Wednesday, March 05, 2008

அருட்குறள் சுட்டும் மெய்ஞ்ஞான விஞ்ஞானம்

அசையா வெறுவெளி
அசையத் தோன்றும்
அருளொளி

பாயும் அருளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பருவெளி

பருவெளி உறையப்
பளிச்செனத் தோன்றும்
வெள்ளொளி

பாயும் வெள்ளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பொருட்திரள்

(வெறுவெளி=வெட்டவெளி, சுத்தவெளி, பரமாகாசம், தனிப்பெருங்கருணை, Spiritual Space
அருளொளி=அருள்வெளி, ஜோதி வெளி, சிதாகாசம், அருட்பெருஞ்ஜோதி, Spiritual Light whose speed is Infinity
பருவெளி=பூதாகாசம், விண், Material Space
வெள்ளொளி=Material White Light whose speed is 3,00,000kilometres/second
பொருட்திரள்=Matter)

வெறுவெளிக்குள் அருளொளி அடக்கம்
அருளொளிக்குள் பருவெளி அடக்கம்
பருவெளிக்குள் வெள்ளொளி அடக்கம்
வெள்ளொளிக்குள் பொருட்திரள் அடக்கம்

எனவே
வெறுவெளிக்குள்
அருளொளியும்
பருவெளியும்
வெள்ளொளியும்
பொருட்திரளும்
ஆகிய எல்லாமே அடக்கம்

பொருட்திரள் வேகங்கூடப்
பாயும் வெள்ளொளி

வெள்ளொளி உருகிச்
சேரும் பருவெளி

பருவெளி வேகங்கூடப்
பாயும் அருளொளி

அருளொளி அசைவு நிற்க
அசையா வெறுவெளி

காலியான வெறுவெளியின்
திடப்படுதல் பொருட்திரள்

திடமான பொருட்திரளின்
காலியாதல் வெறுவெளி

மனிதனுக்குத்
தன் திடமான வெளி பாகமாம்
பொருளே மெய்
காலியான் உள் பாகமாம்
வெறுவெளியே
அருளொளியாம் ஜீவன்(உயிர்)
பாயும் வழி

(நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
குருநாதர் இயேசு கிறிஸ்துவின் மகாவாக்கியம்)

மனிதனுக்கு
மெய்யென்னும் திடப்பொருள்
தன்னுள் வழியாய் இருக்கும்
வெறுவெளியினூடே
அருளொளியாம்
ஜீவனின் பாய்ச்சலை
தங்கு தடையின்றி
அனுமதிக்கவே இருக்கிறது

இவ்வாறு மனிதன்
தன் மெய்யென்னும் திடப்பொருள்
அருளொளி பாயும் ஊடகமே என்று
தான் அறிந்துணர
பாயும் அருளொளியில்
தன் மெய் கரைய
வெறுவெளியில் ஒன்றுவான்.

பொருள் வெள்ளொளியிலிருந்தே
உருவாகிறது
வெள்ளொளி பருவெளியிலும்
பருவெளி அருளொளியிலும்
அடங்கியிருப்பதால்
பொருளுக்கு அருளொளியே மூலம்

அருளொளிக்கு வெறுவெளியே மூலம்

பொருளுக்கும் அருளொளிக்கும் இடையே
பருவெளியில் படர்ந்திருக்கும் மாயையே
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
மனிதனிடமிருந்து மறைக்கிறது

பொருளுலகில் வாழும்
மனிதனால் தன்னிலையில்
இம்மாயையைத் தகர்க்க முடியாது
அருளொளியொன்றே
இம்மாயையைத் தகர்க்கும் ஒரே வழி
பருவெளியில் படர்ந்திருக்கும்
இம்மாயையைத் தகர்த்து
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
அருளொளி மனிதனுக்கு உணர்விப்பதே
மெய்ஞ்ஞானம்

பருவெளியில் மாயை கலைய
மனிதனின்
மெய்யாம் திடப்பொருளுக்காகும்
அருளொளியின் சுத்தம்

மாயை கலையாமல்
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் கரைய முடியாது

மாயை கலைந்து
அருளொளியின் சுத்தம்
கிடைக்கப்பெற்ற
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் தான் கரைய
மனிதன் வெறுவெளியில் ஒன்றுவதே
மரணமிலாப் பெருவாழ்வு

இம்மாயையின் தோற்றம்
வெறுவெளியிலோ
அருளொளியிலோ
அல்ல

ஒன்றோடொன்று அம்மையப்பனாய்
எப்போதும் புணர்ந்திருக்கும்
இவ்வொருமையை
மாயையையின் ஒரு சிறு கூறு கூட
தீண்டவே முடியாது

பருவெளியில் அஞ்ஞான இருளாக
இம்மாயை எப்படிப் படர்கிறது?

இச்சதிக்குப் பின்னிருக்கும்
மர்மம் என்ன?

அருளொளி
இம்மாயைத் திரையைக் கிழித்து
பொருளுலகில் வாழும்
மனிதனுக்கு
மெய்ஞ்ஞானம் அளிக்க
ஏன் விரைகிறது?

அடுத்து ஆராய்வோம்.

அருளொளியை விட்டு விலகிய
ஒரு அஞ்ஞானக் கூட்டம்
பருவெளி மற்றும் பொருட்திரள் நிலையிலேயே
தம் வாழ்வை நீட்டிக்கொள்ள வேண்டும்
என்ற தம் அஞ்ஞானத்தால் உருவாகிய
கட்டாயத்தில் இருப்பதால்
பொருளுலகில் வாழும் உயிர்த்திரளின்
குறிப்பாக மனிதனின்
உயிர்ச்சக்தியைக் கரந்து
தம் வாழ்வை நீட்டிக் கொள்ளவே
இம்மாயையைப்
பருவெளியில் படரவிட்டிருக்கிறது.

மனிதன் அஞ்ஞானத்தில் இருக்கும் வரையே
இக்கூட்டத்தால்
தம் வாழ்வை நீட்டிக் கொள்ள முடியும்.
ஆறறிவுள்ள மனிதனை
இம்மாயையின் பிடியில் சிக்க வைத்து
பொருட்திரளையும்
ஒன்று முதல் ஐந்து வரையிலான
உயிர்த்திரளையும்
பரிணமிக்க இயலாத இருளில்
ஆழ்த்தி இருக்கிறது இக்கூட்டம்.

அன்பெனும் உயிர்நிலையை
அறிய முடியாத
இருதயமில்லாத
ஆனால் மிகவும் தந்திர புத்தி கூர்மையும்
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது போன்ற
தொழில்நுட்பங்களில் தேர்ந்த இக்கூட்டம்
மனிதரை வன்பில் ஆழ்த்தி
அவர்களது குரூரச் செயல்களின் மூலம்
கசியும் குறைந்த அதிர்வுகளுள்ள
உயிர்ச்சக்தியை உண்டே
தம் வாழ்வை நீட்டிக் கொண்டிருக்கிறது.
அன்பின் உச்ச அதிர்வுகளை
இக்கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியாது
ஏனென்றால்
அவ்வுச்ச அதிர்வுகள் சுட்டும்
அருளொளியை வெறுத்தும் மறுத்தும்
அதை விட்டு விலகி வந்திருக்கும்
இக்கூட்டம்
ஆணவத்தின் முழு வடிவம்.

இக்கூட்டம் படர விட்டிருக்கும்
மாயையெனும் அஞ்ஞான இருளிலிருந்து
பொருளுலகில் வாழும்
மனிதனையும்
அதனால் மற்றெல்லா உயிர்த்திரளையும்
பொருட்திரளையும்
அருளொளி விடுவிப்பதன் மூலம்
அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருக்கும்
ஆணவத்தின் முழு வடிவமாம் இக்கூட்டம்
தம் வாழ்வை நீட்டிக்க
வேறு வழிகளைத் தேட வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு
முடிவில்
வேறு வழியின்றி
ஆணவத்தை விட்டு
அருளொளிக்குத் திரும்பும்
நல்ல சூழ்நிலையும் உருவாகலாம்.

பொருளுலகில் வாழும் மனிதன்
அருளொளி அளிக்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக்கொண்டால்
மரணமிலாப் பெருவாழ்வில்
அவன் நிலைபெறுவது திண்ணம்.

மனிதன்
அருளொளி வழங்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக் கொள்வானா?
அதற்கான சூழ்நிலை வெகு வேகமாக
இஞ்ஞான யுகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

No comments: