Thursday, June 26, 2008

இருதயங் கனிந்தால்...

இருதயங் கனிந்தால்
இதயம் மெய்க்குள்
கற்கண்டாய் இனிக்கும்
மூளையின் மடல்களில்
ஊறும் அமுதால்
வரண்ட நா
தித்திப்பால் நனையும்
சத்திப் பால்
தொண்டைக்குள் இறங்க
தாகமெல்லாந் தணியும்
உடற்றும்
வயிற்றுப் பசி தீரும்
கொடுங்காமக் கனல் உருக
ஆருயிர்
அருங்காதல் வழிப்படும்
அருட்கனலின் கதகதப்பில்
மெய்யெலாங் குளிரும்
பொய்ச் சாக்காடு தொலைந்து
மெய் மெய்யாய்த் துலங்கும்

இருதயங் கனியுமா?
வள்ளலே!
நீரே கதியென்று
உம்மைச் சரண் புகுந்தேன்
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல் நீர்
என் இருதயங் கனிய வைக்குந்
தந்திரஞ் செய்ய அறியீரோ!
வெள்ளை மன வள்ளல் நீர்
கள்ள மனக் குள்ளன் எனைக்
கடைத்தேற்ற அறியீரோ!
"இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!
வள்ளலே!
அன்பின் விதை தூவி
வன்பின் பாலையாம் என்னை
அருட்சோலையாக்கும்
உம் திருச்சித்தம்
சிரமேற்கொண்டு
காத்திருக்கிறேன்

இருதயங் கனியுங் கணம்
வாய்க்காமலா போகும்!
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல்
உம் திருச்சித்தம்
நிறைவேறாமலா போகும்!
சவமாய்க் குழிக்குள் வீழுமுன்
என் அவமெலாம் நீக்கி
நற்றவ நெறியில்
என்னை நிறுத்தி
என் இருதயங் கனிய வைக்க
வள்ளல் உம் ஒருவரால் தான் முடியும்!
எனவே
நீரே கதியென்று
உம்மையே சரண் புகுந்தேன்
உம் வெள்ளங்கியுள்
என் கள்ள மனம் அடங்கக்
காத்திருக்கிறேன்
ஐயனே!
என்னை ஆட்கொண்டருள்வீர்
இக்கணமே!
சவக்குழி என்னை விழுங்கு முன்னே
அருட்கனலாம் நீர்
என்னை விழுங்குவிரே!
என் இருதயங் கனிய வைப்பீரே!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!// Interesting.