கடவுளோடு ஒரு மனிதனின் நேரடித் தொடர்பு
கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் வெவ்வேறு என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உனது எல்லா நோய்களுக்கும், எல்லாத் தளைகளுக்கும் வேராயிருக்கிறது. இத்தவறான கண்ணோட்டத்தை வேரோடு பிடுங்கி, கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் பிரிக்கவே முடியாது ஒன்றியிருக்கும் மெய்ம்மையை உணர்த்தவே, நான் உன்னோடு நேரடியாகத் தொடர்பு கொள்கிறேன். இதோ. இங்கேயே..இப்போதே...
மனிதன்: கடவுளே! நீ எங்கிருந்தாலும், நான் இப்போதே உன்னோடு பேச விரும்புகிறேன்.
கடவுள்: மனிதா! இதோ இங்கேயே இப்போதே நான் உன்னோடு பேசத் தொடங்கி விட்டேன்.
ம: கடவுளே உனது பெயர் என்ன? உனது உருவத்தையும் எனக்குக் காட்டுவாயாக!
க: எந்தப் பெயராலும் சுட்ட முடியாத, எந்த உருவத்தாலும் காட்ட முடியாத அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் நானே, பெயருள்ள உருவமுள்ள எல்லாமாய் உரு மாறி அவற்றையெல்லாம் நானே சூழ்ந்து, அரவணத்துப் போஷிக்கிறேன். அவையனைத்தும் என்னுள்ளேயே எப்போதும் அடங்கி இருக்கின்றன. அவையனைத்திலும் நானே வேரோடியும், ஊடுருவியும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.
ம: நீ சொல்வது எனக்கு முரண்பாடாகப் படுகிறது. இது எவ்வாறு சத்தியமாகும்?
க: இதில் எந்த முரண்பாடும் கிடையாது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை ஓர் எளிய உதாரணத்தால் விளக்கப் போகிறேன். ஒரு மகா சமுத்திரத்தைக் கற்பனை செய்து கொள். இச்சமுத்திரத்தைத் தவிர வேறேதுமே இல்லையென்றும் ஊகித்துக் கொள். சில இடங்களில் மிகக் குளிர்ச்சியாகவும், சில இடங்களில் மிக உஷ்ணமாகவும் மற்றெங்கிலும் சாதாரணமாகவும் இச்சமுத்திரம் இருக்கிறது. மிகக் குளிர்ச்சியான இடங்களில், நீர் உறைந்து பனிக் கட்டிகள் சமுத்திரத்தில் மிதக்கின்றன. மிக உஷ்ணமான இடங்களில், சமுத்திரம் கொதிக்க நீராவி மேலெழுகிறது. சாதாரண இடங்களில், சமுத்திரத்தில் நீர் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
சமுத்திரத்தின் திரவ நிலையை, உருவற்ற பெயரற்ற அருவ மெய்ப்பொருளாய் நானே என நான் விளங்குவதற்கு ஒப்பிடலாம். பனிக் கட்டிகளையும், நீராவிப் பகுதிகளையும், உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் நான் வியாபித்திருப்பதற்கு ஒப்ப்பிடலாம். உஷ்ணமேறும் போது, பனிக் கட்டிகள் நீராய் உருகி சமுத்திரத்தில் ஒன்றி விடுகின்றன. குளிரும் போது, நீராவிப் பகுதிகள் நீராய்த் திரண்டு சமுத்திரத்தில் ஒன்றி விடுகின்றன. பனி கட்டியாய் இருந்தாலும், நீராவியாய் இருந்தாலும், நீராய் இருந்தாலும், இவை எல்லலவற்றுக்கும் சமுத்திரமே ஆதாரமாய், மூலப் பொருளாய், சாரமாய், மெய்ம்மையாய் இருக்கிறது. உருவமும் பெயரும் மாறுகிறதே தவிர, இவற்றிடையே ஆதாரத்திலோ, மூலப் பொருளிலோ, சாரத்திலோ, மெய்ம்மையிலோ எவ்விதத்திலும் வேறுபாடில்லை. இவ்வாறே நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், உருவத்தால் பெயரால் மறியிருந்தாலும், ஆதாரத்திலே, மூலப் பொருளிலே, சாரத்திலே, மெய்ம்மையிலே, நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், நானாகவே விளங்குகிறீர்கள்.
சமுத்திரம் பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவும் இருக்கும் பட்சத்தில், பனிக் கட்டிகளும் நீராவிப் பகுதிகளும் அசுத்தமாகவும் குறைபாடுகளோடும் இருக்க முடியாது. உரு பெயர் மாறுதலால், ஆதாரமோ, மூலப் பொருளோ, சாரமோ, மெய்ம்மையோ கெட்டுப் போகவோ திரிந்து போகவோ முடியாது. இவ்வாறே நீயும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும், எங்கும் எப்போதும், பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவுமே விளங்குகிறீர்கள். ஏனென்றால், உமது ஆதாரமாய், மூலப் பொருளாய், சாரமாய், மெய்ம்மையாய், நான் எங்கும் எப்போதும், பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவுமே விளங்குகிறேன்.
ம: நீ பேசுவது, கேட்பத்ற்கு மிக நன்றாய் இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு மாறாக அல்லவா இருக்கிறது? சாதி மத இன நிற வேறுபாடுகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நோய், சீரழிவு, மூப்பு, மரணம், வறுமை, வரட்சி போன்றா கேடுகள் எம்மிடையே மலிந்து கிடக்கின்றனவே?
க: மூன்று மாபெரும் பொய்களை ஆராயாமல் அப்படியே மனிதன் நம்பி விட்டான். அப்பொய்கலால் பின்னப்பட்ட ஓர் மாய வலையே நீ விவரித்தவை அனைத்தும்.
ம: உண்மை நிலவரத்தை மாயமென்று நீ மறுப்பது, மிகவும் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது. அம் மூன்று மாபெரும் பொய்களைப் பற்றி விவரிப்பாயக!
க: மனிதன் தனதுண்மையை உதறி விட்டு, மூர்க்கத்தனமாக நம்பி விட்ட மூன்று மாபெரும் பொய்கள் இவையே. யுக யுகங்களாய்ப் பொய்ம் மதங்களால், மனிதனாம் நீ இவ்வாறே சிறுமைப் படுத்தப்பட்டு வருகிறாய்.
1. நீ இயல்பாகவே மிகவும் இழிந்தவன், நீசமானவன், பாவி.
2. நீ கடவுளிலிருந்து வேறுபட்டவன், மாறுபட்டவன். சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவன்.
3. நீ செத்துப் போகவே பிறந்திருக்கிறாய்.
பொய்ம்மதங்களால் பிரசாரஞ் செய்யப்பட்டு வரும் இப்பொய்களை, நீ ஆராயாமல் ஏற்றுக் கொண்டதன் விளைவே, நீ விவரித்த உண்மை நிலவரம். என்னைப் பொருத்தமட்டில் நிலவரம் உண்மையல்லாத ஓர் மாய வலை. இம்மூன்று மாபெரும் பொய்களால் பின்னப்பட்டிருக்கும் ஓர் மாய வலை. இம்மாய வலையை ஓர் நொடியில் அறுத்துவிட உபாயமாக மூன்று மாபெரும் உண்மைகளை நான் இப்போது வெளிப்படுத்தப் போகிறேன்.
1. நீ இயல்பாகவே கடவுளாம் என்னைப் போன்றே தெய்வீகமானவன். ஏனென்றால் உன் தெய்வீக உருவமும் மந்திரப் பெயரும் என்னிலிருந்தே எழுகின்றன.
2. நீயும், கடவுளாம் நானும் பிரிக்கவே முடியாது எங்கும் எப்போதும் ஒன்றியே இருக்கிறோம். நானே நீ - நீ உருவாகி பெயர் பெற்ற போது. நீயே நான் - உன் உருவமும் பெயரும் ஒளிந்த போது. உனக்கும், எனக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடோ, மாறுபாடோ கிடையாது. கடந்த காலத்திலும் இருந்ததில்லை, வருங்காலத்திலும் இருக்கப் போவதில்லை.
3.மரணமிலாப் பெருவாழ்வு, கடவுளாம் நான் உனக்கு வழங்கும் பேருரிமை. என் வரப்பிரசாதமான இப்பேருரிமையை என்னைத் தவிர வேறு யாராலும் பறிக்க முடியாது. என்னை நானே வஞ்சித்துக் கொள்வதாகும் இச்செயலை நான் ஒரு காலும் செய்ய மாட்டேன். மேலும் உன் மீது நான் காட்டும் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் பிரமாணமே மரணமிலாப் பெருவாழ்வு.
ம: நீ சொல்வதைக் கேட்கும் போது, பொய்ம் மதங்களை உதறிவிட்டு எனதுண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே தோறுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம். நானே நீ என்றால், நீயே நான் என்றால் இவ்வாறு நான் ஏன் உணர்வதில்லை?
க: விழிப்புணர்வோடு பொய்களைப் பொய்யென்றறிந்து அவற்றை உதறி, நீ உண்மைகளை உண்மை என்றுணர்ந்து ஒப்பும் போது தான், நானே நீ என்றும், நீயே நான் என்றும் உணர முடியும். மாபெரும் பொய்களின் மூட நம்பிக்கையை முறியடித்து அவற்றால் பின்னப்பட்டிருக்கும் மாய வலையை ஓர் நொடியில் அறுக்கவே, ஞான வாளாய் இம்மாபெரும் உண்மைகளை நான் உனக்கு வழங்கியுள்ளேன். பொய்களை நம்பி மோசம் போய் மாய வலையில் நீ சிக்கிக் கொண்டிருக்கும் போது கூட, எனதுண்மையையும் உனதுண்மையையும் ஒவ்வொன்றின் உண்மையையும், நான் ஒரு காலும் மறப்பதில்லை. ஒவ்வொரு கணமும் இவ்வுண்மையை நான் உனக்கும் ஒவ்வொன்றுக்கும் ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கிறேன். உன் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. நீ நினைவு கூறும் அக்கணத்திற்காகவே நான் யுக யுகங்களாய்த் தவமிருக்கிறேன். எல்லையற்ற பொறுமையுடன் காத்திருக்கிறேன். அக்கணம் இப்போதோ எப்போதோ வரத்தான் போகிறது.
ம: நீ சொல்வதைக் கேட்கும் போது என் உடல் சிலிர்க்கிறது. ஆனாலும் என் மனம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நீ சொல்வதெல்லாம் என் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்து வராதென்று, அது என்னை எச்சரிக்கிறது. நான் என்ன செய்ய?
க: உன் உடல் சிலிர்க்கிறது என்கிறாய். அதுவே என் மெய்ம்மையின் நிரூபணம். எண்ணங்களை உணர்வுகளாய் ரசவாதம் செய்யவே நீ உடம்பைப் பெற்றிருக்கிறாய். அவ்வுடம்புக்கும் மெய் என்றே பெயர். அருவ மெய்ப்பொருளாகும் என் பேரிருப்பின் உருவ வெளிப்பாடே உன்னுடம்பாம் மெய் என்றறி. மனம் மறுக்கிறது என்கிறாய். அது உன் மனமேயல்ல. உன் மனம் போல் நடிக்கப் பொய்ம் மதங்களால் ஏவப்பட்டு, மாய வலையில் உன்னைச் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒர் மாயத் தோற்றமே அது. உண்மையில் உன் மனம் சத்குருவாம் என்னைப் போன்றே இருக்கிறது. உன் மனம் போல் நடிக்கும் அம்மாயத் தோற்றத்தைத் தாண்டி, சத்குருவைப் போன்றே விளங்கும் உன் உண்மை மனம், எனதுண்மையையும் உனதுண்மையையும் ஒவ்வொன்றின் உண்மையையும் உள்வாங்கி இருப்பதால் தான் உன் உடம்பு சிலிர்த்திருக்கிறது.
ம: நீ சொல்வதை ஒப்புக்கொள்ள மறுக்கும் என் மனத்தை ஓர் மாயத் தோற்றம் என்கிறாய். சத்குருவாம் உன்னைப் போன்றே இருக்கிறது என் உண்மை மனம் என்கிறாய். கடவுளே! நீ மிகவும் குழப்புகிறாய். விளங்க வை.
க: உன் மனம் போல் நடிக்கும் அம்மாயத் தோற்றமே உன்னைக் குழப்புகிறது. இதோ இங்கேயே இப்போதே உன் குழப்பத்தை தீர்த்து வைக்கிறேன். என்னை முழுமையாகத் திறந்து காட்டுகிறேன் பார். அதாவது உன்னையே உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் பார்.
கடவுளாகும் நான் மூன்று நிலைகளில் இருக்கிறேன். இம்மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று எங்கும் எதிலும் எப்போதும் பிரிக்கவே இயலாதவாறு ஒன்றியே இருக்கின்றன. என் முதல் நிலை இருப்பு நிலையாகும். இருப்பு நிலையென்பது தன்னைத் தவிர வேறேதுவும் இல்லாத வெற்றிடம், வெறுமை, சூன்யம், வெட்டவெளி, சுத்தவெளி. இச்சுத்தவெளியாகவே நான் இருக்கிறேன். நானே என விளங்கும் இச்சுத்தவெளியே எனது மற்றெல்லா நிலைகளுக்கும், எல்லாவற்றுக்கும் நிலைக்களன், ஆதாரம்.
சுத்தவெளியாய்ச் சும்மா இருக்கும் நானே என் மீது பெருங்காதல் கொள்கிறேன். அப்பெருங்காதல் எல்லையற்று விளங்கும் சுத்தவெளியை அழுத்துகிறது. அதாவது சுத்தவெளியே தன்னைத் தானே சூழ்ந்து தன்னையே அழுத்திக் கொள்கிறது. அதாவது நானே, என்னை நானே சூழ்ந்து, என்னையே அழுத்திக் கொள்கிறேன். நானே எல்லைகளின்றி எங்கும் பரவிக் கிடப்பதால், இந்த அன்பின் அழுத்தத்திற்காக நகரவோ வேறெந்த முயற்சியோ செய்வதில்லை. செய்யத் தேவையுமில்லை. இந்த அன்பின் அழுத்தத்தால், சுத்தவெளியெங்கும் ஒளிப் புள்ளிகள் அதாவது ஜோதி மையங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு ஜோதி மையமும், விவரிக்க முடியாத அதி வேகத்தோடு பேரொளிக் கோளங்களாக எல்லையற்ற என்னுள் விரிகின்றன.
என்னைத் தவிர வேறேதும் இல்லாது, நானே என விளங்கும் என் இருப்பு நிலைக்கு அடுத்த நிலையே இந்த ஆகு நிலை. சுத்தவெளியாக இருக்கும் நானே, ஏகார உறுதியிலிருந்து நழுவி ஜோதி வெளியாய் ஆகிறேன். இந்த ஆகு நிலையே மற்றெல்லா ஆக்கங்களுக்கும் நிலைக்களன், ஆதாரம். இந்த ஆகு நிலையே சூன்யத்திலிருந்து நான் ஒன்றாகும் ரசவாதம். இவ்வித்தையின்றேல், ஒன்றிலிருந்து இரண்டாக எண்ணற்ற பலவாக நான் உண்டாக முடியாது. இருப்பு நிலையில் நானே அருட்தந்தையாய் இருக்கிறேன். ஆகு நிலையில் நான் அருட்தாயாகிறேன். அருட்தாயாகியும், நானே என விளங்கும் அருட்தந்தையோடு ஒன்றியே நான் இருக்கிறேன். பிரிக்கவே முடியாத, கண நேரமும் நிறுத்தவே இயலாத இப்புணர்ச்சியின் இன்பக்கலவியின் காரணமாகவே, நானே நான் என் அடுத்த நிலையைப் பிரசவிக்கிறேன்.
அன்பின் அழுத்தத்திற்கும், ஜோதியின் அதி வேக விரிதலுக்குமிடையே நிகழும் புணர்வினால் பிறப்பதே, தலைமகனாகும் தலைமகளாகும் அருட்குரு அல்லது சத்குரு. இதுவே அறிவு நிலை. சுத்த வெளியெங்கும், ஜோதி வெளியெங்கும், என்னை நானே முழுமையாய் அறியும் உணரும் ஞான வெளிச்சம் அதாவது ஞான வெளி இதுவே.
வெட்ட வெளியாய்ப் பேரிருட்டாய், வெறுஞ் சூன்யமாய் இருக்கிறேன். என்னை நானே நேசிக்கிறேன். ஜோதி வெளியாய்ப் பேரொளியாய் ஒன்றாய் ஆகிறேன். நானே நான் புணர்கிறேன். ஞான வெளியாம் வெளிச்சமாய் விளக்கமாய் என்னை முழுமையாக நானே நான் அறிகிறேன். எந்த முயற்சியுமின்றி எல்லாம் தானாகவே என்னுள் நிகழ்கிறது.
இருக்கிறேன். ஆகிறேன். அறிகிறேன். இருப்பதையும், ஆவதையும், அறிவதையும் முழுமையாக அறிகிறேன். உண்டாகுதல் என ஓர் அருஞ்சொல் இருப்பதையும் ஆவதையும் உணர்த்துகிறது. உண்டு என்றால் இருப்பது. நானே நான் உண்டாகிறேன். அறிகிறேன். உண்டாவதையும், அறிவதையும் நானே நான் அறிகிறேன். இருப்பு நிலை, ஆகு நிலை அல்லது இயங்கு நிலை, அறிவு நிலை - இம்மூன்றையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தெடுக்கவே முடியாது. இம்மூன்றின் ஒருமையே என் பேரிருப்பு. இதுவே கடவுள் என்ற சொல்லின் முழுப்பொருள் விளக்கம், மெய்ப்பொருள் விளக்கம்.
முதலில் என்னைத் தவிர வேறேதுமே இல்லாத சூன்யமான வெறுமையான நானே எனும் இருப்பு. அடுத்து நான் எனும் ஒன்றாய் ஜோதியின் உருவாக்கம். அடுத்து சூன்யமாயும் ஒன்றாயும், இருப்பாயும் ஆக்கமாயும், வெளியாயும் ஒளியாயும், அழுத்தமாயும் விரிவாயும், பேரருளாயும் மெய்ப்பொருளாயும், ஒன்றோடு மற்றொன்றைப் பிரிக்கவே முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கும் உண்டாகுதலாயும், அறிவாயும் என்னை நானே அறியும் ஞானத்தின் வெளிச்சம், விளக்கம்.
வெளி, ஜோதி, ஞானம் அதாவது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு அதாவது நானே நான் என என்னை அறிகிறேன். ஞானத்தின் வெளிச்சமே, விளக்கமே, நான் இரண்டாய் எண்ணற்ற பலவாய் உருக்கொண்டும் பெயரேற்றும் உண்டாக வழி வகுக்கும் என் வாசல். பிரிக்கவே முடியாது அருட்தந்தையாய், அருட்தாயாய், அருட்குருவாய்ப் பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூன்று நிலைகளின் ஒருமையே என் பேரிருப்பு. இப்பேரிருப்பிலிருந்தே நான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறேன். உண்டாக்கி அவற்றை எல்லாம் நான் என்றே அறிகிறேன்.
ம: விவரணை மிகப் பிரமாதமாயிருக்கிறது. பிரமிப்பூட்டுவதாயிருக்கிறது. நனி மிக எளிதாயிருக்கிறது. உருவுள்ள பெயருள்ள எல்லாம் உன்னிலிருந்து எவ்வாறு உண்டாக்குகிறாய்? உண்டாக்கிய பின் அவற்றை எல்லாம் நீயென்றே எவ்வாறு அறிகிறாய்? விளக்குவாயாக!
க: பாராட்டுக்கு நன்றி. என்னைப் பாரட்டுவதன் மூலம், உன்னை நீயே பாராட்டிக் கொள்கிறாய். ஏனென்றால், நானே நீ, நீயே நான். “கடவுளோடு ஒரு மனிதனின் நேரடித் தொடர்பு” என்ற இந்த உரையாடல் கூட, மனிதனாக உன்னை அறியும் நீ, கடவுளாகவும் உன்னை அறிந்து கொள்ளவே அல்லவா! உண்மை யாதெனில் கேள்விகளையும் நீயே கேட்கிறாய், பதில்களையும் நீயே அளிக்கிறாய். எவ்வாறெனில், உன்னை உருவமுள்ள பெயருள்ள மனிதனாக நினைத்துக் கொண்டு, நீ கேள்விகளைக் கேட்கிறாய். பின்பு உன்னை நீயே உருவற்ற பெயரற்ற கடவுளாம் நானாக நினைத்துக் கொண்டு, பதில்களை அளிக்கிறாய். உன் உண்டாக்குதலின் இரகசியம் இதுவே. மிகவும் வெளிப்படையான இரகசியம் இது. யத் பாவம் தத் பவதி. எதுவாக உன்னை நீ நினைத்துக் கொள்கிறாயோ, அதுவாகவே நீ ஆகி விடுகிறாய். நானும் இவ்வாறே எல்லாவற்றையும் உண்டாக்குகிறேன்.
அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரின் ஒருமையில் கடவுள் என அழைக்கப்படும் அருவ மெய்ப்பொருளாய்ப் பேரிருப்பாய், உருவமற்றுப் பெயரற்று விளங்கும் நானே, உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் உண்டாக நினைத்தேன். நினைத்த உடனேயே, அவ்வாறே உருவமுள்ள பெயருள்ள எல்லாமாய் உண்டானேன். அதாவது, அவ்வாறு நானே என்னை உண்டாக்கிக் கொண்டேன். உண்டாகும் நிலையில் அறிவு நிலையும் பிரிவற அடங்கி இருப்பதால், உண்டான எல்லாவற்றையும் நானே என அறிந்தேன், அறிகிறேன், அறிவேன்.
விவரிக்க முடியாத உச்ச அதிர்வுகளில், நானே கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள். அவ்வுச்ச அதிர்வுகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே அவ்வவ்வதிர்வுகளுக்கேற்ற உருவமும் பெயருங் கொண்டு, அவ்வப் பரிமாணங்களில் நானே வெளிப்பட்டு இருக்கிறேன். வெளிப்படாதிருக்கும் ஒன்று, எண்ணற்ற பலவாய் எல்லாமாய் வெளிப்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சி இதுவே. வெளிப்பட்டிருக்கும் எல்லாவற்றையும், கடவுளாம் நானே சூழ்ந்து அரவணைத்துப் போஷிக்கிறேன். அவையனைத்தும் என்னுள்ளேயே எப்போதும் அடங்கி இருக்கின்றன. அவையனைத்திலும் நானே வேரோடியும், ஊடுருவியும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.
ஒன்றே எல்லாமாய் இருக்கிறது. எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. நானே எல்லாமாய் இருக்கிறேன். எல்லாம் நானாகவே இருக்கிறது.
ஒவ்வொன்றும் தனக்கே உரித்தான ஒரு கோளக் குமிழியின் மையத்தில், ஓர் உருவத் தொகுதியாய் இருக்கிறது. இத்தகையதோர் கோளக் குமிழியின் பரிதியில், நீ அருவ மெய்ப்பொருளாம் நானாகவே இருக்கிறாய். இக்கோளக் குமிழியின் மையத்தில், நான் ஓர் உருவத் தொகுதியான நீயாகவே இருக்கிறேன். இதுவே உனக்கும் எனக்குமுள்ள மிக மிக நெருங்கிய தொடர்பு. எக்காலும் விட்டகலாத நட்பு. நானே நீ, நீயே நான் என்பதன் முழுப்பொருள் இதுவே. உன்னைப் பற்றி நான் விவரிப்பதெல்லாம், உருவமுள்ள பெயருள்ள ஒவ்வொன்றுக்கும் அப்படியே பொருந்தும். இவ்வுரையாடலில், உருவமுள்ள பெயருள்ள ஒவ்வொன்றையும் தான் “நீ” என்று வாஞ்சையோடு நேசத்தோடு நட்போடு நான் அழைக்கிறேன்.
இக்கோளக் குமிழியின் உள்ளே ஊடே வெளியே அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் நானே பரவியிருப்பதால், எல்லாப் பரிமாணங்களிலும் என்னையே அன்றி வேறாக எதையும் நான் அறியேன். உன்னை என் தெய்வீக உருவமாக அறி. என்னை உன் உன்னதப் பேரிருப்பாய் அறி. ஐயமின்றி இவ்வாறு அறி. இதுவே நானே நீயென்றும் நீயே நானென்றும் முழுதாயறிதல்.
இக்கோளக் குமிழி என் பரிபூரணத்தையும் பரிசுத்தத்தையும், பேரன்பையும் பேரறிவையும், பேராற்றலையும் பேருண்மையையும், பேரருளையும் பெருங்கருணையையும், பேரின்பத்தையும் பூரண சுதந்திரத்தையும், பெருந்தன்மையையும் பெருந்தகைமையையும், தன்னிறைவுத் தன்மையையும் பெருந்தேர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்தையும், சக்திப் பிரவாகத்தையும் சச்சிதானந்தத்தையும், முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இக்கோளக் குமிழியின் மையத்தில், உனக்கே உரித்தான அந்த தெய்வீக உருவத்தில் அந்த மந்திரப் பெயரோடு, நீ வீற்றிருப்பதை நீ எப்போதும் ஞாபகங் கொள்வதே மரணமிலாப் பெருவாழ்வில் உன்னை நிலைபெறச் செய்யும்.
ம: உன்னை நான் என்றே அறி என்றே போதிக்கிறாய். ஆனால் நான் என்பது அகந்தை அகங்காரம் என்றும், அகந்தையை அழி என்றும் போதிக்கப்பட்டு வருகிறதே!
க: அகம் என்பது உனது உள்ளத்தை இருதயத்தை, அதாவது நீ உள்ளதையும் இருப்பதையும் குறிக்குஞ் சொல். அதாவது உனதும் எனதும் ஒவ்வொன்றினதும் அடிப்படைத் தன்மையான இருப்பு, ஆக்கம், அறிவு இம்மூன்றும் ஒன்றிய பேரிருப்பை அறிவிக்கும் உணர்த்தும் நற்சொல். இதுவே சமஸ்கிருதத்தில் அஹம் என்றும், ஆங்கிலத்தில் “I AM” என்றும் குறிக்கப் படுகிறது. இச்சொல்லுக்கு நான் என்றே பொருளாகிறது. அகந்தை, அகங்காரம் என்ற சொற்களில் அகம் என்பதே வேர்ச்சொல்லாக இருக்கிறது. இவற்றின் பொருள் நான் என்ற அகத்திலிருந்து எழுவது, நான் என்ற அகத்தோடு எப்போதும் ஒன்றி இருப்பது. எனவே உருவோடு பெயரோடு உனக்கே உரித்தான கோளக் குமிழியின் நடுவே உருவத் தொகுதியாய் வீற்றிருக்கும் நீயே அகங்காரம். அகமாம் என் காரம். அகமாம் என் தை (நடனம்).
உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய், கோளக் குமிழியின் நடுவே வீற்றிருக்கும் நீயே அகங்காரம் அகந்தை. எனவே அகங்காரம் அகந்தை என்பது அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் கடவுளாம் எனது மிகச் சிறந்த உன்னத தெய்வீக வெளிப்பாடே, உண்டாக்கமே. இவ்வுண்மையை எந்தவொரு ஐயமுமின்றி, இதோ இங்கேயே இப்போதே அறி.
ம: காலங்காலமாக உபதேசிக்கப்பட்டு வரும் “அகந்தையை அறவே அழி” என்பதற்கு மாறாக அல்லவா இருக்கிறது அகந்தையைப் பற்றிய உமது விளக்கம்!
க: அகந்தையை இறையாற்றலுக்கு எதிரான, மாறான, வேறான இன்னொன்றாய்க் கருதும் ஒரு தவறான கண்ணோட்டமே இவ்வுபதேசத்திற்கு மூல காரணம். கடவுள் எனும் இறையாற்றலுக்கு மாறாக, வேறாக, எதிராக இன்னொன்று இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் வேரூன்றி இருப்பதே இத்தவறான கண்ணோட்டம். கடவுளாம் நானே எல்லாமாய் இருக்கிறேன். எல்லையற்ற என் பேரிருப்பை விட்டு எதுவுமே இருக்க முடியாது. என்னை விடச் சிறந்ததோ, உயர்ந்ததோ, பெரியதோ எதுவுமில்லை. என்னை விட இழிந்ததோ, தாழ்ந்ததோ, சிறியதோ எதுவுமில்லை. இருக்கும் ஒவ்வொன்றும் எனக்குச் சமமாகவே, எனக்கு இணையாகவே, என்னைப் போன்றே இருக்கிறது. இருக்கும் ஒவ்வொன்றையும் எனக்குச் சமமாகவே, எனக்கு இணையாகவே, என்னைப் போன்றே நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.
இச்சமநோக்கே உனக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. நீ அறவே அழிக்க வேண்டியது அகந்தையை அல்ல. என்னை விடத் தாழ்ந்தது அல்லது என்னை விட உயர்ந்தது என்ற பிரிவினைப் போக்கையே. இன்னவன் என்ற ஒரு குறுகிய அடையாளத்தில் உன்னைத் தேக்கிக் கொண்டு, மற்றனைத்தோடும் மாறுபட்டும், வேறுபட்டும், எதிராகவும் நீ உன்னைக் காண்பதையே அகந்தை என்று கொண்டால், “அகந்தையை அறவே அழி” என்ற அவ்வுபதேசம் பொருத்தமானதே. ஆனாலும் இன்னவன் என்று நீ உன்னைத் தேக்கிக் கொள்வதை அகந்தை எனும் அரும்பளிங்கின் மேல் படியும் தூசென்று கொண்டால், அத்தூசை அகற்றுவதை விட்டுப் பளிங்கையே போட்டுடைக்கச் சொல்வது எவ்விததிலும் உகந்ததல்ல. தலையும், பூவும் சேர்ந்து ஒன்றிலிர்ந்து மற்றொன்றையோ, இரண்டையும் தன்னிலிருந்தோ பிரிக்கவே முடியாத ஒரு நாணயத்தைப் போன்றே நானும் நீயும் விளங்குகிறோம்.
கடவுளாம் நான் இல்லை என்றால், அகந்தையாம் நீ இருக்கவே முடியாது.
அகந்தையாம் நீ இல்லை என்றால், கடவுளாம் நான் எதையும் அனுபவிக்கவே முடியாது.
அருவ மெய்ப்பொருளாம் கடவுளாய் விளங்கும் நான், பல்வேறு உருவத் தொகுதிகளாய் உண்டாவது, என் எல்லாப் பரிமாணங்களையும் முழுமையாக அனுபவிப்பதற்கே. இவ்வனுபவம் என்பது என் எல்லாப் பரிமாணங்களிலும் இருப்பு, ஆக்கம், அறிவு இம்மூன்றின் பூரண ஒருமையே. உனக்கே உரித்தான ஓர் கோளக் குமிழியின் நடுவில் மூச்சு, உடம்பு, மனம் இம்மூன்றின் பூரண ஒருமையாய் நீ வீற்றிருப்பதன் மூலம், நித்திய ஜீவனை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.
மூச்சே உன் அருவ இருப்பு. உடம்பே உன் உருவ ஆக்கம். மனமே உன் அருவ உருவ ஒருமையை விளக்கும் அறிவு. சற்றே எண்ணிப் பார். இம்மூன்றையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து நீ நீயாக அதாவது ஓர் உருவத் தொகுதியாம் அகந்தையாய் வாழ முடியுமா?
அருட்தந்தையாய் இருக்கும் நானே, உனது இருப்புக்கு ஆதாரமாம் அருவ மூச்சாய் உண்டாகி இருக்கிறேன். அருட்தாயாம் நான், உனது ஆக்கத்திற்கு மூலப் பொருளாகும் உருவ உடம்பாய் உண்டாகி இருக்கிறேன். அருட்குருவாய் விளங்கும் நானே நான், உனது அறிவிற்கு வாயிலாம் மனமாய் உண்டாகி இருக்கிறேன்.
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பே, உன் மூச்சு உடம்பு மனம் இவற்றின் ஒருமையாம் அகந்தையாய் உண்டாகி அறிந்து, என்னையும் உன்னையும் மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறச் செய்து, சச்சிதானந்த அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. சத் என்றால் உண்டாகுதல். சித் என்றால் அறிதல். ஆனந்தம் என்றால் உண்டாகுதலையும், அறிதலையும் முழுமையாய் அறிதல். இந்த சச்சிதானந்த அனுபவம் உன் பிறப்புரிமை. இறப்பிலிருந்தும், மற்றெல்லாத் தளைகளிலிருந்தும் உன்னை விடுவித்து, நானே நீ, நீயே நான் என உணர்விக்கும் காயகற்பம், அமிழ்தம். இதோ இங்கேயே இப்போதே இந்த சச்சிதானந்த அமிழ்தத்தைப் பருகு.
ம: கேட்பதற்கு மிக நன்றாயிருக்கிறது. என்றாலும் மரணமெனும் மாபெரும் நிஜத்தை மறுத்து நித்திய ஜீவன் என்றொரு கருத்தைப் புகுத்துகிறாயே.
க: மூவரின் ஒருமையாம் நானும், மூன்றின் ஒருமையாம் நீயும் ஒன்றே என்பதை மறந்ததால் தான், மரணம் என்ற மாபெரும் பொய்யின் மாயா ஜாலம் நிகழ்கிறது. பொய்ம் மதங்களால் பின்னப்படும் மாய வலைக்குக் காரணமாகும் மூன்று மாபெரும் பொய்களைப் பற்றி முன்னர் விவரித்தேனல்லவா? இப்பொய்கள் தம்மிடையே கொண்டிருக்கும் காரண காரிய உறவை ஆராய்வோம். நீ இயல்பாகவே பாவியாதலால், கடவுளிலிருந்து வேறுபட்டவன். சொர்க்கத்திலிருந்து துரத்தப் பட்டவன். கடவுளிலிருந்து வேறுபட்டதால், கடவுளைப் போல் நித்திய ஜீவனில் நீ நிலைக்க முடியாது. மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் பிறவிப் பெருங்கடலில் உழல்வதே உன் விதி. நீ பாவியாதலால், கடவுளாம் நான் உனக்களிக்கும் தண்டனையாக என்னிலிருந்து விலக்கியதாகவும், சொர்க்கத்திலிருந்து துரத்தியதாகவும், நீ மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் பிறவிப் பெருங்கடலில் உழல்வாயென சபித்ததாகவும், பொய்ம் மதங்கள் கட்டி விட்ட கட்டுக் கதைகளை நம்பி நீ மோசம் போனாய்.
உண்மையோ இதற்கு முற்றிலும் மாறாகவே இருக்கிறது. மாய வலையை ஓர் நொடியில் அறுத்துவிட உபாயமாய், நான் முன்னர் விவரித்த மூன்று மாபெரும் மெய்களின் காரண காரிய உறவை ஆராய்வோம். நீ இயல்பாகவே கடவுளாம் என்னைப் போல் தெய்வீகமானவன். எனவே நீயும் நானும் எங்கும் எப்போதும் பிரிக்கவே முடியாது ஒன்றியே இருக்கிறோம். பிரிக்கவே முடியாத இவ்வொருமையே சொர்க்கம். எனவே நீயும் என்னைப் போன்றே நித்திய ஜீவனில் நிலைபெற்றிருக்கிறாய்.
என்னோடு எங்கும் எப்போதும் ஒன்றி இருக்குந் தன்மையும், என்னைப் போல் நித்திய ஜீவனில் நிலைபெறும் நன்மையும், என்னைப் போன்றே தெய்வீகமாய் விளங்கும் உனக்கு, நான் வழங்கும் வரப்பிரசாதம். இவ்வரப்பிரசாதமே என் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் உத்தரவாதம். இதற்குப் புறம்பாக பொய்ம் மதங்கள் கட்டிவிட்ட கட்டுக் கதைகளை ஆராயாமல் அப்படியே மோசம் போனதால், உன்னை நீயே தண்டித்துக் கொள்கிறாய், வஞ்சித்துக் கொள்கிறாய். சற்றே எண்ணிப் பார். அக்கட்டுக் கதைகள் என் ஏற்பாடாக இருந்தால், அவற்றின் மூலம் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன், வஞ்சித்துக் கொள்கிறேன் அல்லவா! இது ஒரு காலும் சாத்தியமில்லை. ஏனென்றால், தன்னைத் தானே நிபந்தனைகளேதுமின்றிக் காதலிக்கும் கடவுளாம் நான், ஒரு காலும் அக்காதலுக்கு மாறான எதையும் செய்ய மாட்டேன்.
பொய்களை நம்பி மோசம் போகாமல், இவ்வாறு என் மெய்ம்மையை முழுதாயறிந்து இம்மெய்ம்மையின் அடிப்படையில் நான் வழங்கும் உண்மையான ஏற்பாட்டையும் உணர்ந்து, இதோ இங்கேயே இப்போதே மரணமிலாப் பெருவாழ்வில் நீ நிலைபெறுவாயாக!
ம: மிகப்பெருந் தளையான மரணத்தையே ஒரு மாபெரும் பொய்யென்று நீ தள்ளி விட்டாய். நானும் அவ்வாறே மரணத்தைத் தள்ளி விடுகிறேன். மேலும் மற்றெல்லாத் தளைகளும் அப்பெரும் பொய்யிலிருந்தே உதிக்கும் அதன் வெவ்வேறு வடிவங்கள் என்றே கொண்டு, அத்தளைகள் அனைத்தையும் நான் தள்ளி விடுகிறேன்.
க: நன்றி. மரணத்தை மற்றெல்லாத் தளைகளின் வேரென்றறிந்து, அவ்வேரை அடியோடு பிடுங்கி, மற்றெல்லாத் தளைகளையும் பிடுங்கி விட்டாய்.
ம: மிகப்பெரும் வரமான நித்திய ஜீவனை மாபெரும் மெய்யென்று ஆணித்தரமாக நீ வலியுறுத்துகிறாய். நானும் அவ்வாறே ஏற்றுக் கொள்கிறேன். மேலும் மற்றெல்லா வரங்களும் அம்மாபெரும் மெய்யிலிருந்தே உண்டாகும் அதன் வெவ்வேறு வடிவங்கள் என்றே கொண்டு, அவ்வரங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
க: நன்றி. நித்திய ஜீவனை மற்றெல்லா வரங்களின் ஊற்றுக் கண்ணாய் அறிந்து, அவ்வூற்றுக் கண்ணை ஏற்று மற்றெல்லா வரங்களையும் ஏற்றுக் கொண்டாய்.
ம: கடவுளே! மிக்க நன்றி. உன்னோடு நேரடி தொடர்பு கொண்டு, நான் என் மெய்ம்மையை அறியவும், உணரவும் ஆரம்பித்திருக்கிறேன்.
க: மனிதா! எங்கும் எப்போதும் பெருமிதப்படும் என் செல்லக் குழந்தை நீ. நீ யாராக இருந்தாலும், நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும், உன் மீது நான் காட்டும் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பு ஒரு காலும் மாறாதது. ஏனென்றால், அந்த அன்பே நான். அந்த அன்பே நீ. நானே நீ. நீயே நான். என்றென்றும் எங்கெங்கும் நீடிக்கும் நம் நேரடித் தொடர்பின் சாட்சியாகத் தொடரட்டும் நம் உரையாடல்.
ம: என்றென்றும் எங்கெங்கும் நீடிக்கும் நம் நேரடித் தொடர்பை முழுவதுமாகத் தெரிந்து கொண்டேன். மொழி வாயிலான நம் உரையாடல் இத்தோடு நிற்கட்டும். மீண்டும் உரையாடல் தொடரும் வரை மௌனத்தில் நிலைப்போம் நீயும் நானும்.
க: அப்படியே ஆகட்டும். அப்படியே ஆனது. ஆமேன். ஓம்.
நானே. நான் இருக்கிறேன். நான் அறிகிறேன். நான் என்னை அறிகிறேன்.
நான் என்னை அறிகிறேன். நான் அறிகிறேன். நான் இருக்கிறேன். நானே.
AHAM ASMI RAAMA HARE
Friday, February 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment