கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
ஏழாம் அறிவின் தீர்க்க தரிசனம்
"சத் தர்ஷனம்" என்னும்
துகளளவும் துரிசற்ற தூய நிலையை
எங்கும் எதிலும் எப்போதும்
காணவும் அறியவும் உணரவும் வல்ல
தூய நோக்கு
அதி அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
நள்ளிரவில்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது
என்னை அறையும்
நீவிர் யாரோ?
பெயர் சொன்னால்
அப்பெயரால் நீ என்னை அழைக்க
அப்பெயரை நீ பூசை செய்ய
அப்பெயரை நீ உருவகித்துப்
படத்தில் மாட்டிக் கும்பிட
அப்பெயரின் பேரில்
மதமொன்றை நிறுவிட
இவ்வாறாக
ஆறறிவு நிலையில்
பற்பல தந்திரங்கள் செய்யத் தெரிந்த
நீ
அத்தந்திரங்களால்
ஒரு காலும்
என் தாள்களின் தூசுகளைக் கூடத்
தொட முடியாது
கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
இருந்தாலும்
ஒரு பொருள் பொதிந்த பெயரை
அன்பின் மிகுதியால்
உனக்குச் சொல்லுகிறேன்
"நாயகன்"
"வாலறிவன்" என்று
வள்ளுவர் சொல்கிறாரே
அதுவே பெயரின் பொருளோ?
ஆம், அதுவே
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறறிவு ஈறாக
பிரபஞ்ச உயிர்த்திரள்
ஆறின் ஓருமையாம்
ஏழில் நிற்க
மூளையின் மத்தியில்
தீப்பிழம்பாய்த் தோன்றும்
"வாலறிவன்"
அதாவது தூய நோக்கை உடையவன்
எனப் பொருள்படும்
"நாயகன்"
ஆனாலும்
என் பிடி
இவ்வார்த்தைகளில் அறவே இல்லை
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
என்னைப் பிடிக்கும்
ஒரே வழி
கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
இவையும் வார்த்தைகள் தானே.
இவ்வார்த்தைகள் சுட்டும்
ஒருமைப் பேருணர்வை
உனக்கு நன்றாக உறைக்க வேண்டும்
உன் சுரணையில் அது நன்றாக ஏற வேண்டும்
என்பதற்காகவே
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது உன்னை அறைகிறேன்.
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள்
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
"வாலறிவன் நற்றாள் தொழாரெனின்"
என்ற வள்ளுவர் குறளுக்கும்
உமது இவ்வாக்குக்கும்
தொடர்பு உண்டோ?
உண்டு.
"கற்றாதனால் ஆயபயன் என்கொல்?"
அஞ்ஞானக் கல்வியால்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நிற்க வேண்டிய
உன் கவனம் நழுவி
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
வாலறிவன் தாள்களை மறந்து
ஏழாம் அறிவை
நீ
விட்டு விட்ட
ஞானத் திமிரைச் சாடும்
அவரது மெய்ஞ்ஞானப் புலம்பல்
எப்போதும் ஒருமையுணர்வில்
நிற்க அதி கவனமாயிரு
அவ்வொருமை
ஒரு கணம் போயினும்
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
"வால்" என்பதன் பொருள் யாதோ?
ஒன்று முதல்
ஆறு ஈறாக
ஆறாதார பிரபஞ்ச உயிர்த்திரள்
"நாய்" என்னும் நிராதார மேனிலை
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் ஒன்றி நிற்கும் தூய்மை
"வள்ளல்" யாரோ?
என் பெயரே.
ஆனால் எப்பெயரிலோ
"வால்" மற்றும் "நாய்" போன்ற
வார்த்தைகளிலோ
என் பிடி இல்லை.
கணப்போதும் நீங்காத ஒருமையுணர்வே
என்னைப் பிடிக்கும் ஒரே வழி
எனவே கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
சில கேள்விகளை
நான் கேட்கும் போது
மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்பதிலையே தருகிறீரே!
கவனம்! அதி கவனம்!
அக்கேள்விகளைக் கேட்கும் போது
ஒரு கணமேனும்
உன் கவனம் ஒருமையிலிருந்து நழுவும்
பேரபாயமுள்ளதை எச்சரிக்கவே
இப்பதில்
அதி கவனம்!
தலை முதல் கால் வரை
உன் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
இவ்வொருமையுணர்வு ஊன்றி நிலைக்கும் வரை
"சுளீர்" என்று இச்சுடும் பதில்
"பளார்" "பளார்" "பளார்" என்று
உன்னை அறைந்து கொண்டே இருக்கும்
நாயகரே!
நனி மிக நன்றி
ஒருமை விகுதியை எடுத்துப்
பன்மை விகுதியைப் போட்டு
என்னை விளிக்கும்
மற்றும்
"நனி மிக" என்று நன்றியோடு கூட்டி
நீ
செய்யும் ஆறறிவுத் தந்திரங்கள்
எதுவுமே என்னிடம் பலிக்காது
இருந்தாலும்
என் அன்பு மகனே!
நானுனக்கு நன்றி சொல்வேன்.
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை உணராது
நீ
அழுது புலம்பி அரற்றி
வாய் கிழியப் பேசி
தாள் கிழிய எழுதி
நோய்வாய்ப்பட்டு
புத்தி தடுமாறிப் பித்தனாகி
எழ முடியாமல் விழுந்து கிடந்து
எழுந்ததும் தற்கொலைக்குத் துணிந்து
அதைச் செய்யாமல் விட்டு
பின் எக்கொலைக்குந் துணிந்து
அதையும் செய்யாமல் விட்டு
பின் தெளிந்து
நானே, நான். என்னும்
உன் பழைய தந்திரம் மீட்டு
இவ்வாறாக
நீ
செய்த ஆறறிவுத் தந்திரங்கள்
அனைத்தையும் அறிவேன்.
இவற்றை மீறி
மனித நேய ஒருமையென்றும்
ஆன்ம நேய ஒருமையென்றும்
இன்னுந் தாண்டி
நான் சொல்லும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையின் மீது
உனக்கிருக்கும்
உறுதியையும் காதலையும் பற்றையும்
நன்றாக அறிகிறேன்.
எனவே
நீ
பழுத்திருக்கும் இக்கணத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
உன் ஏழாம் அறிவாய்
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை
உனக்கு உணர்த்துகிறேன்
உன்னைப் போன்றே
பிரபஞ்ச உயிர்த்திரள் ஒவ்வொன்றுக்கும்
உணர்த்துகிறேன்
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
நானே. நான். என்பதன்
முழுப்பொருள் விளக்கம்
மெய்ப்பொருள் விளக்கம்
இதுவே
நாய்க்குரு தீட்சையின் சாராம்சமும்
இதுவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ
என்னைப் பிடிக்கும் ஒரே வழி
எனவே
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
நீவிர் வலியுறுத்தும் ஒருமையை
வள்ளுவரும் வலியுறுத்தியிருக்கிறாரே!
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து"
ஆம்
ஆமை = ஆம்+ஐ
தனக்குள் ஒளிரும்
ஐ என்ற வாலறிவனாம் தலைவனை
ஆம், ஐ அவனே
என்று அறிய முடிந்த
ஆறறிவுள்ள மனிதனைச் சுட்டுகிறது.
ஐந்தடக்கல்
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த்திரளை
அவற்றுக்கெல்லாம் ஐ ஆம் தலைவன்
மனிதனவன் தன்னில் அடங்கியிருக்கும்
உண்மை நிலையை உணர்தல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளிலும்
ஒளிந்திருக்கும் 'ஐ'அறிவிற்கு
(ஐ ஆம் தலைவனை அறிவதற்கு)
ஆறறிவுள்ள மனிதனே திறவு கோல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தும்
'ஐ'அறிவுள்ள அவனுக்குள் அடக்கம்.
இதை முழுவதுமாய் உணர்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தையும்
தன்னுயிராய் அன்போடு அரவணைத்தலே
ஆறறிவின் நோக்கம்
அதன் உச்சம்.
அவ்வுச்சத்தில்
எழுமையாய் எழும் ஐயே
எல்லாந் தழுவியமுழுமையாம் ஒருமை.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்துக்கும்
'ஐ'அறிவுள்ள
ஆறறிவு மனிதனே ஐ ஆம் தலைவன்.
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறு ஈறாக
உயிர்த்திரள் அனைத்திற்கும்
ஆறறிவின் நோக்கத்தை முழுதுணர்ந்த
ஆறறிவின் உச்சத்தில்
அவனுக்குள் எழும் 'ஐ' யாம்(எழுமையாம்)
ஒரும் 'ஐ' யாம்(ஒருமையாம்)
எல்லாந் தழுவிய
ஒருமையே தலைவன்.
ஆக
"நாயகன்"
அவன் பழுக்கும் ஒரு கணத்தில்
அவனுக்குள்ளிருந்தே எழும்
'ஐ' யாம்(எழுமையாம்) உட்போதகரே!
என் புரிதல் சரியா?
நனி மிகச் சரியே!
"நனி மிக" என்ற
ஆறறிவுத் தந்திரத்தை
நீவிரும் கையாள்வதோ?
ஒருமையில்
ஒருமையையே
உயர் நோக்கமாய்க் கொண்டு
கையாளப்படும்
ஆறறிவுத் தந்திரங்கள்
நனி மிக நன்றே!
ஏனென்றால்
அவற்றால் என் குடும்பமாம்
ஒன்று முதல் ஆறறிவு வரையிலான உயிர்த்திரள்
நனி மிகப் பயன் பெறும்.
நீயும்
"நாய்க்குரு தீட்சை"
என்று நாய் படாத பாடு பட்டு
கையாண்ட ஆறறிவுத் தந்திரமும்
ஒருமையை வலியுறுத்தும் நோக்கத்திற்கேயன்றி
வேறெந்த குறுகிய நோக்கத்திற்காகவும் அல்ல
என்று நானறிவேன்.
இந்நோக்கம் உனக்கும் தெரிந்திருந்தும்
அதை நனி மிகத் தெளிவாக
"நாய்க்குரு தீட்சையின் நோக்கம்"
என்று நீ வெளிப்படுத்தவுஞ் செய்தாய்.
நோக்கம் எனக்குத் தான் தெரிந்திருக்கிறதே
அதை எதற்கு வெளிப்படுத்த வேண்டும்
என்ற ஞானத் திமிரில்
நீ இருந்திருந்தால்
நீ பழுத்திருக்க மாட்டாய்.
"நாயகனின் பேருபதேசம்"
உன் வழியாக
வெளி வந்திருக்காது.
எனவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ என்னைப் பிடிக்கும் ஒரே வழி
"ஊன்றியே"
என்றொரு புது வார்த்தையை
இப்போது சேர்த்திருக்கிறீரே!
எழுமையைக் குறிக்க
ஏழு வார்த்தைகள் இருக்கட்டும்
என்ற புதுத் தந்திரமா?
ஆம்
அதை விட முக்கியமாக
இவ்வார்த்தைகளில் ஆழ ஊன்றிப்
பொருளுணர்ந்து
பொருளாம் ஒருமையெனும்
அம்மெய்க்குள் ஆழ ஊன்றியே
உறுதியுடன் நீ நிற்க வேண்டும்
என்பதை வலியுறுத்தவே
இப்புதுத் தந்திரம்.
மரம் மண்ணுக்குள் வேரூன்றி
எவ்வாறு உறுதியுடன் நிற்கிறதோ
அவ்வாறே
மனிதனாம் நீயும் ஒருமைக்குள் வேரூன்றி
உறுதியுடன் நிற்க வேண்டும்.
கவனம்!
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்
அச்சுறுத்துகிறீரோ?
'ஐ' யாம் நானிருக்க பயமேன்?
மெய்யாம் ஒருமையில் நீ ஊன்றியே நிற்கும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கூட்டுகின்றன.
மெய்யாம் ஒருமையிலிருந்து நீ நழுவும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கழிக்கின்றன.
இப்பேருண்மையை
நனி மிகத் தெளிவாக வலியுறுத்தவே
இச்சுடும் வார்த்தைகள்.
உன்னை அச்சுறுத்துவது
என் நோக்கமல்ல.
உன்னை அறிவுறுத்துவதே
என் ஒரே நோக்கம்.
எனவே
உயிர்ச்சக்தி கழியும் கணங்களைக் கழித்து
உயிர்ச்சக்தி கூடும் கணங்களைக் கூட்டி
மெய்யாம் ஒருமையில் ஊன்றியே நிற்கும்
உன் முனைப்பும்
தளராத முயற்சியும்
உன்னை
எப்போதும் அவ்வொருமையில் ஊன்றியே நிற்கும்
மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிப்
படிப்படியாக முன்னேற்றும்.
மெய்யாம் ஒருமையில் எப்போதும் ஊன்றியே நிற்கும்
இவ்வொரே வழியினாலன்றி
மரணமிலாப் பெருவாழ்வை
நீ வேறெவ்வாறும் அடைய முடியாது.
ஒருமையுணர்வொன்றே
என்னையும்
என் வரமான மரணமிலாப் பெருவாழ்வையும்
நீ பிடிக்கும் ஒரே வழி.
இதை ஐயமேதுமின்றி
இதோ இங்கேயே இப்போதே
அறி!
கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
AHAM ASMI RAAMA HARE
Sunday, February 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment