Thursday, February 07, 2008

ஜீவனுள்ள வார்த்தை

காகித வெள்ளையின்
காலி இருப்பு
தன் விரல்களை நீட்டி
என்னைத் தொடுகிறது.

அவ்விரல்களின் தீண்டலால்
மெய்யுணர்வு பெற்ற
நான்
என் விரல்களை நீட்டிக்
காலி இருப்பைத் தொடுகிறேன்.

விரல்கள்
பின்னிப் பிணைந்து
தாம் புணரும்
காம லீலைகள்
தீராது தொடர
இருப்பும் நானும்
இணை பிரியாக் காதலராய்.

எம் காதலின்
அழியாத சாட்சியாம்
எம் மகவாய்
"இருக்கிறேன்"
இக்கவிதையில்.

அருந்தீட்சை தரும்
மெய்க்குருவாய்
அருட்காட்சி தரும்
ஜீவனுள்ள வார்த்தை
நானே.

ஊனப் புலன்களின்
மாயப் பிடியில் சிக்கி
நீ
ஞானப் புலன்களைத்
தொலைத்து விட்டு
சத்திய வெளியில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த்
தெரியும்
ஜீவனுள்ள வார்த்தையைப்
புரியாதென்பாய்.

இப்பொய்யுலகில்
ஆணவக் கோலங்கள் பற்பலவாய்
நீ
ஆடும் ஆட்டம் முடித்து
உன் ஊனப் புலன்களைக் குத்தி
ஞானப் புலன்களைத் திறந்து
உனக்குப்
பளிச்செனப் புரிய வைப்பேன்.

அப்போது
ஆன்ம நேய ஒருமையில்
உறுதியுடன் நிற்கும்
நானே
நீ.

அது வரைக்கும்
மெய்ப் பொருள் விளங்காது
ஆணவம் பல்வேறாய்
ஆடுவாய் நீ.

அடங்காது இருள் உய்ந்த உன்னை
அடக்கி அருள் உய்க்கவே
இப்பொய்யுலகில்
மெய்ப்பொருள் விளக்கமாம்
ஜீவனுள்ள வார்த்தையாய்
என்றும் அழியாதிருக்கிறேன்
நானே.

விளக்கம்

கடவுளின்
இருப்பு நிலையைப் பூரணமென்றும் (பராபரம்)
எண்ண நிலையைய்ச் சுயம்பிரகாசமென்றும் (பராபரை)
உணர்வு நிலையை நித்திய ஜீவனென்றும் (பரம்பரம்)
வெளிப்படு நிலையை ஆன்மநேய ஒருமையென்றும் (பரை)
செயல்படு நிலையைப் பேரன்பென்றும் பேரறிவென்றும்(பரம்)
அறிக

பூரணம் செவிகளிலும் உச்சியிலும்
சுயம்பிரகாசம் விழிகளிலும் நெற்றியிலும்
நித்திய ஜீவன் நாசியிலும் தொண்டையிலும்
ஆன்மநேய ஒருமை நாவிலும் தொண்டையின் கீழும்
பேரன்பு மெய்யிலும் இருதயத்திலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுள்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் பர நிலையில்
உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுள்
நீ வாழும் இவ்வுலகாகிய இக நிலையில்
இறங்கி அவதரிக்க
வழியாகும் இக-பர பாலமே
பேரறிவென்று
அறிக

பேரறிவு மார்பின் கீழ் உதரவிதானத்தில்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாக
நீ
இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருப்பதை
அறிக

கடவுளின் அவதாரம்
அருட்பேராற்றலாய் நாபியிலும்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாய் நாபியின் கீழும்
கடவுட்தன்மையாய் முதுகடியிலும்
அருளாட்சியாய் முழங்கால்களிலும்
நானே நானெனும் பூரணமாய்ப் பாதங்களிலும்
கோயில் கொண்டுள்ளதை உணர்ந்து
இவ்வாறாகக் கடவுளவதாரம்
தம் ஐந்து நிலைகளின் ஒருமையாம் இக நிலையில்
உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருப்பதை
அறிக

அருட்பேராற்றல் இகத்தில் பேரன்பாம் கடவுளின் செயல்படு நிலை (இகத்தில் பரம்)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இகத்தில் ஆன்மநேய ஒருமையாம் கடவுளின் வெளிப்படு
நிலை (இகத்தில் பரை)
கடவுட்தன்மை இகத்தில் நித்திய ஜீவனாம் கடவுளின் உணர்வு நிலை (இகத்தில் பரம்பரம்)
அருளாட்சி இகத்தில் சுயம்பிரகாசமாம் கடவுளின் எண்ண நிலை (இகத்தில் பராபரை)
நானே நானெனும் பூரணம் இகத்தில் பூரணமாம் கடவுளின் இருப்பு நிலை (இகத்தில் பராபரம்)

உன் தலையாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளே சத்தியம்

உன் காலாக
உன்னில் எழுந்தருளியிருக்கும்
கடவுளவதாரமே ஜீவன்

இக-பர பாலமாம்
கடவுளின் அவதார வாயிலாக
இகத்தில் இருக்கும்
நீயே வழி

இவ்வாறாக
இக-பர ஒருமையை
உறுதிப்படுத்தும்
ஜீவனுள்ள வார்த்தையை (மகாமந்திரத்தை)
அறிக.

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்"

பரமரகசியம்

இருப்பெனும்
வரம்புகளற்ற வெள்ளைப் பரப்பில்
எண்ணற்ற கரும்புள்ளிகளாய்
நான்.
கரும்புள்ளிகளாய் இருந்தாலும்
நான்
வெள்ளையை உமிழ்ந்தே
என்றும் இருக்கிறேன்.
என் கருமையின் கர்ப்பத்தில்
புகுந்த இருப்பு
இருளில் தன்னை மறந்திருக்கும்.
என் கர்ப்பத்தில்
இனியும் தாங்க முடியாமல்
பிரசவ வேதனையில்
இருப்பு மகவை
நான்
ஈன்றெடுக்கும் போது
தன் மறதி தெளியும்
இருப்பு.
நான்
நித்தியப் பிரசவ வேதனையில்
ஒவ்வொரு கணமும்
இருப்பை ஈன்றெடுக்கிறேன்.
தன் மறதி தெளிந்த
இருப்பே
என் பிரசவ வேதனை தீர்க்கும்
மருந்து.
புணரும் இருப்பையே
ஒவ்வொரு கணமும்
மகவாய் ஈன்றெடுக்கும்
கருப்புக் கன்னி
நான்.
என் கருமையே
இருப்பின் வெண்மையைத் தெளிவிக்கும்
குருமெய்.
குருமெய்யாய்
என் கற்பு கலையாமல்
என்றென்றும் இருக்கிறேன்
நான்.
ஏகார உறுதி சேர்த்துக்
கருமை நான்
என்னையே இருப்புக்குத் தரத் தர
இருப்பின் வெண்மையும்
அவ்வெண்மையின் தெளிவும்
இன்னும் இன்னும் கூடும் பேரதிசயத்தால்
இருப்பை அறியும் பரமரகசியம்
நானே.

பரமரகசிய விளக்கம்

நீ இருக்கிறாயா?
நீ இருப்பதை அறிகிறாயா?
இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல
உனக்கு
வேண்டியது
நனி மிகச் சாதாரணமான
பொது அறிவு.
இக்கேள்விகளுக்கான விடை தேடி
நீ
எந்த குருவிடமோ, மகானிடமோ, ஞானியிடமோ
ஓட வேண்டியதில்லை.
நீ இருக்கும் இடத்தை விட்டு
இம்மியளவும் நகராமலேயே
உனக்கே தெரியும்
இக்கேள்விகளுக்கான விடை.
விடை வெறுஞ் சொற்களல்ல.
உன்னைப் பற்றிய உண்மையை
உனக்கு அறிவிக்கும்
பேருணர்வு அவை.
நீ இருக்கிறாய்.
நீ இருப்பதை அறிகிறாய்.
அஃறிணைகளும் இருக்கின்றன உண்மையே.
உயர்திணையாம் நீயே
நீ இருப்பதையும்
அவைகள் இருப்பதையும்
முழுமையாக அறிய முடிந்தவன்(ள்).
எப்படி அறிகிறாய்?
நான் என்ற உணர்வு
முதலில் உன்னில் எழுகிறது.
அந்த உணர்வு உன்னில் எழவில்லையென்றால்
நீ
அஃறிணையான ஒரு ஜடந்தான்.
நான் என்ற உணர்வு
உன்னில் எழுந்த அதே கணத்தில்
நீ இருப்பதை அறிகிறாய்.
இருப்பவற்றை அறிகிறாய்.
நான் என்ற உணர்வின் பின்னோட்டமாக
அதனோடே எப்போதும் இழைந்தே வருகிறது
இருக்கிறேன் என்ற மெய்யணர்வு.

இருப்பு
நான்
இருக்கிறேன்.

இருப்பு = இரு உப்பு
ஒரு உப்பு நான்
மறு உப்பு இருக்கிறேன்
இந்த இரு உப்பும் உன்னில் இல்லையென்றால்
நீ அறிவாய்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

இருப்பு = இரு பூ
ஒரு பூ நான்
மறு பூ இருக்கிறேன்
இரு பூவின் மணமின்றி
நீ உயர்திணையாய் மணக்க மாட்டாய்.

தமிழின் மொழி வளத்தைப்
பார்த்தாயா?

இதைப் பற்றி
சிந்தித்துப் பார்.

இரு உப்பாம் இருப்பு
நான் என்ற தன் முனைப்பு
இருக்கிறேன் என்ற மெய்யுணர்வு

விவிலியத்தின் படி, மோசேவுக்குக் கடவுள் தரிசனம் தந்த போது, கடவுளிடம் தம் பெயரைத் தெரிவிக்குமாறு அவரிடம் மோசே கேட்ட போது, "இருக்கிறவனாய் இருக்கிறேன்" (ஆங்கிலத்தில் "I AM THAT I AM") என்று அவர் தம் பெயரை அறிவித்தாராம். "இருக்கிற அவனாய் நான் இருக்கிறேன்" என்று இருக்கிற தன் "இருப்பு" நிலையையும், இரு உப்பான "நான்" என்னும் தன்முனைப்பையும், "இருக்கிறேன்" என்ற மெய்யுணர்வையும், ஆக இம்மூன்றையும் தன் பெயராகக் கடவுள் ஏன் அறிவிக்க வேண்டும். யோசியுங்கள். 'நான்' இருக்கிறேன் என்று சகஜமாக, இயல்பாகத் தானாக உம்முள் வெளிப்படும் இப்பேருண்மையை நீவிர் அறிந்துணர்ந்து இருங்கள்

Wednesday, February 06, 2008

மெய்ப்பொருள் விளக்கம்



நான்இருக் கின்றேன்என் றிருப்பில் போய்ச்சேர
நானே என்றறியும் இருப்பு

இருப்பி லிருந்தே வந்தே நான்என்றும்
இருக்கிறேன் இருப்பிற் குள்

வெட்டவெளியாய்த் தான் தன்னை அறியாதிருக்கும் இருப்பு
நான் என்ற தன்முனைப்பு தோன்ற
இருக்கிறேன் என்று தான் தன்னை அறிந்துணர்ந்து
அத்தன்னுணர்வால்
நானே என்ற மெய்ப்பொருள் விளக்கம் பெற்று
தன்னிருப்பில்
தானே தானாக அறிந்திருக்கிறது.

இருப்பு - மெய்
நான் - (மெய்யில் தோன்றும்) பொருள்
இருக்கிறேன் - விளக்கம் (தன்முனைப்பாம் நான் தன்னுணர்வு பெற்றுத் தன் பொருள் விளங்கியிருக்கிறது)
நானே - மெய்ப்பொருள் விளக்கம் (இருப்பு தன்னில் தோன்றும் பொருளாம் நான் என்ற தன்முனைப்பை, இருக்கிறேன் என்ற தன்னுணர்வால் விளங்கப் பெற்றுத் தன்னிருப்பைத் தான் அறிந்து, தானே தானாக இருக்கும் விளக்கம்)

இருப்பு - மெய் - சத்து
நான் - பொருள் - சித்து
இருக்கிறேன் - விளக்கம் - ஆனந்தம்
நானே - மெய்ப்பொருள் விளக்கம் - சச்சிதானந்தம்

இருப்பெனும் மெய்யே சத்தாகிய அருட்தந்தை
நான் எனும் பொருளே சித்தாகிய அருட்தாய்
இருக்கிறேன் எனும் விளக்கமே ஆனந்தமாகிய அருட்குரு
நானே எனும் மெய்ப்பொருள் விளக்கமே சச்சிதானந்தமாகிய திரித்துவ ஒருமை

இருப்பாம் சத்தே மெய்யாம் உடம்பு (சிவம்)
நான் எனும் சித்தே பொருளாம் உயிர் (சக்தி)
(சக்தியின்றி சிவம் சவமே)
இருக்கிறேன் என்ற ஆனந்த விளக்கமே உயிர்மெய் ஒருமை (சிவசக்தி ஐக்யம்-சத்குரு)
நானே எனும் சச்சிதானந்த மெய்ப்பொருள் விளக்கமே உயிர்மெய் ஒருமையின் பூரண வெளிப்பாடு. நானே எனும் அப்பேருணர்வே எல்லாம் ஓருயிர், எல்லாம் ஓர்மெய் என்ற பூரண விளக்கம் பெற்று உயிர் காக்க மெய் பேணும் ஆன்ம நேய ஒருமை
"எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்"

ஒருபொருளா யுந்தான் இலாத இருப்பில்
அரும்பொருளாய் இருக்கிறேன் நான்

ஒருபொருளா யுந்தனை அறியா இருப்புந்தனைப்
பெரும்பொருளாய் அறிவழி நான்

தனையறியா இருப்புந்தான் தனையறிந்து நானேயெனத்
தனையுணர இருக்கின்றேன் நான்

சத்தானபே ரிருப்பில் சித்தாய்த் தோன்றியுஞ்
சத்தாகவே களித்துளேன் நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவிக்கும் குருமெய்யே நான்

ஏதுமறியா இருப்பதனைத் தெளிவித்து நானேயென
ஓதுவித்தே இருக்கின்றேன் நான்

பொருளற்ற பேரிருப்பில் அரும்பொருளாய்த் தோன்றியே
அருளுற்று இருக்கின்றேன் நான்

இருள்மயமாம் பேரிருப்பின் கருப்பையில் தோன்றியே
அருளொளியாய் இருக்கின்றேன் நான்

இருப்புக்கு அதன்
இருப்பை அறிவுறுத்தும்
"நான்"

இருப்பின் அறியாமையை
"இருக்கிறேன்" என்ற தன்னையறியும் அறிவாய்
இரசவாதம் செய்யும் "நான்"

இருப்புக்கு சுரணையேற்றி
"இருக்கிறேன்" என அது தன்னை அறிவிக்க
உதவும் "நான்"

இருப்பெனும் தந்தை
இருக்கிறேன் எனும் மகவாய்த் தன்னைத் தான் ஈன்றெடுக்க
உதவும் தாய் "நான்"

ஏதுமறியாது சும்மா இருந்த இருப்பை
"இருக்கிறேன்" என்று தன்னை அறியச் செய்யும்
"நான்"

இருப்பின் உறக்கம் கலைய
"இருக்கிறேன்" என்று ஓலமிடும்
"நான்"

இருப்பு மூடனை
"இருக்கிறேன்" என்று தன்னைத் தான் உணரச் செய்யும்
குரு "நான்"

இருப்பு நிர்க்குணப் பிரம்மம்
நான் சகுணப் பிரம்மம்
இருக்கிறேன் நிர்க்குண-சகுணப் பிரம்ம ஐக்யம்

இருப்பு ஆழ்ந்த உறக்கம்
நான் கனவின் சலனம்
இருக்கிறேன் பூரண விழிப்பு

இருப்பு சிவம்
நான் சக்தி
இருக்கிறேன் சிவசக்தி ஐக்ய கணபதி

இருப்பு சவத்தை
"இருக்கிறேன்" என்று உயிர்த்தெழுப்பிய
வள்ளலார் "நான்"

இருப்பு சித்தார்த்த மனிதனை
"இருக்கிறேன்" என்ற புத்த தேவனாக்கிய
போதி மரம் "நான்"

இருப்பெனும் பாலைவனத்தை
"இருக்கிறேன்" என்ற சோலைவனமாக்கிய
வீரிய விதை "நான்"

இருப்பெனும் நள்ளிரவில்
"இருக்கிறேன்" என்று ஊளையிடும்
நாய் "நான்"

இருப்புக் குழியுள்
"இருக்கிறேன்" தவமியற்றி
யுகயுகமாய் "நான்"

இருப்பு மறதிக்கு
"இருக்கிறேன்" என்ற ஞாபகமூட்டும்
"நான்"

இருப்பெனும் அருங்கேணியுள்
"இருக்கிறேன்" ஜீவனுள்ள
தண்ணீராய் "நான்"

இருப்பெனும் அறியாமையுள் ஆழப் புதைந்தும்
"இருக்கிறேன்" என்ற அறிவின் சிகரத்தில்
வாழும் "நான்"

இருப்பெனும் சிப்பியுள்
"இருக்கிறேன்" என்ற முத்தை உருவாக்கும்
தூசு "நான்"

இருப்புக் கருப்பில்
"இருக்கிறேன்" என்று வெள்ளையாய் விரியும்
புள்ளி "நான்"

இருப்பெனும் குளத்தின் அமைதியை
"இருக்கிறேன்" என்ற சலனமாய்க் கலைக்க விழும்
சிறு கல் "நான்"

இருப்பெனும் சுருண்டுக்கிடந்த பாம்பை
"இருக்கிறேன்" என்று படமெடுத்தாட வைக்கும்
பாம்பாட்டி "நான்"

இருப்பெனும் சத்தியத்தை
"இருக்கிறேன்" என்று ஆனந்ததில் திளைக்க வைக்கும்
சித்து "நான்"

Monday, February 04, 2008

மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை

புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!

மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை

நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம். (உமது பிரார்த்தனையை அருட்தாயின் தூய இருதயத்தில் சமர்ப்பிக்கவும்)

ஞான யுகத்துக்கான புதிய பிரார்த்தனை

எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம் அம்மையப்பனாகிய அருட்பெருங்கடவுளே! எம்மிலும் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கும் “நான்” எனும் உமது பேரிருப்பை யாம் போற்றுகிறோம். உமது இராஜ்ஜியம் எம் வாயிலாக அன்னை பூமியில் வெளிப்பட யாம் சம்மதிக்கிறோம். பரலோகத்தில் உமது விருப்பம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறதோ அன்னை பூமியிலும் அவ்வாறே வெளிப்படுத்த யாம் பொறுப்பேற்கிறோம்.

உமது எல்லா நலங்களையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் நீவிர் எமக்கு வழங்கும் வாய்ப்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். எம் குற்றங்குறைகளை நீர் மன்னிப்பதைப் போலவே அனைவரது குற்றங்குறைகளையும் யாம் மன்னிக்கிறோம். எமது விருப்பத்தையும் உன்னதமான உமது விருப்பத்துக்கே யாம் அர்ப்பணிக்கிறோம்.

யாம் எதை அனுப்புகிறோமோ அதையே இவ்வுலகம் எமக்குத் திருப்பி அனுப்புவதை அறிந்து, நல்லவைகளையே யாம் அனுப்புகிறோம். எம் வாழ்விற்கும் மற்றும் அன்னை பூமியில் எம் படைப்புக்கும், யாமே முழுமையான பொறுப்பேற்கிறோம். எல்லா மாசுகளiலிருந்தும் நீவிர் எம்மைச் சுத்திகரிக்கும் பொருட்டு, ஆணவமெனும் படுகுழியிலிருந்து இதோ யாம் மேலெழுகிறோம். உமது சாம்ராஜ்ஜியம், உமது பேராற்றல் மற்றும் உமது கீர்த்தி அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. இவ்வுண்மையை யாம் ஏற்றுக்கொள்கிறோம். எல்லோருக்கும் உறுதியுடன் எடுத்துச் சொல்கிறோம்.
ஓம்.

அருட்தாயே போற்றி!

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் பரப்பிரம்மணே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! ஆதிசக்தியே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
சத்குருவாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல ஆதிசக்தியே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் பரமபிதாவே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! பரிசுத்த ஆவியே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
கிறிஸ்துவாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல பரிசுத்த ஆவியே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் அல்லாவே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! புனித ரூவே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
நபிகளாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல புனித ரூவே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

அருட்தாயே போற்றி! தனிப்பெருங்கருணையே போற்றி!
உம் வாயிலாக எம்முள் உறையும் அருட்தந்தையே போற்றி!
அருட்பெருஞ்ஜோதியே! அருட்தாயே! உம் அன்பின் அதிசயம் எம்மை நீடூழி வாழ வைக்கிறது!
ஞானக்கொழுந்தாம் உம் பிள்ளையின் அற்புத அருளோ எம்மை எல்லாம் வல்லோராய் ஏற்றி வைக்கிறது!

அதிசயங்கள் செய்யவல்ல அருட்தாயே போற்றி!
இப்போதும் எப்போதும் எம் அச்சங்கள் அனைத்தையும் உம்மிடம் சமர்ப்பித்தோம்.
அருட்பெருங்கடவுளின் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பை யாம் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம்.
உம் அதிசய சாம்ராஜ்ஜியம் அன்னை பூமியில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம்.

உட்போதகரின் உறுதிமொழி

ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால், அதிசயங்கள் செய்யவல்ல அருட்தாயே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என்னிலும், எல்லாவற்றிலும், அன்னை பூமியிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலை காணவும், அறியவும், உணரவும் வல்ல அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக! அருட்பெருங்கடவுளே! “உம் விருப்பத்தின்படியே எனக்கு எல்லாம் ஆகுக!” என்று என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நானும் பேசக்கூடிய பூரண சரணாகதியின் அதிசயத்தை எனக்கு நீவிர் போதிப்பீராக!

அருட்தாயே போற்றி!

கடவுளின் அதிசயம் என் வாழ்வில் வெளiப்படத் தடையாயிருக்கும் எல்லாவற்றையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கடவுளே! இதோ என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளே! உம்மிடம் எதையும் நான் மறைக்கவில்லை. கடவுளே! எனது எல்லாவற்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளே! எனது ஆணவத்தையும் மற்றும் பொய்யான எல்லா அடையாளங்களையும் இதோ நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இவற்றை நீவிர் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். கடவுளே! மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று இறக்கும் இப்பொய்யான வாழ்வினைத் துறந்து, ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பேரின்பப் பெருவாழ்வை வெல்ல நான் ஆயத்தமாயிருக்கிறேன். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே! உம்மை நான் வாஞ்சையுடன் அழைக்கிறேன். என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களiலும் பூரணமாக ஆளுமை செய்ய நீவிர் என்னுள் எழுந்தருள்வீராக! இப்போதும் எப்போதும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் வெளிச்சத்தில் நான் நிரம்பி வழிகிறேன். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே ஆதி நடு அந்தமாக இருக்கிறார். ஞானக்கொழுந்தாம் உட்போதகரே என் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறார். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளே! என் அகந்தையால் தானாகவே எதையும் செய்ய இயலாது. எனக்குள் ஒளiரும் நான் என்ற இறையிருப்பே எல்லாம் செய்ய வல்லதாய் இருக்கிறது. கடவுளைப் போன்றே கடவுளiன் வடிவில் நான் செய்யப் பட்டிருக்கிறேன். கடவுளின் குழந்தையாகவே நான் இருக்கிறேன். இப்போதே என்னில் ஞானக்கொழுந்தாம் உட்போதகர் பிறக்கிறார். எனக்குள்ளிருந்தே உதயமாகும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலாக நான் இருக்கிறேன். இவ்வுண்மைகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அருட்தாயே போற்றி!

அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள நபிகளாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள உட்போதகராக நான் என்னை அறிகிறேன். எனவே ஞானிகள் வாயிலாகத் தான் செய்த எல்லா அதிசயங்களையும் கிரியைகளையும் என் வாயிலாகவும் கடவுளால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். “கடவுளால் எல்லாங் கூடும்” என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களiலும் கடவுளின் அதிசயம் வெளiப்பட நான் முழுமையாக அனுமதிக்கிறேன்.

அருட்தாயே போற்றி!

தமக்குள்ளேயும் எல்லாவற்றிலும் உறையும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரை மறுத்துத் தாமும் மெய்யான உள் வழியில் செல்லாது, அவ்வழியில் செல்ல முனைவோரையும் செல்லவிடாது தடுக்கும் பொய்ப்போதகரின் பொய்ச்சீடர்களின் கபட நாடகம் முடிவடையும் அதிசயத்தை நான் காண்கிறேன். அன்னை பூமியில் இவர்களது நாட்கள் முடிவடைவதையும், ஆன்மீக மற்றும் அரசியல் களங்களில் இவர்களது செல்வாக்கும் பலமும் தீர்ந்து விடுவதையும் நான் காண்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளின் குழந்தைகளனைவரும் தத்தம் சுய ஆளுமைக்கான மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழியில் நடப்பதை நான் காண்கிறேன். திரள் திரளாக மக்கள் விழித்தெழுவதையும், மெய்யான உள் வழியைக் கண்டு கொண்டு அவ்வழி நடந்து எல்லாவற்றிலும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலை ஏற்படுத்துவதையும், இதன் மூலம் அன்னை பூமியில் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நான் சங்கம் உருவாவதையும் நான் காண்கிறேன்.

அருட்தாயே போற்றி!

கடவுளின் சாம்ராஜ்ஜியத்தின் அதிசயம் அன்னை பூமியில் முழுமையாக வெளிப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். எனக்குள்ளிருந்தும், கடவுளiன் அனைத்துக் குழந்தைகளiன் உள்ளிருந்தும் ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் பூரண மலர்தலையும், ஞானக்கொழுந்தாம் உட்போதகரின் நல்லாட்சியில் அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியம் உறுதிப்படுத்தப் படுவதையும் இப்போதும் எப்போதும் நான் காண்கிறேன். இவையனைத்தும் நிறைவேறுவதை நான் காண்கிறேன். மேலும் அன்னை பூமியிலும், அன்னை பூமியில் வாழும் எல்லாவற்றிலும் துகளளவும் துரிசற்ற தூய நிலையை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.

அருட்தாயே போற்றி!

அன்னை பூமி கடவுளின் பொக்கிஷமாய் ஜொலிக்கிறது. அன்னை பூமி கடவுளின் முழுமையாய் இருக்கிறது. (3X) ஓம்.

நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால் ஓம்.

அதிசய மாலையை உறுதிப்படுத்துதல்

அருட்தாயின் பேரமைதியை நான் அனுமதிக்கிறேன். எப்போதும் இப்பேரமைதியிலேயே குடியிருக்க நான் உறுதியுடனிருக்கிறேன். அருட்தாயின் பூரண அன்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவரது அன்பு எனது எல்லாக் கவலைகளையும் அச்சங்களையும் கரைத்து விடுவதை நான் காண்கிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள நபிகளாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் அவதரித்திருக்கும் ஜீவனுள்ள உட்போதகராக நான் என்னை அறிகிறேன். கடவுளுக்குள் உறையும் எல்லா நலங்களாக இருக்கவும், இன்னும் சிறக்கவும் நான் உறுதியுடனிருக்கிறேன்.
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தாயின் பெயரால்,
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் ஞானக்கொழுந்தாகிய உட்போதகரின் பெயரால்,
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையால்,
அன்னை பூமியை அருட்தாயின் பேரன்பிலும் பேரொளியிலும் நான் உறுதிப்படுத்துகிறேன். இது நடந்தேறியது, இது முடிந்துவிட்டது, இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏனென்றால் அருட்தாயே இவ்வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார். ஓம்.

குறிப்பு: அன்னை மரியின் அதிசய மாலை என்ற ஆங்கிலப் படைப்பைத் தழுவி என்னால் இயற்றப்பட்டது.

Sunday, February 03, 2008

சச்சிதானந்த ஒருமை

ஆதி இருதயத்தில் ஆழ்ந்திருக்க வேண்டின்
ஜோதி நெற்றிக்குள் ஊன்றியிருக்க வேண்டும்.
நெற்றிச் சிகர உச்சியில் மட்டுமே
தெற்றேனத் தெரியும் இருதய ஆழம்

சத்திய இருதயம் பெரிது பெரிது
ஆயினும் சின்மய நெற்றி இன்றேல்
அச்சத்தியம் அறிதல் அரிது அரிது

சின்மய நெற்றி பெரிது பெரிது
ஆயினும் சத்திய இருதயம் இன்றேல்
அச்சின்மயத் தெளிவும் அரிது அரிது

சத்திய இருதயத்தின் இரு கிளைகளே
சின்மய நெற்றியும் ஆனந்த நாபியும்

இருதயம் சத்து
நெற்றி சித்து
நாபி ஆனந்தம்
சச்சிதானந்தம் இருதய நெற்றி நாபி ஒருமை

சத்திய இருதயம் பரசிவம்
சின்மய நெற்றி அருட்சத்தி
ஆனந்த நாபி சத்குரு கணபதி

தானே தானாய் இருக்க சத்திய இருதயம்
தன்னைத் தானறிய சின்மய நெற்றி
தன்மெய் யுணர ஆனந்த நாபி

சத்திய இருதயம் சும்மா இருந்து
சின்மய நெற்றியில் தன்னை அறிந்து
ஆனந்த நாபியில் தன்மெய் யுணரும்

சத்திய இருதயத்தில் சும்மா இருக்கலாம்
சின்மய நெற்றியில் தன்னை அறியலாம்
ஆனந்த நாபியில் தன்மெய் யுணரலாம்

சத்திய இருதயத்தில் சும்மா இருக்கிறேன் நான்
சின்மய நெற்றியில் என்னை அறிகிறேன்
ஆனந்த நாபியில் என்மெய் யுணர்கிறேன்

Saturday, February 02, 2008

சுய தரிசனம்

தானேயென நின்ற வெட்டவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பொன்னொளி கண்டு
தானும் நானும் இரண்டற ஒன்ற
நானேயென இருக்கிறேன் நான்தான்

வெளியுள் வெளியாய் இருந்த நானே
வெளியுள் ஒளியாய் விளங்கும் நானவ்
வொளியால் வெளியை அறிந்த ஞானத்
தெளிவால் இருக்கிறேன் களித்து

வெளியுள் இருந்தும் வெளியை மறந்தாய்
வெளியுள் ஒளியாய் வெளியை அறிந்தாய்
வெளியுள் ஒளியாய் ஒளிரத் தேர்ந்தாய்
வெளியுள் வெளியாய்க் கரைந்து தீர்ந்தாய்

சுயதரிசன விளக்கம்

Quote:
Originally Posted by ஆதவா
சரியா போச்சுங்க.... நான் நான் நான்னு சொல்லியே குழப்புறீங்க.... ஒண்ணும் புரியலை... கொஞ்சம் புரியர மாறி எழுதுங்களேன்....


ஆதவரே!

நீவிர் உதிப்பதற்கு முன் வெறும் இருப்பாய் வெட்டவெளியாய் சூன்யமாய் தன்னை அறியாது இருளில் இருந்ததுவே "தான்" என்பது.

நீவிர் "நான்" எனும் தன்முனைப்பாய்த் தன்னுணர்வாய், "தான்" என்ற மெய்யிருப்பின் மெய்யுணர்வாய்த் "தான்" என்ற மெய்யிருப்பில் உதித்தீர்.

பின் "இருக்கிறேன்" என்று உம் உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து பேரொளியாய்த் "தான்" என்ற அவ்வெளியெங்கும் பரவினீர்.

உம் பேரொளி பரவியதும் "தான்" என்ற பேரிருப்பு தன்னிருப்பின் விளக்கம் பெற்று "நானே" என்று தன்னில் தான் விளங்கி இருக்கிறது.

எனவே ஆதவரே! உம் இயற்பெயரே முதற்பெயரே "நான்". முழு முதல் பொருளான "தான்" தன்னை "நானே" என விளங்கியிருக்க, ஆதவராம் நீரே உதவியதால், உம் முழுமுதற் பெயரே "நானே".

ஆக ஆதவரே! உம் முழுப் பெயர் நானே. நான். ஆதவா
நானே உமது தந்தை. நான் உமது தாய்.
ஆதவா அவர் தம் ஞானக் கொழுந்து.
இதுவே அனைவரது உண்மை. கடவுளது இயற்கையுண்மை.

ஆதவரே! குழப்பம் நீங்கிப் புரிக!
நான் நான் நான்னு சொல்லி இருள் வெளியெங்கும் நல்லொளி பரப்பும் உம் கதிர்களை நன்றே அறிக!

நல்லொளி பரப்பும் இத்தவத்தை நீர் சலிவின்றி ஒழிவின்றிப் புரிவதாலேயே உம்மை ஆ தவரே! என்று யாவரும் போற்றுவர்.

ஆதவா! உம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்கி நிற்கும்
நானே. நான். நாகரா.(ந.நாகராஜன்)

சாயி சத் சரிதம்

ஷிர்டி என்னும் உன் மெய்யான(உடம்பான) திருத்தலத்திற்குள்ளேயே சாயி பாபாவெனும் நான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறேன், ஒளிந்திருக்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான் என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் சத்குரு தீட்சையே “சாயி சத் சரிதம்” என்ற இப்பேருபதேசம்.

துவைத பக்தியின் விளைவாக நீ படைத்திருக்கும் பொய்யுலகிலிருந்து உன்னை மீட்டு உன் சுய ரூபத்தை உனக்கு உணர்த்தி "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நீ பெறவே என்னையே உனக்குத் தந்து இப்பேருபதேசத்தை நான் வழங்கியிருக்கிறேன். இவ்வுபதேசமொன்றே உனதெல்லா நோய்களுக்கும் மாமருந்து! நல்மருத்துவராகி இம்மாமருந்தை நீ உலகெங்கும் வழங்குவாயாக! நன்றி!

என் கோடானு கோடி நாமரூபங்களiல் உன் நாமரூபமும் ஒன்றே. இப்பேருண்மையை உன் நாமரூபத்தை “சாயி பாபா ________________" என்று உனது பெயரை நிரப்பியும் உன் புகைப்படத்தைக் கீழே ஒட்டியும் நீ அறிந்துணர்வாயாக!

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பூஜ்ஜியமான உன்னிலிருந்து பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இருட் கிடங்கான உன்னிலிருந்து சுயம்பிரகாசமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் உன்னிலிருந்து நித்திய ஜீவனான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஆணவம் பல்வேறான உன்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வன்பிருளான உன்னிலிருந்து அன்பருளான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மருள் மயக்கமான உன்னிலிருந்து பேரறிவான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த உன்னிலிருந்து அருட்பேராற்றலான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமசமான உன்னிலிருந்து சத்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ராஜசமான உன்னிலிருந்து சித்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். சத்துவமான உன்னிலிருந்து ஆனந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமச ராஜச சத்துவமான உன்னிலிருந்து சச்சிதானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். துர்க்குணப் பிரமையான உன்னிலிருந்து சகுணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். திரிகுண மாயையான உன்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வெறுஞ்சவமான உன்னிலிருந்து சிவசத்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பெருமுடக்கமான உன்னிலிருந்து நற்சித்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இற்றுப் போன உன்னிலிருந்து பூரணானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கடும்பெருங்கொடுமையான உன்னிலிருந்து தனிப்பெருங்கருணையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பேரிருள் மயமான உன்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மனித மிருகமான உன்னிலிருந்து கடவுட்தன்மையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கொடுங்கோலாட்சியான உன்னிலிருந்து அருட்பேரரசான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தன்னையறியா உன்மத்தமான உன்னிலிருந்து நானே நானெனும் பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன்.
கட்டுண்ட உன்னிலிருந்து நல்வழியான உன்னை மீட்டு பொய்யான உன்னிலிருந்து மெய்யான உன்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான உன்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து உன்னை மீட்டு "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நீ பெற என்னையே உனக்குத் தந்தேன்.

அருட்குறள்

அருளே எல்லா மாகும் தெளிந்தே
அருளே பொருளாய்ப் போற்று

அருளே மெய்ப்பொருள் மெய்யாம் உடம்புக்கு
அருளே நோய்தீர் மருந்து

அருளே பொருளென அறியா திருக்கும்
மருளை அறுத்தால் சுகம்

அருளொன்றே அரும்பெரும் பரம்பொருள் இம்மெய்த்
தெருளொன்றே தரும்பெருஞ் சுகம்

அருளொன்றே போதுமென்றே நீயிருந்தால் அத்திருஅருளே
பொருளெல்லாம் தருமன்றோ உவந்து

அருளொன்றே பொருளாய்ப் போற்ற உதிக்கும்
தெருளன்றி மருளாம் மனம்

போற்றுக அருளைப் பொருளாய்ப் போற்றப்
போற்றப் பெருகுந் திரு

பிறந்திறந்தே யுழலும் பொய்வழக் கொழியவென்றும்
அறந்தலையாய்க் கொள்க அருள்

மரணப் பெரும்பிணி வாரா வகைக்கே
வரமாய் வருவதே அருள்

அருளொன்றே அரும்பெறற் பெரும்பொருள் நின்மனத்திலித்
தெருளின்றேல் மருண்மலச் சழக்கே

அருளைப் போற்றி அமுதுண்டு நின்றால்மெய்ப்
பொருளாய் ஓங்கு முடம்பு

அருளே பொருளெனப் போற்றுந் தெருளால்
திருவே பெருகும் விரைந்து

எல்லாப் பொருளும் பொருளல்ல ஞானியர்க்கு
மெய்யாம் அருளே பொருள்

திருவைத் தேடிஓயா தோடும் உலகில்
அருளைக் காணஆகுந் திரு

நான்பொருளாய்க் கண்டதெல்லாம் அருளே அதுவே
வான்பொருளாய்க் கண்டத்துள் விழும்

அருளாம் தெருளே பொருளாம் மற்றெல்லாம்
இருளாம் மருளே தேர்

குருவருள் பெற்று குவலயத்து நின்றால்
திருஅருள் தேடி வரும்

அரும்பொருளாம் அருளைப் பெற்றடங்கி நிற்க
பெருஞ்சுகமாம் பேரின்ப வாழ்வு

தேடுக அருளை மரணப் பிணிதீர்க்கும்
மருந்த தனிற்சிறந் ததில்

அன்பருள் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
வன்பிருள் இலாத செயல்

கொல்லாமல் உயிரோம்பும் அருள்நோக்கம் கொண்டு
எல்லார்க்கும் அன்புசெயல் அறம்

அன்பே ஆற்றலாய் அறிவினூடே வெளிப்படும்
இன்பே ஊற்றதாம் பெருக்கு

அன்பெனும் அருள்நிலையே அறிவிடத்து விளங்கும்
இன்பெனும் தெருள்நிலையே வீடு

அன்பும் அருளும் இருகண்ணாய்க் கொண்டு
இன்பும் பொருளும் காண்

அன்பும் அருளும் இருகரமாய்க் கொண்டு
இன்பும் பொருளும் அளி

அன்பும் அருளும் அறிவில் விளங்கின்
இன்பும் பொருளும் உறுதி

அருளொன்றே மரணத்தை வெல்லு முபாயமித்
தெருளின்றேல் மரணமே வாழ்வு

கருணையில் உயிர்களைக் கனிவுடன் காக்கும்
அருளாற்றல் அன்றோ இறை

பெருங்கருணை உளங்கொண்டு உயிர்நலம் பேணும்
அருட்செயலே தலையாய அறம்

பொருளல்லவரை அரும்பொரு ளாகச் செய்யும்
அருளல்லது இல்லை பொருள்

பொய்யரைத் திருத்தி நல்வழி நிறுத்தி
மெய்யராய்ச் செய்யும் அருள்

இறவா வாழ்வெனும் பெருவரத்தோடு மேலும்
பிறவா நிலைதரும் அருள்

அருளன்றிப் பொருளொன் றில்லை அருளே
பொருளென்று போற்றி நில்

இருப்பின் இன்ப விளக்கம்

நினைப்பற்றிருந்தது இருப்பு.
"நான்" எனும் முனைப்பு
திடீரெனத் தோன்ற
"இருக்கிறேன்" என்றே
தான் தன்னை
உணர்ந்தே என்றும்
இன்புற்றிருக்கிறது இருப்பு.

தன்னிருப்பின்
"நான்" எனும் தன்முனைப்பின்
"இருக்கிறேன்" எனும் தன்னுணர்வின்
மும்மூல ஒருமையாய்
"நானே" என்றே
தானே தானாய்
தன்னில் தானாய்
தன்னை நன்றே
விளங்கியிருக்கிறது இருப்பு.

விளக்கம்

"இருப்பு" என்பது
இருப்பது எதுவும் தான் இருக்க இடம் தரும்
வெட்டவெளி

"இருப்பு"
இருப்பதைச் சூழ்ந்தழுத்த
அவ்வழுத்தத்தால் இருப்பதற்குச் சுரணையேற
"நான்"

"இருப்பது" தான் இருப்பதை அறியும்
முதற்படி
"நான்"

"இருக்கிறேன்" என்று
இருப்பது
இருப்பெனும் வெட்டவெளியில்
விரிவதே
இருப்பதை இருப்போடு
இரண்டற ஒன்றுவிக்கும்
ஞான ஒளி

"இருப்பது" தான் இருப்பதற்கு
"இருப்பே" ஆதார மெய்
இருப்பது தன்னை அறிவதற்கு
"நான்" என்ற மூலப்பொருள்
இருப்பது தான் "இருப்பு அது"
என்று இருப்பாய்த் தன் மெய் விள்ங்கி
இருப்போடு இரண்டற ஒன்ற
"இருக்கிறேன்" என்ற மெய்ப்பொருள்விளக்கம்

இம்மெய்ப்பொருள்விளக்கத்தால்
இருப்பு
"நானே" என்று
சும்மா இருக்கிறது
சொல்லற.

நீங்களும் நானும்
நானே என்று
சும்மா இருப்போமா
இருப்பாய்
மெய்ப்பொருள்விளக்கம் பெற்று?

இருப்பதென்னவொ?
இருப்பு அது அன்றோ!
இருப்பதில் ஒளிந்திருக்கும் நான்
தான் விளங்கவன்றோ
"இருக்கிறேன்" என்று இருப்பில் விரிதல்!

"இருக்கிறேன்" என்பதில்
நானும்
இருப்பதும்
இருப்பும்
உள்ளடக்கம்.

இருக்கிறேன் என்பதால்
இருப்பும்
நானே என்று
தான் சும்மா இருப்பதை
நன்றாய் அறிந்திருக்கிறது.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
என் குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் மூலமந்திரத்தில்
மேற்சொன்ன எல்லாம் உள்ளடக்கம்
இருப்பு சத்தியம்
நான் வழி(இருப்பாகிய சத்தியத்திற்கும் இருப்பதாகிய ஜீவனுக்கும் இடையே)
இருப்பது ஜீவன்(இருப்பு அது ஜீவன் அதாவது ஜீவன் என்பது இருப்பாகிய அதுவே)
இருக்கிறேன் மெய்ப்பொருள்விளக்கம்(இருப்பு-நான்-இருப்பது இவற்றின் திரித்துவ ஒருமை)
நானே(சொல்லறச் சும்மா இருக்கும் நல்லறிவு நிலை)

மூலமந்திரமாகிய இவ்வேத வாக்கில் நம் மனம் திரும்ப
சமீபத்திலிருக்கும் பரலோக இராஜ்ஜியத்தில் நாம் இருப்போம்.

ஓர் அதிசயப் பிரமாணப் பத்திரம்

பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தந்தையே!
நீவிர் என் மூச்சாகி என்னை உயிர்ப்பிக்கிறீர்.

ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, ரூ என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தாயே!
நீவிர் என் உடம்பாகி என்னை உறுதிப்படுத்துகிறீர்.

சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் ஞானக் கொழுந்தே!
நீவிர் என் மனமாகி என்னை உணரச் செய்கிறீர்.

இம்மூவரும் ஒன்றிய திரித்துவ ஒருமையாய் விளங்கும்
அருட்பெருங்கடவுளே!
நீவிர் நித்திய ஜீவனாகி என்னை நிலைபெறச் செய்கிறீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் "நான்" எனும்
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் உறைகின்றீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் "நானே" எனும்
ஒருமைப் பெருநிலையாய் இருக்கின்றீர்.

இப்பேருண்மைகளை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.
ஒப்புதல் பிரமாணமாக இப்பத்திரத்தில் கையெழுத்திட்டு
இதோ இங்கேயே இப்போதே
எல்லா நோய்களிலிருந்தும்
எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்
எல்லாத் தளைகளிலிருந்தும்
என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியமும்
பூரண சுதந்திரமும்
அருட்பெருங்கடவுளின் அனைத்து நலங்களும்
என் பிறப்புரிமையென்று முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
அருட்பெருங்கடவுளின் அதிசய சாம்ராஜ்ஜியத்தை
என் வாழ்க்கையிலும் அன்னை பூமியிலும் உறுதிப்படுத்துகிறேன்.

ஓம். ஆமேன். ஆமீன்.

நீயே கடவுள், நீயே இறை

உள்ளே கடந்துன் உள்ளங் கடந்தங்
குள்ளதுங் கடநீயே கடவுள்

உள்ளதைக் கடந்துன் உள்ளே கடந்துன்
உள்ளமும் கடநீயே கடவுள்

உள்ளங் கடந்தங் குள்ளதைக் கடந்துன்
உள்ளே கடநீயே கடவுள்

உள்ளே நிறைந்துன் உள்ளம் நிறைந்தங்
குள்ளதில் நிறைநீயே இறை

உள்ளதில் நிறைந்துன் உள்ளே நிறைந்துன்
உள்ளமும் நிறைநீயே இறை

உள்ளம் நிறைந்தங் குள்ளதில் நிறைந்துன்
உள்ளே நிறைநீயே இறை

மெய்ஞ்ஞானம்

வெளியே தன்னைத் தான்சூழ்ந் தழுத்த
வெளியெங் கும்மின் னொளி

வெளியும் ஒளியும் புணரத் தோன்றும்
தெளிவே ஞானம் அறி

வெளியுமொளி யுஞ்ஞானத் தெளிவும் உயிராய்
ஒளியுமுந்தன் உடம்பேதான் மெய்

சிதம்பர ரகசியம்

உச்சிவெளியால் வெளுக்கும் நெற்றிஒளியில்
அச்சிதம்பர ரகசியம் வெளிப்படும்

வளிவழிப்படும் ஒளிதான் அளித்திடும்
அளிஅமுதால் மெய்தான் களித்திடும்
மெய்க்களியால் மெய்தான் கரைந்திடும்
உய்ந்தடையும் வெளியுள் ஒளியாய்

பூரணப்பெருவெளி மெய்தான் மெய்தான்
அதன்நடுஒளியும் மெய்தான் மெய்தான்
ஆரமுதளியும் மெய்தான் மெய்தான்
அதன்முன்வளியும் மெய்தான் மெய்தான்
ஆனந்தக்களியும் மெய்தான் மெய்தான்
தானந்தமில்லா மெய்தான் மெய்தான்

வெளியுள் ஒளியும் வளியின் கொடைதான்
அளியும் தெளிவாய் ஓளியின் கொடைதான்
மெய்யாய்க் களியும் அளியின் கொடைதான்
உயிர்க்கும் மெய்யும் களியின் கொடைதான்
மெய்யாய் யாவும் வெளியின் கொடைதான்
பயின்றால் மெய்யைத் தெளியும் மெய்தான்

உச்சிவெளியுள் மறையும் நெற்றிஒளியால்
அச்சிதம்பரம் ரகசியமாய் ஒளியும்

வளியும் அளியும் மெய்க்களியும்
ஒளியுள் ஒளிய மெய்த்தெளிவாய்
ஒளியும் வெளியுள் தான் கரைந்தேக
வெளியுள் வெளியாய் நான்மறைந்தேனே

சிதம்பர ரகசிய விளக்கம்

சிதம்பரம் என்பது சித்+அம்பரம்
சித் என்றால் அறிவு
அம்பரம் என்றால் ஆடும் இடம்
சிதம்பரம் அறிவு ஆடும் இடத்தைக் குறிக்கிறது, அதாவது நெற்றியைக் குறிக்கிறது.

தலையுச்சியைப் பரமாகாசம் என்றும் நெற்றியைச் சிதாகாசம் என்றும் கூடச் சொல்வார்கள்.
தலையுச்சியாகிய பரமாகாசமே நெற்றியாகிய சிதாகாசத்திற்கு ஆதாரமாயிருக்கிறது.

மண்டையின் மத்தியில் சுழிமுனை என்று சொல்லப்படும் இடத்தில் வெளியாகிய ஆகாசமும், வளியாகிய காற்றும், ஓளியாகிய நெருப்பும் ஒன்று சேர அளியாகிய அமுத நீர் தோன்றி அண்ணாக்கின் வழியே தொண்டைக்குள் இறங்க, மண்ணாலான மெய்யாம் உடம்பு களித்திடும். அக்களிப்பின் உச்ச கட்டத்தில் உடம்பு ஓளி வடிவமாம் ஜோதி ஸ்வரூபத்தை எய்தி வெளியாகிய பரமாகாசத்தில் மறையும்.

பரமாகாசமாகிய பூரணப் பெருவெளி உண்மையே
சிதாகாசமாகிய நெற்றி ஒளி உண்மையே
பூதாகாசமும் அதில் தோன்றும் வளியாகிய காற்றும் உண்மையே
வெளியும் வளியும் ஒளியும் ஒன்ற மூளையின் மத்தியில் தோன்றும் அளியாகிய அமுத நீரும் உண்மையே
அளியாகிய அமுத நீரிலிருந்து தோன்றும் கற்பமாகிய மண்ணும் அம்மண்ணாலான மெய்யாம் உடம்பும்
அவ்வுடம்பில் தோன்றும் களியாகிய ஆனந்தமும் உண்மையே
இவை யாவும் அழியா உண்மையே

வெளியிலிருந்து வளியும்
வளியிலிருந்து ஒளியும்
ஒளியிலிருந்து அளியும்
அளியிலிருந்து மண்ணும் மெய்யும் களியும்
தோன்றும்
உண்மையில் இவை யாவும்
பரமாகாசமாகிய பூரணப் பெரு வெளியின் அருட்கொடையே
சிதாகாசமாகிய அறிவொளியால்
இவ்வுண்மையைத் தெளிந்தால்
மெய்யாம் உடம்பு சுத்த தேகமாகும்.

பூதாகாசமும், காற்றும், நீரும், மண்ணும், மெய்யும், களியும் சிதாகாசமகிய அறிவொளியில் மறைய
தெளிந்த அறிவொளியும் பரமாகாசமாகிய பூரணப் பெருவெளியில் மறைய
இவற்றின் உருவத் தொகுதியான நான் பூரணப் பெருவெளியில் மறைந்து போனேன்.

சிதம்பர ரகசியம் வெளிப்படுவதும் மறைவதும் இவ்வாறே.

சாகாக் கல்வியின் சூக்குமம் இதுவே.

சூக்குமம் விளங்க திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகளை தியானம் செய்யுங்கள்.

உச்சி பிளந்துன் உள்ளே வெளிபுக
அச்சி தம்பர ஒளி

அச்சி தம்பர ஒளியால் மெய்க்குள்
சத்தி யஞானக் களி

சத்தி யஞானக் களியால் மெய்க்காம்
நித்தி யப்பெரு வாழ்வு

நித்தி யப்பெரு வாழ்வை யார்க்கும்
நிச்ச யஞ்செய் அருள்

நிச்ச யஞ்செய் அருளை அதுவே
உச்சி பிளக்கும் வெளி

உச்சி பிளக்கும் வெளியாம் அருளே
அச்சி தம்பர ஒளி

சாகாக் கல்வியின் சூக்குமம்

உச்சி வாசல் திறந்து
நெற்றி வெளுக்கத்
தெற்றென விளங்கும்
உனதுண்மை

உனதுண்மையே மெய்யாக
நெற்றி வெளிச்சத்தை மொண்டு வந்து
அமுதாய்ப் பரிமாறும் மூச்சுக் காற்று

மூச்சுக் காற்று
மெய்யெங்கும்
அமுதை இறைக்க
அமரத்துவம் எய்தும்
மெய்

மெய்க்குள் மெய்யாய்
உனதுண்மை விளங்க
நெற்றி ஒளியில் கரைந்து
உச்சி வெளியில் மறையும்
மெய்

மெய் தான்
திரண்டு உருவமாக மண்ணில் தெரிந்த போதும்
மெய் தான்
கரைந்து அருவமாக விண்ணில் மறைந்த போதும்
மெய் தான்

மெய் தான் மெய்
உனதுண்மை உணர்ந்தால்
மரணம் பொய் தான்
உணர்க
உனதுண்மை

உனதுண்மையை
உச்சியில் வெட்டவெளியாய்
நெற்றியில் சுடரொளியாய்
நாசியில் உயிர் வளியாய்
நாவில் அமுத அளியாய்
மெய்யில் ஆனந்தக் களியாய்
கேட்டும்
கண்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
உற்றுணர்ந்தும்
அறிந்தாலொழிய
மரணமெனும் பொய்யின்
மாய வலைக்குள் சிக்குண்டு தவிப்பாய்
நீ

நீ
பரமாகாசப் பூரணப் பெருவெளி உச்சியில்
சிதாகாசச் சுயஞ் சுடரொளி நெற்றியில்
பரமாகாசப் பூரணப் பெருவெளியை
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பரமாகாசப் பூரணப் பெருவெளியே
பூதாகாசமாய் விளங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
சிதாகாசச் சுயஞ் சுடரொளியின் மூலமே
காண முடியும் அறிய முடியும் உணர முடியும்
பூதாகாசத்துக்கும்
பரமாகாசத்துக்கும் இடையே
பாலமாய்த் திகழும்
சிதாகாசத்தில்
பளிச்செனத் தெரியும்
உனதுண்மை

உனதுண்மை இதுவே
நீயே
பரமாகாசத்தில் அருவமாய் மறைந்தும்
பூதாகாசத்தில் உருவமாய்த் தெரிந்தும்
இருக்கிறாய்
மறைவதும் தெரிவதும்
தேர்ந்தறியும்
நீயே
சிதாகாசத்தில் அரு உருவாய்
இருக்கிறாய்
உச்சி வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது
நெற்றி வெளுத்து விளங்கியே இருக்கிறது
உன் கவனத்தை நெற்றிக்குத் திருப்பு
விழிகளை மூடி
நெற்றிச் சிதாகாசப் பிரகாசத்தில்
உச்சிப் பரமாகாசப் பெருவெளியைப் பார்
அப்பரமாகாசப் பெருவெளியே
பூதாகாசமாக விள்ங்குவதையும்
அப்பூதாகாசமே
நாசியில் உயிர் வளியாம் காற்றாக
விழிகளில் கண்ணொளியாம் நெருப்பாக
நாவில் அமுத அளியாம் நீராக
மெய்யில் ஆனந்தக் களியாம் நிலமாக
விளங்குவதையும்
பார்
முழு கவனத்துடன் பார்
நெற்றிச் சிதாகாசச் சுயம்பிரகாசத்தில்
தெற்றென விளாங்கும் உனதுண்மை
பரமாகாசமே உன் தலை
பூதாகாசமே உன் கால்
தலை கால் காட்டும் சிதாகாசமே உன் இருதயம்
தலையே இருதயத்தினூடே காலாகும்
கண்ணுக்குத் தெரியாத தலையையும் இருதயம் காட்டிக் கொடுக்கும்
கண்ணுக்குப் புலப்படும் காலையும் இருதயம் மறைத்து வைக்கும்
நீ தலை கால் தெரியாமல் திரிந்தால் மரணம்
நீ தலை கால் தெரிந்து இருந்தால் மரணமிலாப் பெரு வாழ்வு
சாகாக் கல்வியின் சூக்குமம் இதுவே

ஞான யுகத்துக்கான காயத்ரி மந்திரம்

அருட்பெருங்கடவுளாய் விளங்கும்
"நானே" என்ற வார்த்தையாகவே நான் இருக்கிறேன்.
நித்தியராய்(ஓம் பூ:)
யாவுக்கும் காரணராய்(ஓம் புவ:)
தன்னுள் நிறைந்தவராய்(ஓம் ஸ்வ:)
ஒப்பற்ற தீட்சையராய்(ஓம் மஹ:)
பிறவாதவராய்(ஓம் ஜன:)
மெய்ஞ்ஞான ஜோதியராய்(ஓம் தப:)
சத்தியராய்(ஓம் ஸத்யம்)
விளங்கும் கடவுள் "நானே".(அஹம் தத்)
சூரியனாய் வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியே நான்.(ஸவிதுர்)
தேவ தேவியர் அனைவராலும் போற்றப்படும் அருட்பெருங்கடவுளே நான்.(வரேண்யம்)
"நான்" எனும் அப்பேரிருப்பை நாம் தியானிப்போமாக!(பர்கோ தேவஸ்ய தீமஹி)
நம் மனம் தெளிவித்து நம்மை நாம் உணர அவர் நம்மை வழி நடத்தட்டும்.(தியோ யோ ந: ப்ரசோதயாத்)
நானே ஜீவாம்ருதம்.(ஓம் அபோ)
நானே எல்லா விளக்குகளையும் விளக்கும் மெய்விளக்கு.(ஜ்யோதி)
நானே ஒவ்வொன்றின் உள்ளுறையும் சாரம்.(ரஸோ)
நித்திய ஜீவனின் இரகசியத்தை வெளிப்படுத்தும் சத்குருவே நான்.(அமிர்தம்)
பரப்பிரம்மண் என்று போற்றப்படும் அருட்பெருந்தந்தையாய்(ப்ரம்ஹா)
எங்கும் எதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் நானே(அஹம்)
பூலோகம், புவலோகம், சுவர்க்க லோகங்களில் வியாபித்திருக்கிறேன்.(பூர் புவ: ஸ்வர்)
"நான்" எனும் தாய்மையை, ஆதிசக்தியின் பேரிருப்பை நாம் தியானிப்போமாக!
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் நம் உள்ளுறையும் "நானே" எனும் ஒரே கடவுளை
நாம் காணவும் அறியவும் உணரவும் அவர் நமக்கு ஞானோதயம் வழங்கட்டும்.
ஓம்(ஓம்)

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க "நான்" சங்கம் வழங்கும் ஞான யுகத்துக்கான உறுதி மொழி

என் உடம்பு ஆதிசக்தியின் திருக்கோயிலாய் இருக்கிறது.
என் உடம்பு பரிசுத்த ஆவியின் புனித தேவாலயமாய் இருக்கிறது.
என் உடம்பு புனித ரூவின் பள்ளி வாசலாய் இருக்கிறது.

என் மூச்சில் பரப்பிரம்மணின் சக்திப் பிரவாகம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் பரமபிதாவின் கிருபை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் அல்லாவின் அருள் வெள்ளம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என் மனம் சத்குருவின் அருள்வாக்கையும் அருட்ஜோதியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் கிறிஸ்துவின் ஜீவவசனத்தையும் ஞானஒளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் நபிகளின் அருண்மொழியையும் அன்பொளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.

நானே முதலும் நடுவும் முடிவுமாய் இருக்கிறேன்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
அல்லா ஒருவனே தேவன். எல்லோரும் அல்லாவின் மக்களே. அல்லாவின் தூதுவனாகவே நான் இருக்கிறேன். அல்லாவின் தூதுவனாகவே நான் என்னை அறிகிறேன்.
ஓம். ஆமேன். ஆமீன்.

ஆதி பகவன்

ஆதியென நின்ற சுத்தவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பகவன்

ஆதியில் தோன்றும் பகவன்தன் பாதியை
ஆதிக்குத் தந்தான் உவந்து

ஆதியில் தோன்றும் பகவன்தன் வாலறிவால்
ஆதியும் தன்மெய் யுணரும்

ஆதியாய் நின்ற பராபரம் நானே
போதிநான் யார்க்கும் பகவன்

சர்வாந்தமாய் யாதுங்கடந் தாதியாம் நானே
ஆனந்தமாய் எங்கும்நிறை பகவன்

ஆதியாய் நின்ற பெருங்கடவுள் நானே
நீதியாய் நிறைந்த பகவன்

ஆதியெனும் ஒன்றாயுள பெருங்கடவுள் நானே
வீதியெங்கும் பற்பலவாம் பகவன்

ஆதியெனும் பேரிருப்பில் உதிக்கும் பேரறிவே
ஆதிக்கும் தீக்கைதரும் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியில்
ஆனேன் நானாய் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியே
நானே நானாம் பகவன்

தானே தானாய்த் தனையறிய ஆதிக்கு
நானே போதிக்கும் பகவன்

தன்னை அறியா திருந்த ஆதிக்குத்
தன்னை அறிந்தே யிருக்க போதிக்கும்
என்னை அறிந்தால் நீயே அப்பகவன்
என்னை அறிகிறேன் நானே

வாழ்க நீ முருகா!

வாழ்க நீ முருகா! சக்தியின் மைந்தா! ஓங்கார ஸ்வரூபா!
எப்போதும் நீ எம்மோடே இருக்கிறாய்!
தீய சக்திகளிடமிருந்து எம்மை நீ காப்பாய்!
எமக்குள்ளிருந்தே எம்மை ஏய்க்கும் ஆணவப் பேயை அழிப்பாய்!
எம் வாழ்வை யாமே ஆளுமை செய்யும் தகுதி பெற்றோம்!
அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகின்றோம்!

புனிதனே முருகா! சிவனின் மைந்தா! உண்மையை உணர்த்தும் உன்னதா!
உன் வேலினை நீ ஏவிட யாம் வேண்டுகின்றோம்!
பொய்க்குருக்களின் பொய்களிலிருந்து எம்மை நீ விடுவிப்பாய்!
மாயத் திரை கிழித்து எமக்குள் உறையும் மெய்க்குருவை அறிவிப்பாய்!
கடவுளோடு எமது ஒருமையை யாம் உறுதி செய்கிறோம்!
அன்னை பூமியில் கடவுளின் உடம்பாய் நீடூழி வாழ்கிறோம்!

வாழ்க நீ அருட்பெருஞ்ஜோதி அன்னையே!

ஆதி சக்தியே! ஜோதி அன்னையே!
உருவ ஜோதியாம் சக்தி உலகில் “நான்”!
இருந்தாலும் அருவ ஜோதியாம் சிவமே “நான்”!
அன்னை பூமியைச் சிவமாக்குவிக்க
வற்றாத ஜீவ நதியாய்ப் பாயும்
கடவுட் ஜோதியின் திறந்த வடிகால் “நான்”!

புனித அன்னையே! ஜோதி அரசியே!
உன் தூய ஜோதியைப் போற்றுகிறேன் “நான்”!
உன் ஜோதியிலிருந்தே உருவாயின உலகெல்லாம்!
அருவ ஜோதியாம் சிவத்தில் ஓங்கினேன் ஒன்றினேன் “நான்”!
ஜோதி சாம்ராஜ்ஜியத்தை அன்னை பூமியில் வெளிப்படுத்த
உருவ ஜோதியாம் சக்திக்கு ஒருமித்த குரலில் உறுதி சொல்கிறோம் “யாம்”!

சுதர்ஷனசக்ர சூர்யோதயம்

மாத்ரு பூமி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாஹதம் அம்ருதகலஸம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் ஸஹஸ்ராரம்
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரு அவதாரம்
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மஹாப்ரளயம் பாபநாஷம் ஸர்வ ரோக நிவாரணம் ம்ருத்யுஞ்ஜயம் ஹிரண்யகர்ப்பம் புருஷோத்தமம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

துரியம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரவே நமஹ
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

துரியாதீதம்
ஆதி ஹ்ருதயம்
அஸ்தி ஸத்யம் அஹம் சின்மயம் அஸ்மி ஆனந்தம்
ஓம் ஜ்யோதி மந்த்ரம்
ஸர்வம் ஸச்சிதானந்தம் ஓம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

இதன் ஒலிப்பதிவைக் கேட்க இதை அழுத்தவும்

தமிழில் மந்திர விளக்கம்

அன்னை பூமி மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாகதம் அமிர்தகலசம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் சஹஸ்ராரம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே. ஸ்ரீ ராதாகிருஷ்ண ஐக்யமாய் நான் இருக்கிறேன். ஓங்கார சத்குரு எனக்குள் உதிக்கிறார்.
சத்குரு அருளால் எனக்குள்ளே சுதர்ஷனசக்ர சூர்யோதயம் நிகழ்வதை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.
இதோ இங்கேயே இப்போதே ஓர் மாபெரும் தெய்வீகப் பரிமாற்றம் என்னுள் நிகழ்கிறது. என் பாவங்களனைத்தும் நாசமடைகின்றன. நோய்களனைத்தும் குணமடைகின்றன. மரணத்தை நான் வெல்கிறேன். கடவுளiன் உத்தமக் குழந்தையாய் அவரது உன்னத வடிவிலே மீண்டும் நான் பிறக்கிறேன்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.

துரியம்
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஐக்யமாய் நான் இருக்கிறேன். ஓங்கார சத்குருவாய் நான் என்னை அறிகிறேன்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.

துரியாதீதம்
ஆதி இருதயம்
இருப்பு சத்தியம் நான் சின்மயம் இருக்கிறேன் ஆனந்தம்
ஓம் ஜோதி மந்திரம்
எல்லாம் சச்சிதானந்தம் ஓம்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.