைந்திடும்
உய்ந்தடையும் வெளியுள் ஒளியாய்
பூரணப்பெருவெளி மெய்தான் மெய்தான்
அதன்நடுஒளியும் மெய்தான் மெய்தான்
ஆரமுதளியும் மெய்தான் மெய்தான்
அதன்முன்வளியும் மெய்தான் மெய்தான்
ஆனந்தக்களியும் மெய்தான் மெய்தான்
தானந்தமில்லா மெய்தான் மெய்தான்
வெளியுள் ஒளியும் வளியின் கொடைதான்
அளியும் தெளிவாய் ஓளியின் கொடைதான்
மெய்யாய்க் களியும் அளியின் கொடைதான்
உயிர்க்கும் மெய்யும் களியின் கொடைதான்
மெய்யாய் யாவும் வெளியின் கொடைதான்
பயின்றால் மெய்யைத் தெளியும் மெய்தான்
உச்சிவெளியுள் மறையும் நெற்றிஒளியால்
அச்சிதம்பரம் ரகசியமாய் ஒளியும்
வளியும் அளியும் மெய்க்களியும்
ஒளியுள் ஒளிய மெய்த்தெளிவாய்
ஒளியும் வெளியுள் தான் கரைந்தேக
வெளியுள் வெளியாய் நான்மறைந்தேனே
சிதம்பர ரகசிய விளக்கம்
சிதம்பரம் என்பது சித்+அம்பரம்
சித் என்றால் அறிவு
அம்பரம் என்றால் ஆடும் இடம்
சிதம்பரம் அறிவு ஆடும் இடத்தைக் குறிக்கிறது, அதாவது நெற்றியைக் குறிக்கிறது.
தலையுச்சியைப் பரமாகாசம் என்றும் நெற்றியைச் சிதாகாசம் என்றும் கூடச் சொல்வார்கள்.
தலையுச்சியாகிய பரமாகாசமே நெற்றியாகிய சிதாகாசத்திற்கு ஆதாரமாயிருக்கிறது.
மண்டையின் மத்தியில் சுழிமுனை என்று சொல்லப்படும் இடத்தில் வெளியாகிய ஆகாசமும், வளியாகிய காற்றும், ஓளியாகிய நெருப்பும் ஒன்று சேர அளியாகிய அமுத நீர் தோன்றி அண்ணாக்கின் வழியே தொண்டைக்குள் இறங்க, மண்ணாலான மெய்யாம் உடம்பு களித்திடும். அக்களிப்பின் உச்ச கட்டத்தில் உடம்பு ஓளி வடிவமாம் ஜோதி ஸ்வரூபத்தை எய்தி வெளியாகிய பரமாகாசத்தில் மறையும்.
பரமாகாசமாகிய பூரணப் பெருவெளி உண்மையே
சிதாகாசமாகிய நெற்றி ஒளி உண்மையே
பூதாகாசமும் அதில் தோன்றும் வளியாகிய காற்றும் உண்மையே
வெளியும் வளியும் ஒளியும் ஒன்ற மூளையின் மத்தியில் தோன்றும் அளியாகிய அமுத நீரும் உண்மையே
அளியாகிய அமுத நீரிலிருந்து தோன்றும் கற்பமாகிய மண்ணும் அம்மண்ணாலான மெய்யாம் உடம்பும்
அவ்வுடம்பில் தோன்றும் களியாகிய ஆனந்தமும் உண்மையே
இவை யாவும் அழியா உண்மையே
வெளியிலிருந்து வளியும்
வளியிலிருந்து ஒளியும்
ஒளியிலிருந்து அளியும்
அளியிலிருந்து மண்ணும் மெய்யும் களியும்
தோன்றும்
உண்மையில் இவை யாவும்
பரமாகாசமாகிய பூரணப் பெரு வெளியின் அருட்கொடையே
சிதாகாசமாகிய அறிவொளியால்
இவ்வுண்மையைத் தெளிந்தால்
மெய்யாம் உடம்பு சுத்த தேகமாகும்.
பூதாகாசமும், காற்றும், நீரும், மண்ணும், மெய்யும், களியும் சிதாகாசமகிய அறிவொளியில் மறைய
தெளிந்த அறிவொளியும் பரமாகாசமாகிய பூரணப் பெருவெளியில் மறைய
இவற்றின் உருவத் தொகுதியான நான் பூரணப் பெருவெளியில் மறைந்து போனேன்.
சிதம்பர ரகசியம் வெளிப்படுவதும் மறைவதும் இவ்வாறே.
சாகாக் கல்வியின் சூக்குமம் இதுவே.
சூக்குமம் விளங்க திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகளை தியானம் செய்யுங்கள்.
உச்சி பிளந்துன் உள்ளே வெளிபுக
அச்சி தம்பர ஒளி
அச்சி தம்பர ஒளியால் மெய்க்குள்
சத்தி யஞானக் களி
சத்தி யஞானக் களியால் மெய்க்காம்
நித்தி யப்பெரு வாழ்வு
நித்தி யப்பெரு வாழ்வை யார்க்கும்
நிச்ச யஞ்செய் அருள்
நிச்ச யஞ்செய் அருளை அதுவே
உச்சி பிளக்கும் வெளி
உச்சி பிளக்கும் வெளியாம் அருளே
அச்சி தம்பர ஒளி
AHAM ASMI RAAMA HARE
Saturday, February 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment