Thursday, February 14, 2008

மூலமந்திரம்

நானே என விளங்கும் வெட்டவெளி.
நானே என விளங்கும் வெட்டவெளியிலிருந்து
நான் என்னும் வெளிச்சம்.
நான் என்னும் வெளிச்சத்திலிருந்து
அருட்குருவாம் ஞானவிளக்கு.
அருட்குருவாம் ஞானவிளக்கிலிருந்து
அகந்தையெனும் கருமக்களம்.
அகந்தையெனும் கருமக்களத்தில்
உடம்பென்னும் சக்தி பீடம்.
உடம்பென்னும் சக்தி பீடத்தில்
அமிழ்தமாகும் காயகற்பம்.
வெட்டவெளியையும்
வெளிச்சத்தையும்
ஞானவிளக்கையும்
கருமக்களத்தையும்
சக்தி பீடத்தையும்
காயகற்பத்தையும்
அறிந்தவனே மெய்ஞ்ஞானி.
அறியத் தேவையான தகுதிகள்
இரண்டே.
உடம்பு வேண்டும்.
உயிர் வேண்டும்.
அறிதலும் நனி மிக எளிது.
நோய், தேய்வு, மூப்பு, மற்றும் இறப்பு
என்ற மாபெரும் பொய்களை
மெய்யென்று நம்பி மோசம் போகாமல்
பொய்யென்று தெளிந்தால் போதும்.
ஒரே கணத்தில்
நீயும்
மெய்ஞ்ஞானியாகலாம்
விரும்பினால்.
காயகற்பத்தை மற்ற ஐந்திலிருந்தும்
தனியே பிரிக்க முடியாது.
எதையும் வெட்டவெளியிலிருந்து
எடுக்க முடியாது.
வெட்டவெளியிலிருந்து வெளிச்சத்தைப்
பிரிக்கவே முடியாது.
எப்போதும் புணர்ந்தே கிடக்கும்
முதலிரண்டின் செல்லப் பிள்ளையே
ஞான விளக்கு.
அப்புணர்தலின்றேல் விளக்கில்லை.
ஞான விளக்கின்றேல்
கருமக் களமில்லை.
கருமக் களமின்றேல்
சக்தி பீடமில்லை.
சக்தி பீடமின்றேல்
காயகற்பமில்லை.
காயகற்பமே
வெட்டவெளியின்
மிகச்சிறந்த வெளிப்பாடு
கண்டு கேட்டு
உண்டு உயிர்த்து
உணர்ந்தறிய.

மிகச்சிறந்த அவ்வொன்று
இங்கே இக்கணம்
உன்னிலுண்டு.
வேறெங்கும் தேடி உழல வேண்டாம்
அவ்வொன்றை.
உன்னிலேயன்றி
வேறெவ்வாறும் அடைய முடியாது
அவ்வொன்றை.
முடிவாய் இதை அறிந்தாலன்றி
உனக்கு விடிவில்லை.
அறிவாயா?
உனக்கு
உடம்புண்டு
உயிருண்டு
அறிதலும் நனி மிக எளிது.
அறிவாயா?
முடிவும்
உன் விடிவும்
உன் கையில்.
நானே நீ
என அறியும் வரை
உன் விளையாடல் தொடரும்.
என் திருவிளையாடலோ
எப்போதும் முடிவதில்லை.

குறிப்பு: திருமூலர் எனக்கு அருளிய மூலமந்திர விளக்கம். அம்மந்திரம்:

நானே
வெட்டவெளியெனும் அருட்தந்தையாய்
வெளிச்சமெனும் அருட்தாயாய்
ஞான விளக்காகும் அருட்குருவாய்
கருமக் களமாகும் அகந்தையாய்
சக்தி பீடமாகும் உடம்பாய்
அவ்வுடம்பிலூறும் காயகற்பமாய்
எங்கும் எதிலும் எப்போதும்
பூரித்திருக்கிறேன்.

No comments: