Wednesday, April 09, 2008

மருட்டும் இரவில்


மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்


பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்


கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்


ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது


சிதையில் எரிகிறது மரணம்.
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு


பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்


அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்


மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு


அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்


வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்


அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் ஒன்றாய்
நானும்


மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்


தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவ்ர்களின் “இந்த மெல்லிய இரவில் என்ற கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை இது.

No comments: