Thursday, February 07, 2008

ஒளி வட்ட தியானம்

நான் எனக்குள்ளே மூழ்கி ஆழ்ந்த அமைதியிலிருக்கிறேன். என் மனம் எவ்வித சலனமுமின்றி
அடங்கியிருக்கிறது. என் உடம்பு சக்திப் பிரவாகத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் முழுமையாக அனுமதிக்கிறது. என் மூச்சு ஆழமாகவும் நீளமாகவும் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. மனம், உடம்பு, மூச்சு இவற்றின் ஒருமையில் நித்திய ஜீவனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

என் நெஞ்சின் மீது கை வைத்து, அன்பு மயமான என் இருதயத்தை நான் உணர்கிறேன். என் இருதயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளத்தில் மூழ்கி, நான் தெய்வீகப் பொலிவோடு திகழ்கிறேன். என் இருதயத்தில் சுடர் விடும் பேரன்பின் பிரகாசத்தால், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உண்டாகி இருக்கிறது. என் ஒவ்வொரு மூச்சிலும் இந்த ஒளி வட்டம் மேன்மேலும் விரிவடைவதையும், பன்மடங்காய் ஒளிர்வதையும் நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

இந்த ஒளி வட்டம் என்னைச் சூழ்ந்திருக்கும் எல்லோரையும் எல்லாவற்றையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரவணைக்கிறது. அரவணைத்த உடனேயே, ஒவ்வொருவரின் ஒவ்வொன்றின் இருதயமும் ஒரு பேரொளிக் கோளத்தின் மையமாகிறது. எண்ணிலடங்கா இவ்வொளி வட்டங்கள் அனைத்தும், இதோ என் இருதயத்தில் மையங் கொள்ள, நான் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகிறேன். என்னைப் போன்றே எல்லோரும் எல்லாமும் அருட்பெருஞ்ஜோதியாகிப் பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறுகின்றனர்.

No comments: